கிழக்கில் ஒரு மேதின நிகழ்வைக்கூட செய்ய முடியாத கட்சிகள் கிழக்கு மக்களுக்காக எதனை செய்யப்போகின்றார்கள் - கிழக்கு முதலமைச்சர் கேள்வி

 (கிருஸ்ணா)

கிழக்கு மாகாணத்திலே ஒரு மேதின நிகழ்வைக்கூட செய்ய முடியாத அரசியல் கட்சிகள் கிழக்கு மக்களுக்காக எதனைத்தான் செய்யப்போகின்றார்கள் என்று கிழக்கு மாகாண முதலமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன் நேற்று இடம் பெற்ற தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் மேதின நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றும்போது குறிப்பிட்டார்.


தொடர்ந்தும் உரையாற்றுகையில்,

இன்று கிழக்கிலே இருக்கின்ற தொழிலாளர்கள் தமக்கு கிடைக்க வேண்டிய உரிமைகள் சலுகைகளைப் பெற்று நிம்மதியாக வாழ்ந்து வருகின்றனர். கடந்த காலங்களில் எமது தொழிலாளர்கள் பல பிரச்சினைகளை எதிர்நோக்கி வந்தனர். ஒவ்வொரு துறை சார்ந்த தொழிலாளர்களும் பிரச்சினைகளுக்கு முகங்கொடுத்து வந்தனர்.

அவர்களின் பிரச்சினைகள் தீர்க்கப்பட்டிருக்கின்றன. தொடர்ந்தும் தொழிலாளர்களின் பிரச்சினைகள் தொடர்பில் நாம் அக்கறையோடு செயற்பட்டு வருகின்றோம். இவ்வளவு காலமும் தொழிலாளர்களின் வாக்குகளைப் பெற்று அரசியல் நடாத்தும் அரசியல்வாதிகள் தொழிலாளர்களின் பிரச்சினைகள் தொடர்பில் சிந்திக்கவுமில்லை எந்த நடவடிக்கைகளும் எடுக்கவுமில்லை.

கிழக்கிலே தேர்தல் காலங்களில் மக்கள் மத்தியில் எத்தனையோ அரசியல் கட்சிகள் மக்களிடம் வாக்குக்கேட்டு வருவார்கள்;தேர்தல் காலங்களில் மட்டுமே அவர்களுக்கு தொழிலாளர்களின் ஞாபகம் வரும். தங்களுக்கு வாக்குப்போட்ட தொழிலாளர்களின் தினத்திலே ஒரு நிகழ்வினை ஏற்பாடு செய்ய முடியாத அரசியல்வாதிகள் தொழிலாளர்களுக்காகவும் மக்களுக்காகவும் எதனைச் செய்யப்போகின்றனர்.

நாம் எமது கட்சியினை உருவாக்கி ஐந்து வருடங்கள் ஆகும் இவ்வேளையில் தொழிலாளர்கள் தொடர்பில் அதிக அக்கறை செலுத்தி வருகின்றோம். அதன் வெளிப்பாடாகத்தான் பிரமாண்டமான முறையிலே இந்த மேதின நிகழ்வையும் ஏற்பாடு செய்திருக்கின்றோம்.

இன்று கூட்டமைப்பினர் பிரச்சாரம் செய்கின்றனர். பிள்ளையான் அரசாங்கத்தோடு இருக்கின்றான். ஜனாதிபதியுடன் இருக்கின்றான் என்றெல்லாம். மக்கள் சில விடயங்களை உணர்ந்து கொள்ள வேண்டும். யுத்தத்தால் அழிவடைந்த எமது பிரதேசங்களை நாம் கட்டியெழுப்பவேண்டி இருக்கின்றது. அரசாங்கத்தோடு இணைந்து நாம் செயற்படுகின்றபோதுதான் நாம் அபிவிருத்திகளை செய்ய முடியும்.

கூட்டமைப்பினர்போல் எதிர்க் கட்சியில் இருந்தால் அரசாங்கத்தின் சலுகைகளைப் பெற முடியுமே தவிர எமது பிரதேசத்தை அபிவிருத்தி செய்ய முடியாது. மக்களுக்கும் எதுவும் செய்ய முடியாது. அரசாங்கத்துடன் இணைந்து செயற்படுவதனால்தான் இன்று கிழக்கு மாகாணத்தை துரிதமாக அபிவிருத்தி செய்ய முடிகின்றது. ஜனாதிபதி அவர்களும் கிழக்கு மாகாணம் அபிவிருத்தி செய்யப்பட வேண்டும் என்பதில் அக்கறையுடன் செயற்படுகின்றார். எமது இந்த மேதின நிகழ்விற்கு ஜனாதிபதி அவர்கள் வாழ்த்துச் செய்தியினைக்கூட அனுப்பியிருக்கின்றார்.

நாம் அரசாங்கத்துடன் இணைந்து அபிவிருத்தியினை மேற்கொண்டு வரும் அதேவேளை எமது அதிகாரங்கள் உரிமைகளைப் பெறுவது தொடர்பில் அரசாங்கத்துடன் பல நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றோம். நாம் எமது பிரதேசத்தை அபிவிருத்தி செய்வதற்காகவும் எமது அதிகாரங்கள் உரிமைகளை பெறுவதற்காகவும் அரசாங்கத்துடன் இணைந்து செயற்படும்போது பிள்ளையான் அரசாங்கத்துடன் இருக்கின்றான். ஜனாதிபதியோடு இருக்கின்றான் என்றெல்லாம் சொல்கின்றனர்.

ஆனால் கூட்டமைப்பினரும் கூட்டமைப்பு தலைமைகளும் அரசாங்கத்துடன் பேசலாம் ஜனாதிபதியுடன் பேசலாம். ஒரு கிழக்கு மாகாணத்தான் ஜனாதிபதியுடன் பேசக்கூடாது ஆனால் அவர்கள் பேசலாம் எங்கே நியாயம் இருக்கின்றது.

தமிழ் தேசியக் கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர்கள் நாங்கள் அரசாங்கத்துடன் இருக்கின்றோம் என்று பிரச்சாரம் செய்கின்றனர். அவர்கள் அரசின் சலுகைகளைப் பெறவில்லையா? வேலை வாய்ப்புக்களை பெறவில்லையா? தாங்கள் எல்லாவற்றையும் பெற்றுக்கொண்டு நாம் அரசாங்கத்தோடு இருக்கின்றோம் என்று மக்களுக்கு உணர்ச்சி வார்த்தகைளைக்கூறி அரசியல் நடாத்த நினைக்கின்றனர். அரசாங்கத்துடன் நாம் இணைந்து செயற்படுகின்றபோதுதான் அபிவிருத்தியினை நாம் முன்னெடுக்க முடியும் என்பதனை மக்கள் உணர்ந்து கொள்ள வேண்டும்.

மட்டக்களப்பிலே இருக்கின்ற பாராளுமன்ற உறுப்பினர்களான செல்வராஜாவிற்கோ யோகேஸ்வரனுக்கோ அரியநேந்திரனுக்கோ தங்கள் கட்சியில் என்ன நடக்கின்றது என்பது தெரியாது. கட்சி தொடர்பான விடயங்களில் கட்சி இவர்களை இணைத்துக் கொள்வதுமில்லை. அரசுடனான சந்திப்பாக இருக்கட்டும் வெளிநாட்டுப் பயணங்களாக இருக்கட்டும் எதற்கும் மட்டக்களப்பு மாவட்ட கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர்கள் இணைத்துக் கொள்ளப்படுவதில்லை. ஏன் அண்மையில்கூட இந்திய பாராளுமன்றக் குழுவினர் இலங்கை வந்தபோது கூட்டமைப்பினர் இந்திய நாடாளுமன்றக் குழுவினரை சந்தித்தனர். அச் சந்திப்பிலும் மட்டக்களப்பு மாவட்ட கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர்கள் இணைத்துக் கொள்ளப்படவில்லை.

அது ஒரு புறமிருக்க இந்திய பாராளுமன்ற குழுவினர் மட்டக்களப்புக்கு வருகைதந்து எம்மைச்சந்தித்து மட்டக்களப்பின் சில இட்களுக்கு சென்று பார்வையிட்டனர். இதனை மட்டக்களப்பு கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர்கள் ஆயுதக்குழுவை சந்தித்தாகவும் திருகோணமலை சம்ப+ருக்கு அவர்களை அழைத்துச் செல்லவில்லை என்றும் தமக்கு அழைப்பு விடுக்கவில்லை என்றும் விமர்சித்திருந்தனர்.

ஆனால் நாம் அனைவருக்கும் அழைப்பு விடுத்திருந்தோம் அவர்கள் வரவில்லை. தங்கள் கட்சியே தங்களை அழைக்கவில்லை அதைப்பற்றி கட்சி தலைமைப்பீடத்திடம் இவர்கள் எதுவும் கேட்கவில்லை. திருகோணமலையை பிரதிநிதித்துவப் படுத்தும் சம்பந்தன் அவர்கள் இந்திய பாராளுமன்றக் குழுவினரை திருகோணமலைக்கு அழைத்துச் சென்றிருக்கலாம்தானே?

கடந்த 01.01.2012 அன்று சம்பந்தன் அவர்களுக்கு ஒரு கடிதம் அனுப்பியிருந்தேன் வடக்கு கிழக்கு இணைப்பு தொடர்பில் பேசுவோம் என்று. இதுவரை எந்தவிதமான பதிலும் இல்லை. எமது தேசிய மானாட்டு பிரகடனம் தொடர்பாக முன்கூட்டியே சில தீர்மானங்களை எடுப்பதற்காகவே பேச்சுவார்த்தை நடாத்த கடிதம் அனுப்பினேன்.

தேசிய மாநாட்டிலே வடக்கு கிழக்கு இணைக்கக்கூடாது என்று பிரகடனம் செய்திருக்கின்றோம். சம்பந்தன் எங்களோடு பேச்சுவார்த்தகை;கு வந்திருந்தால் சுமுகமான முறையிலே பேச்சுவார்த்தi நடந்திருந்தால் வடக்கு கிழக்கு இணைப்பது தொடர்பாக நாமும் சிந்தித்து நல்ல தீர்மானங்களை எடுத்திருக்கலாம்.

இது ஒரு புறமிருக்க அண்மையில் செல்வராஜா அவர்கள் ஓந்தாச்சிமடத்தில் ஒரு நிகழ்வில் பேசினார். முதலமைச்சர் அவர்களே உங்களுடைய கடித்திற்கு ஒரு வாரத்துக்குள் தலைவர் அவர்கள் உங்களுக்கு பதில் அனுப்புவார் என்று பேசினார் ஆனால் அவர் பேசி மூன்று மாதங்கள் கடந்து விட்டன இன்னும் பதில் வரவில்லை. தனது கட்சிக்குள் என்ன நடக்கின்றது என்பதே தெரியாத உப தலைவராக இருக்கின்றார் செல்வராஜா அவர்கள்.

கிழக்கு மக்களால் மதிக்கப்படுகின்ற முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் சொல்லின் செல்வர் என்று மக்களால் அழைக்கப்படுகின்ற இராஜதுரை அவர்கள் தந்தை செல்வாவின் நினைவு தினத்திற்கு அழைக்கப்பட்டிருந்தார். குறித்த நிகழ்வில் இராஜதுரை அவர்கள் உரையாற்ற எழுந்து சென்றபொது சிவாஜிலிங்கம் அவர்கள் கறுப்புக்கொடி காட்டி மட்டக்களப்பான் துரோகி என்றும் சக்கிலியன் என்றும் தகாத வார்த்தைகளால் பேசி அடிக்கும் நிலைக்குச் சென்றிருந்தார்.

சிவாஜிலிங்கம் அவர்கள் மூன்று நாட்களுக்கு முன்னரே அறிக்கை விட்டிருந்தார் இராஜதுரை வருகை தந்தால் கருப்புக்கொடி காட்டுவதாகவும் எதிர்ப்பை தெரிவிப்பதாகவும். இவ்வாறெல்லாம் நடக்கும் என்பது ஏற்பாட்டுக் குழுவினருக்கு தெரியும். சிவாஜிலிங்கம் அவர்களை குறித்த நிகழ்விற்கு வராமல் செய்திருக்க முடியும் ஏற்பாட்டுக் குழுவினருக்கு. மட்டக்களப்பைச் சேர்ந்த ஒருவரை அவமானப்படுத்த வேண்டும் என்பதே அவர்களின் எண்ணம். உண்மையில் சிவாஜிலிங்கம் அவர்கள்தான் மிகப்பெரும் துரோகி பல ஆயுதக் குழுக்களை வைத்திருந்து மண்டையில் போடும் கலாசாரத்தை உருவாக்கியவர்கள் அவர்கள்தான்.

நாங்கள் அன்று வடக்கிலே ஆயுதம் ஏந்தி இரத்தம் சிந்தி உயிர்களை பறிகொடுத்து உங்களை பாதுகாத்தோமே அதற்காக நீங்கள் எங்களுக்கு துரோகி பட்டமும் சக்கிலியன் பட்டமும் தரத்தான் வேண்டும். சக்கிலியன் எனும் உயர்ந்த சுத்திகரிப்புத் தொழிலை நாம் உயர்வாக மதிக்கின்றோம் அதற்காகத்தான் இன்று இந்த மேதின நிகழ்வுகளை செய்கின்றோம். உங்களைப் பொன்று சாதி வெறி பிடித்தவர்கள் அல்ல நாங்கள்.

நாங்கள் துரோகிகளா? அல்லது தங்களோடு இருந்து உண்டு உறவாடி உங்களை பாதுகாத்து  உங்களுடைய வடக்கையும் காவல்காத்து பாதுகாத்து சரித்திர வெற்றிகள் பெற்றுத் தந்த நாங்கள் நிராயுதபாணிகளாக நின்றபோது சுட்டுக் கொண்றொழித்த நீங்கள் துரோகிகளா?

எங்களுக்கும் நம்பிக்கை இருக்கின்றது கிழக்கு மக்களுக்காகவே நாம் செயற்படுவோம் கிழக்கின் தனித்துவத்திற்காக குரல்கொடுப்போம் மக்களுக்காகவே மர்ணிப்போம். மக்கள் உண்மைகளையும் யதார்த்தங்களையும் உணர்ந்து செயற்பட வேண்டும் என்றும் குறிப்பிட்டார்.