ரிஷபம்: கிருத்திகை 2-ஆம் பாதம் முதல், ரோகிணி, மிருகசீரிஷம் 2-ஆம் பாதம் முடிய.விட்டுக் கொடுக்கும் தன்மையும் பிறருக்கு உதவும் நற்குணமும் கொண்ட ரிஷப ராசி நேயர்களே!
புத்தாண்டு ஆரம்பத்தில் உங்கள் ராசிக்கு யோக காரகனாகிய சனி வலுத்திருப்பதாலும், சுக்கிரன் பாக்கிய ஸ்தானத்தில் இருப்பதாலும் நலம்பல பெறுவீர்கள். உழைப்புக்கும் திறமைக்கும் உரிய பயன் கிடைக்கப் பெறுவீர்கள். பொது நலப்பணியாளர்களுக்கு வரவேற்பு அதிகரிக்கும். தொழிலாளர்கள் தங்கள் கோரிக்கைகளில் ஒன்றிரண்டு ஈடேறப் பெறுவார்கள். புதிய தொழில் தொடங்க வாய்ப்பு உருவாகும். நண்பர்களும் உறவினர்களும் உதவிக்கரம் நீட்டுவார்கள்.
விவசாயிகளுக்கு மகசூல் கூடும். பண்ணை நிலம் வைத்திருப்பவர்களுக்கு ஆதாயம் பெருகும். நாற்கால் பிராணிகளால் லாபம் கிடைக்கும். பயணம் பயன்படும். தொலைதூரத் தொடர்புடன் தொழில் புரிபவர்கள் வளர்ச்சி காண்பார்கள். தாய் வழி உறவினர்களால், குறிப்பாக மாமன் வகையினரால் அதிகம் நலம் உண்டாகும். சினிமா, நாடகம், நாட்டியம், சங்கீதம் போன்ற கலைத்துறைகளைச் சேர்ந்தவர்கள் சுபிட்சம் காண்பார்கள். புதிய ஆடை, அணிமணிகள், அலங்காரப் பொருட்கள் ஆகியவை சேரும். வெளிநாட்டுத் தொடர்பு பயன்படும். நீதிபதிகள், வழக்கறிஞர்கள், சட்டத் துறைகளைச் சேர்ந்தவர்கள், அரசியல்வாதிகள், ஆகியோருக்கெல்லாம் செல்வாக்கும் மதிப்பும் உயரும்.
17-5-2012 முதல் குரு ஜன்ம ராசிக்கு இடம் மாறுவதும் சிறப்பாகாது. அலைச்சல் கூடும். இடமாற்றம் உண்டாகும். செல்வ நிலையில் அபிவிருத்தி காண அதிகம் உழைக்க வேண்டிவரும். குருவின் பார்வை 5, 7, 9-ஆம் இடங்களுக்குக் கிடைப்பதால் மக்களாலும் வாழ்க்கைத்துணைவராலும், தந்தையாலும் அனுகூலம் உண்டாகும். மூத்த சகோதர, சகோதரிகளின் அன்புக்குப் பாத்திரமாவீர்கள். சொத்துக்கள் சேரும். ஜன்ம ராசியில் கேது இருப்பதால் கோபத்தைக் குறைத்துக் கொள்வது அவசியமாகும். முன்பின் தெரியாதவர்களிடம் அதிகம் நெருக்கம் வேண்டாம். கலைஞர்களுக்கு நல்ல வாய்ப்புகள் கூடிவரும். அரசாங்கத்தார் மூலம் எதிர்பார்த்திருந்த காரியங்கள் நிறைவேறும்.
சொத்துக்களைப் பராமரித்துக் கொள்வீர்கள். புதிய துறைகளில் முதலீடு செய்யச் சந்தர்ப்பம் கூடிவரும். வெளிநாட்டுப் பயணம் பயன் தரும். மருத்துவர்கள் நற்பெயர் பெறுவார்கள். அக்டோபரில் ராசிக்கு 7-ஆமிடத்தில் செவ்வாயும் ராகுவும் ஒன்று கூடுவதால் கணவன் மனைவியிடையே சலசலப்புக்கள் அதிகரிக்கும் என்றாலும் குரு பார்வை இருப்பதால் சமாளிப்பீர்கள்.
நவம்பர் மாதம் மிகச் சிறப்பாக அமையும். டிசம்பர் முன்பகுதியில் சுப காரியங்கள் நிகழ வாய்ப்புக் கூடிவரும். சர்ப்ப சாந்தி செய்யவும். லட்சுமி அஷ்டோத்திரம், ஸ்லோகங்கள், ஸ்ரீசூக்தம் படிப்பது நல்லது.
அதிர்ஷ்ட எண்கள்: 5, 6, 8.
திசை: வடக்கு, தென்கிழக்கு, மேற்கு.
தெய்வம்: மகாலட்சுமி.
--








.jpg)



