தனுசு 2012 புத்தாண்டு ராசிபலன்

தனுசு

மூலம், பூராடம், உத்திராடம் 1-ஆம் பாதம் முடிய.

நல்லொழுக்கமும் நற்குணமும் நிறைந்த, எப்போதுமே பிஸியாக இருக்கும் தனுசு ராசி நேயர்களே!

புத்தாண்டு தொடக்கத்தில் குரு 5-லும் சனி 11-லும் உலவுவது விசேடமாகும். சூரியன், செவ்வாய், குரு ஆகியோர் ஒருவருக்கொருவர் திரிகோணமாக இருப்பதும் குறிப்பிடத்தக்கது. இதனால் செல்வ வளம் பெருகும். மன உற்சாகம் கூடும்.

முக்கியஸ்தர்கள் உங்களுக்கு உதவுவார்கள். மகப்பேறும், மக்களால் பாக்கியமும் உண்டாகும். புத்திசாலித்தனம் பளிச்சிடும். நிர்வாகத்திறமை வெளிப்படும். பங்கு மார்க்கெட், மற்றும் அதிர்ஷ்ட இனங்களால் ஆதாயம் கிடைக்கும்.


அரசியல்வாதிகளுக்கும் அரசுப்பணியாளர்களுக்கும் முக்கியப் பதவிகளும் பொறுப்புக்களும் கிடைக்கும். தெய்வ தரிசனமும் சாது தரிசனமும் பெறுவீர்கள். குல தெய்வப் பிரார்த்தனைகளை நிறைவேற்றிக் கொள்வீர்கள். மந்திர சித்தி சிலருக்குக் கைகூடும். வியாபாரம் பெருகும். உத்தியோகஸ்தர்களும் தொழிலாளர்களும் செழிப்பான சூழ்நிலையைக் காண்பார்கள்.

அரசு கெளரவம், பட்டம், விருது ஆகியவை கிடைக்கும். நிலம், மனை, வீடு, வாகனம் சேரும். சொத்துக்களால் வருமானமும் பெறுவீர்கள். குடும்பத்தில் குதூகலம் கூடும். பல வழிகளில் ஆதாயம் வந்து சேரும். மகன் அல்லது மகளுக்கு வெளிநாட்டில் வேலை கிடைக்கும். வாழ்க்கைத்துணைவரால் அதிர்ஷ்ட வாய்ப்புக்கள் உண்டாகும்.
உடன்பிறந்தவர்கள் பக்கபலமாக இருப்பார்கள்.

17-5-2012 முதல் குரு 6-ஆமிடம் மாறுவது சிறப்பாகாது. உடல்நலம் பாதிக்கும். சுக பங்கம் உண்டாகும். பொருளாதாரச் சிக்கல் ஏற்படும். யாருக்கும் ஜாமீன் கொடுக்கலாகாது. தொழில் அதிபர்கள் எச்சரிக்கையுடன் செயல்பட்டால் சரிவுக்கு ஆளாகாமல் தப்பலாம். மக்கள் நலனில் கவனம் செலுத்த வேண்டிவரும். உத்தியோகஸ்தர்கள் பொறுப்புணர்ந்து செயல்படுவது அவசியமாகும். எதிரிகள் இருப்பார்கள் என்பதால் யாரிடத்திலும் வெளிப்படையாகப் பழகலாகாது. சனி பலம் இருப்பதால் உழைப்பு வீண்போகாது. குரு 6-ல் இருந்தாலும் 10, 12, 2-ஆம் இடங்களைப் பார்ப்பதால் செய்தொழிலில் சீரான வளர்ச்சியைக் காணலாம். வீண் செலவுகள் குறையும். மாமூலான பணிகளில் முன்னேற்றம் தடைப்படாமல் இருக்கும். அக்டோபரில் சுப காரியங்கள் நிகழச் சந்தர்ப்பம் கூடிவரும்.

செவ்வாயும் ராகுவும் 12-ல் ஒன்று கூடுவதால் எதிர்பாராத செலவுகளும் இழப்புகளும் ஏற்படும். கைப்பொருளைப் பத்திரப்படுத்தி வைத்துக் கொள்வது நல்லது. பயணத்தின்போதும் இயந்திரங்களில் பணிபுரியும்போதும் எச்சரிக்கை தேவை. மக்கள் நலனில் கவனம் செலுத்த வேண்டிவரும். உடன்பிறந்தவர்களால் சில பிரச்னைகள் ஏற்படும். என்றாலும் குரு பார்வையால் அதிகம் சங்கடமேற்படாமல் காக்கப்படுவீர்கள். வியாபாரம், கணிதம், எழுத்து, பத்திரிகை போன்ற துறைகளைச் சேர்ந்தவர்களுக்கு நவம்பரில் செழிப்பு கூடும். மதிப்புக்கும் அந்தஸ்துக்கும் குறைவிராது. டிசம்பர் மாதப் பின்பகுதியில் அரசாங்கத்தாரால் அனுகூலம் உண்டாகும். புனிதப் பணிகளில் ஈடுபாடு கூடும். தந்தையால் அனுகூலம் உண்டாகும். புதிய முயற்சிகள் கைகூடும். சுப காரியங்கள் நிகழுவதற்கான அறிகுறிகள் தெரியவரும். மேற்கல்வி பயிலும் மாணவர்கள் வளர்ச்சி காண்பார்கள்.

வருடப் பின்பகுதியில் குருப் பிரீதி செய்வது அவசியமாகும். செவ்வாய்க்கிழமைகளில் துர்கையை வழிபடவும்.

அதிர்ஷ்ட எண்கள்: 1, 3, 5, 6, 8.

திசை: கிழக்கு, வடக்கு, தென்கிழக்கு, வடகிழக்கு, மேற்கு.

தெய்வம்: சிவன், முருகன்.
--