கட்டாக்காலி மாடுகளால் விபத்துக்கள் அதிகரிப்பு

மட்டக்களப்பு மாவட்டத்தின் மண்முனை தென் எருவில்பற்று பிரதேச சபைக்குட்பட்ட பிரதேசத்தில் கட்டாக்காலி மாடுகளின் தொல்லையின் காரணமாக பல விபத்துக்கள் அண்மைக்காலமாக ஏற்பட்டு வருகின்றன. களுவாஞ்சிகுடி பொலிஸ் பிரிவின் களுதாவளை பிரதான நெடுஞ்சாலையில் இவ்வாரத்தில் மட்டும் கட்டாக்காலி மாடுகள் முச்சக்கரவண்டி மீது பாய்ந்ததனால் இரு விபத்துச் சம்பவங்கள் ஏற்பட்டதுடன் மூவர் காயமடைந்தனர். அத்துடன் முச்சக்கர வண்டிகள் இரண்டும் பலத்த சேதத்திற்குள்ளாகின.
கட்டாக்காலி மாடுகளின் விடயம் சம்பந்தமாக கடந்த 16ஆம் திகதி களுவாஞ்சிகுடி பிரதேச செயலகத்தில் இடம்பெற்ற பிரதேச அபிவிருத்தி ஒருங்கிணைப்பு குழுக் கூட்டத்தில் பலரின் கவனமும் திரும்பி, பிரதேச சபை தலைவரிடம் கேள்விக் கணைகளும் தொடுக்கப்பட்டன. களுவாஞ்சிகுடி பொலிஸ்நிலைய பொறுப்பதிகாரி பி.ஆர்.மானமடு இதற்குரிய முழுப்பொறுப்பையும் பிரதேச சபையின் தலைவர் ஏற்க வேண்டுமென சுட்டிக் காட்டினார். இதற்குப் பதிலளித்த பிரதேச சபையின் தலைவர் இதைக் கட்டுப்படுத்த முடியாதுள்ளதாகவும் ஏற்கனவே சட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் சுட்டிக்காட்டினார்.

மின்குமிழ் இல்லாத வீதியில் கட்டாக்காலி மாடுகளின் தொல்லை காரணமாக போக்குவரத்து செய்வோர் எப்போது விபத்து ஏற்படும் எனும் நிலையில் உள்ளதாக சுட்டிக்காட்டப்படுகிறது.