கடகம் 2012 புத்தாண்டு ராசிபலன்

கடகம்:

புனர்பூசம் 4-ஆம் பாதம் முதல், பூசம், ஆயில்யம் முடிய.

பொது நலப்பணிகளில் ஈடுபாடுள்ள, கற்பனை ஆற்றல் மிகுந்த கடக ராசி நேயர்களே!

புத்தாண்டு ஆரம்பத்தில் முக்கியமான கிரகங்களான குரு, சனி, செவ்வாய் ஆகியோரது சஞ்சாரம் சிறப்பாக இல்லை என்றாலும் குருவானவர் செவ்வாய், சனி, சூரியன் ஆகியோரைப் பார்ப்பதால் மோசமான நிலை என்று ஏதும் ஏற்பட்டுவிடாது. பண நடமாட்டம் சீராகவே இருக்கும். குடும்பத்தில் சலசலப்புகள் குறையும். எதிரிகள் அடங்கியே இருப்பார்கள். அலைச்சல் அதிகமானாலும் அதற்கான பயனும் கிடைக்கவே செய்யும். 5-ல் ராகுவும் புதனும் இருப்பதால் மக்களால் மனக்குழப்பம் உண்டாகும்.


கெட்ட பழக்கவழக்கங்களில் ஈடுபடலாகாது. தொழில் அதிபர்கள் அகலக்கால் வைக்கலாகாது. உத்தியோகஸ்தர்கள் தங்கள் கடமைகளைச் சரிவர ஆற்றிவருவது நல்லது. அரசியல், அரசாங்கம் சம்பந்தப்பட்ட துறைகளைச் சேர்ந்தவர்கள் வளர்ச்சி காண்பார்கள். 7-ஆம் வீட்டோன் சனி தன் வீட்டுக்கு 10-ல் பலமுடன் இருப்பதால் வாழ்க்கைத்துணைவருக்கு நல்ல வேலை கிடைக்கும். உங்களுக்குத் தொழில் ரீதியாகச் சில பிரச்னைகள் ஏற்படும். 11-ல் கேது இருப்பதால் ஆன்மிக, ஜோதிட, அறநிலையப் பணிகளில் ஈடுபாடு உண்டாகும்.
த்யானம்,யோகா ஆகிய துறைகளில் நாட்டம் கூடும்.

17-5-2012 முதல் குரு உங்கள் ராசிக்கு 11-ஆமிடம் மாறுவதாலும் கேதுவுடன் சேருவதாலும் செல்வ நிலையில் விசேடமான வளர்ச்சியைக் காண்பீர்கள். நீண்ட நாளைய எண்ணங்கள் இப்போது ஈடேறும். திருமணம், சீமந்தம், வளைகாப்பு, காது குத்தல் போன்ற சுப காரியங்கள் நிகழும். மனதுக்கினிய சம்பவங்கள் வாழ்க்கையில் இடம் பெறும். பணம் கொடுக்கல்-வாங்கல் லாபம் தரும். எதிர்பாராத திடீர் அதிர்ஷ்ட வாய்ப்புக்களையும் பெறுவீர்கள். மகப்பேறு பாக்கியம் இல்லாதவர்கள் இப்போது அதற்கான வாய்ப்பைப் பெறுவார்கள்.

திருமணம் ஆனவர்களுக்கு இல்லறம் சிறக்கும். எதிரிகளாக இருந்தவர்களும் கூட இப்போது மனம் திருந்தி, உங்களுக்கு நலம் புரிவார்கள். வழக்கில் வெற்றி கிட்டும். தொலைதூரத் தொடர்பு பயன்படும். மூத்த சகோதர, சகோதரிகளால் நலம் கூடும். மறுமணத்துக்காக முயற்சி செய்பவர்களுக்கு வருடப் பின்பகுதியில் அதற்கான வாய்ப்புக் கூடிவரும். பொன் நிறப்பொருட்கள் லாபம் தரும். தெய்வ தரிசனம், சாது தரிசனம் ஆகியவை கிட்டும். 5-ல் ராகு இருந்தாலும் குரு பார்வையில் இருப்பதால் சங்கடமிராது. தகவல் தொடர்பு இனங்கள் லாபம் தரும். கணவன் மனைவி உறவு நிலை சிறக்கும். கூட்டாளிகள் உங்களுக்கு ஆதரவாக இருப்பார்கள்.

அர்த்தாஷ்டம சனிக்குப் பிரீதி, பரிகாரங்களைச் செய்து கொள்ளவும்.

அதிர்ஷ்ட எண்கள்: 1, 3, 7, 9. எண் 2-ம் சில நேரங்களில் அதிர்ஷ்டம் தரும்.

திசை: கிழக்கு, வடகிழக்கு, வடமேற்கு, தெற்கு.

தெய்வம்: முருகன், பராசக்தி, தட்சிணாமூர்த்தி.--