வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த வெல்லாவெளிப் பிராமிச் சாசனங்கள் ! கட்டாயம் தெரிந்துகொள்ளவேண்டியவை

By - S.K சிவகணேசன் -
விரிவுரையாளர், கிழக்கு பல்கலைக்கழகம்
 மட்டகளப்பு தேசத்துக்கு சிறப்பு சேர்ப்பது அதன் நடுவில் நீண்டு கிடக்கின்ற மட்டக்களப்பு வாவி. அந்த வாவி ஏறத்தாழ 73கிலோ மீற்றர் தூரம் பரந்து கிடக்கின்றது. இந்த வாவியை எல்லையாக கொண்டுதான் மட்டக்களப்பு தேசம் 'எழுவான் கரை' (கிழக்கு) 'படுவான் கரை' (மேற்கு) எனப் பிரிக்கப்பட்டடுள்ளது.


 கிழக்கு கரையோரம் நீண்டு கிடக்கும் பரப்பு 'எழுவான் கரைப் பிரதேசம்' ஆகும். இப்பிரதேசம் கடலும் கடல் சார்ந்த அம்சங்களைக் கொண்டது. இன்று நகரப்பாங்கான பண்புடன் கூடிய சனத்தொகை அடர்த்தியுள்ள பிரதேசமாகக் காணப்படுகின்றது. வாவியின் மேற்கில் அமைந்திருப்பது படுவான் கரைப் பிரதேசம். முல்லை நிலப் பாங்குடைய காடும் காடு சார்ந்த பிரதேசமும், மருதநிலப் பாங்குடைய வயலும் வயல் சார்ந்த பிரதேசமும் காணப்படுகின்றன. மத்திய காலத்தின் பின்னர் தான் எழுவான் கரை நகர மயமாக்கத்துடன் கூடிய தளமாகக் மாற்றப்பட்டது. இதற்கு முன்னர் படுவான் கரை பிரதேசத்தில் தான் அரசிருக்கையுடன் கூடிய சமூகத் தளங்கள் காணப்பட்டன என்பது குறிப்பிடத்தக்கது. இதனை உறுதிப்படுத்தும் சான்றுகளாக வெல்லாவெளி – தளவாய் என்ற இடத்திலுள்ள பிராமி பாறைச் சாசனங்கள் காணப்படுகின்றன. மட்டகளப்பு நகரில் இருந்து தெற்கு நோக்கி பிரதான வீதியூடாக ஏறத்தாழ 26 கிலோ மீற்றர் தூரம் சென்றால் களுவாஞ்சிக்குடி பட்டிணத்தை அடையலாம். அங்கிருந்து பட்டிருப்பு பாலத்தை கடந்து ஏறத்தாழ 18 கிலோமீற்றர் தூரம் சென்றால் வெல்லாவெளி கிராமத்தை அடைய முடியும். அங்கிருந்து வடமேற்கு திசை நோக்கி ஏறத்தாழ 10 கிலோமீற்றர் தூரம் காடும்
காடு சார்ந்த பிரதேசத்தின் ஊடாக பிராயாணித்தால் 'தளவாய்' என்றழைக்கப்படும் பிரதேசத்தை அடைய முடியும். இந்த தளவாய்ப் பிரதேசத்தில் ஆங்காங்கு சிறு சிறு பாறைகள் உடன் கூடிய காடும் வயலும் காணப்படுகின்றன. இங்கு தான் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த பிராமிச் சாசனங்கள் காணப்படுகின்றது. கல்வெட்டு காணப்படும் பாறையின் மேற்கு வீதிக்கு மறு கரையில் 'ஆயிரம் கால் ஆலமரம்' (ஆயிரம் விழுது ஆலமரம்) என்றழைக்கப்படும் பெரும் ஆலம் விருட்சம் ஒன்று காணப்படுகின்றது. இந்த ஆலமரம் பலநூறு வருடங்கள் பழமையுடையது என்பது குறிப்பிடத்தக்கது. தொடர்ச்சியாக விழுதுகள் நிலத்தில் படிந்து அவை விருத்தி பெற்றுக் கொண்டிருக்கின்றன. இந்த ஆலமரத்தின் கீழே நாக வழிபாடு, வைரவர் வழிபாடு என்பன நீண்ட காலமாக நடாத்தப்பட்டு வருகின்றன. இதன் பொருட்டு பெரும் தொகையான மக்கள் அங்கு வெள்ளிக் கிழமைகளில் கூடுகின்றனர். பக்தியோடு வழிபாடு இயற்றுபவர்களுக்கு வைரவர் அருள் பாலிக்கின்றார். இந்த ஆல மரத்தின் கிழக்கே சிறு சிறு பறைகளைக் கொண்ட பிரதேசம் ஒன்று காணப்படுகின்றது. இந்த பகுதி ஏறத்தாழ 500 மீற்றர் அகலமும் 1000 மீற்றர் நீளமும் கொண்டது. புராதன குடியிருப்பு தளம் என்பதனை பார்த்த மாத்திரத்தில் அறிந்து கொள்ள முடிகின்றது. இங்கு காணப்படும் பாறைகளில் தான் குறித்த பிராமிச் சாசனங்கள் காணப்படுகின்றன. இப் பிரதேச வாசிகள் இந்த பாறைகளில் காணப்படும் சாசனங்கள் பற்றி பல வருடங்களுக்கு முன்பே அறிந்திருந்தனர். ஆனால் அதன் வரலாற்று முக்கியத்துவத்தை அவர்கள் உணர்ந்திருக்க வில்லை. அதனால், அது தொடர்பில் அவர்கள் ஆர்வம் காட்டியிருக்கவுமில்லை. மேலும் கடந்த 30 வருடங்களுக்கு மேலாக வட கிழக்கில் நிலவிய அசாதாரண சூழ்நிலை காரணமாக, மட்டக்களப்பு தேசத்தின் தொல்லியல் எச்சங்கள் பற்றிய ஆய்வுகள் தொடர்பில் கவனம்
செலுத்துவதில், அறிவியல் துறை சார்ந்த புத்தி ஜீவிகள் தவறி இருந்தனர்
என்பதனையும் சுட்டி காட்ட வேண்டியுள்ளது. தமது பட்டப்பின் படிப்பு மற்றும் பதவி உயர்வு, போன்ற சுய தேவைகளுக்காக அவ்வப்போது சிலர் கரிசனை காட்டியிருந்தாலும் அவை போதுமானதாக அமைந்திருக்கவில்லை. இந்த சாசனங்களைத் தற்செயலாக தான் கண்டு பிடித்ததாகக் பேராசிரியர் சி. பத்மநாதன் அண்மையில் குறிப்பிட்டுள்ளமை சுட்டிக் காட்டத்தக்கது. (தினக்குரல் - 'சாளரம்' 19.02.2012) வட கிழக்கில் ஆயுதப்போராட்டம் தலைதூக்கி, படையினரின் அடக்கு முறைக்குள் மட்டக்களப்பு பிரதேசம் தள்ளப்பட்டிருந்த காலப்பகுதியில், தம்மைப் பாதுகாத்துக் கொள்ள, ஓடி ஒழிந்து கொண்டிருக்காது, மக்களோடு மக்களாய், மக்களின் துயரங்களில் பங்கெடுத்திருந்த எம்மவர்களில் சில வரலாற்று ஆர்வலர்கள், சொந்த செலவில் கடும் முயற்சி செய்து, இது போன்ற சான்றாதாரங்களை ஆய்வு செய்து ஆவணப்படுத்த துணிந்திருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது. அவர்கள் பாராட்டத்தக்கவர்கள். 13 எழுத்துக்களைக் கொண்ட, இந்த பிராமிச் சாசனம் - 'பருமக நாவிக ஷமதய லெணே' என்ற வாசகத்தை கொண்டுள்ளது. இந்த சாசனத்தின் வாசகத்தை 'பருமக என்ற பட்டத்திற்குரிய கப்பல் தலைவன் ஷமதய என்பவன் கொடுத்த குகை' எனப் பொருள் கொள்ளலாம் என வரலாற்றறிஞர்கள் சுட்டி காட்டியுள்ளனர். 'பருமக' என்ற பதத்;தைக் கொண்ட சாசனங்கள் இலங்கையின் பல இடங்களில் கிடைத்துள்ளன. இதன் தமிழ் வடிவம் 'பருமகன் அல்லது பெருமகன்' எனப் பொருள் கொள்ளபடுவதாக 'தொல்லியல் நோக்கில் இலங்கைத் தமிழர்' என்ற நூலில் பேராசிரியர் ப. புஸ்பரத்தினம் குறிப்பிட்டுள்ளார். (பக். 13, 14) மேலும் பருமக என்பவனின் சமூக நிலை, அமைச்சன், படைத்தளபதி, வரிவசூலிப்பவன், வணிகன், அரச தூதுவன் எனப் பொருள் கொள்ளப்படும் எனவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. பருமகன், பெருமகன், பருமகள் என்ற தமிழ் சொற்களின் பிராகிருத வடிவமே 'பருமக' என்பதும் குறிப்பிடத்தக்கது.



இலங்கையில் கண்டு பிடிக்கப்பட்ட  அனேக பிராமிச் சாசனங்கள் பிராகிருத மொழிக் கலப்புடையன.  மேலும் தமிழ் மொழிச் சொற்கள் பிராகிருத மொழியின் இலக்கண வரம்பிற்கு ஏற்ப பிராமிச் சாசனங்களில் பொறிக்கப் பட்டிருப்பது பொதுவான தொரு விடயமாகும். இந்த இயல்புகள் வெல்லாவெளிச் சாசனத்திலும் காணப்படுகின்றன.  'பருமக' என்ற சொல்லைக் கொண்ட பல நூற்றுக் கணக்கான பிராமிச்   சாசனங்கள் எமது நாட்டில் கண்டு பிடிக்கப் பட்டுள்ளன.
கி.மு. முதலாம் நூற்றாண்டுக்கு முன்னர், இந்த பிரதேசத்தில் தமிழ் மொழியையும்; அல்லது வேறு மொழிகளையும்; பேசியோர் வாழ்ந்துள்ளனர். அவர்கள் மத்தியில் பௌத்த சமயப் பரவல் காரணமாக பிராகிருத மொழியும் பரவியிருக்கலாம். அதனால், அவர்கள் இந்தச் சாசனங்களைப் பிராகிருத மொழியில் பொறித்திருக்கலாம். இந்த சாசனங்களில் தமிழ் பிராமியின் வரிவடிவச் செல்வாக்கு காணப்படுவது சிறப்பானது. எனவே, கி.மு. 2ஆம் நூற்றாண்டு காலப்பகுதியில் தமிழ் மொழியைப் பேசியோர் இங்கு வாழ்துள்ளதை இந்த சாசனங்கள் வெளிப்படுத்துகின்றன.
இலங்கை வாழ் தமிழர்களின் வரலாற்று இருப்பு தொடர்பிலான முக்கிய ஆதாரங்களாக வெல்லாவெளி பிராமிச் சாசனங்கள் விளங்குகின்றன என்பதில் தவறில்லை. இந்த சாசனங்கள் 2200 வருடங்கள் (கி.மு. 2ஆம் நூற்றாண்டு) பழமையானவை என்பதும் குறிப்பிடத்தக்கது. இச் சாசனத்தின் கீழே மேலும் ஒரு சாசனம் காணப்படுகின்றது. எழுத்துருக்கள் தெளிவில்லை.
அது மட்டுமல்ல இந்த பிராமிச் சாசனங்கள் காணப்படும் மலையின் மேல் பகுதி படமெடுத்த நாக பாம்பின் 'ஆ' என்ற வாயின் தோற்றத்தை வெளிப்படுத்தும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளது. இப் பிரதேசத்தில் மேலும் பல குகைகள் காணப்படுகின்றன. அவை நேர்த்தியாக செப்பனிடப்பட்டுள்ளன என்பதும் குறிப்பிடத்தக்கது.
இந்த பாறையின் வலப்பக்கமாக உள்ள மற்றொரு பாறைக் குன்றின் மேற்பரப்பில் இரண்டு சாசனங்கள் காணப்படுகின்றன. அவை  சிதைவடைந்துள்ளன.



பாறையின் மேற்பரப்பில் சிதைவடைந்த நிலையில் சில பிராமி எழுத்துக்கள் தென்படுகின்றன. பாறை விரிவடைந்ததால் எழுத்துருக்கள் சிதைவடைந்துள்ளன என்பது குறிப்பிடத்தக்கது. இப்பிரதேசத்தில்  தொடர்ச்சியான ஆய்வுகள் மேற்கொள்ளப்பட வேண்டும். இதன் மூலம் மேலும் பல சான்றுகள் வெளிக் கொணரப்படலாம்.!
நாங்கள், இந்த பிராமிச் சாசனங்களைப் ஆவணப்படுத்த குறித்த தளத்திற்கு சென்றிருந்தோம். அப்போது அங்கு வந்த சில பிரதேச வாசிகள் 'புதையல் கிளப்ப வந்துள்ளீர்களா?' என எங்களைக் கேட்டனர். நாங்கள் இந்த பிரதேசத்தை சேர்ந்தவர்கள், அதுவல்ல எங்கள் நோக்கம் என விளக்கமளித்தோம். அதனைத் தொடர்ந்து அவர்கள் எங்களுக்கு ஒத்துழைப்பு வழங்கினர்.
மூன்றாம் நான்காம் சாசனங்கள் காணப்படும் பாறைக் குகையினுள்ளே ஏறத்தாழ 2'ஒ4' பரப்புக் ; கொண்ட ஆளமான குழி ஒன்று காணப்பட்டது. அந்த குழியினுள்ளே ஏதோ பொருட்கள் எடுக்கப்பட்டிருப்பதற்கான இடைவெளி காணப்படுகின்றது. எனவே குழியினுள்ளே மறைத்து வைக்கப்பட்டிருந்த பொக்கிசங்கள் புதையல் கிண்டுவோரினால் எடுத்துச் செல்லப்பட்டுள்ளன என்பதனை புரிந்து கொள்ள முடிந்தது.
மேலும் ஒரு விடயத்தை சுட்டி காட்ட வேண்டியுள்ளது. இந்த வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த பிராமிச் சாசனங்கள் காணப்படுகின்ற பாறைகளின் பின்புறம், பெரும் பரப்புடைய ஒரு பாறைத் தொடருடன் கூடிய சிறிய குன்றுகள் காணப்படுகின்றன. கருங்கல்லைப் பெற்றுக் கொள்ளும் நோக்கில் அந்த பாறைத் தொடர் வெடி வைத்து நாளாந்தம் உடைக்கப்பட்டு கருங்கற்கள் ஏற்றிச் செல்லப்படுகின்றன. வரலாற்று முக்கியத்தவமுடைய சாசனங்கள் காணப்படும் பாறைகளும் எதிர்காலத்தில் உடைக்கப்படலாம். இது உடனடியாகத் தடுத்து நிறுத்தப்பட்டு பாதுகாக்கப்பட வேண்டும். இது தொடர்பில் மட்டக்களப்பு அரசாங்க அதிபர் கவனம் செலுத்தி வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த தளமாக அதனை பாதுகாக்க நடவடிக்கை எடுக்கவேண்டும் எனக் கேட்டுக் கொள்கின்றேன்.


மட்டகளப்பு தேசத்தில், மண்ணோடு மண்ணாக புதையுண்டு மறைந்து கிடக்கும் சாசனங்கள், கட்டிடங்கள், சிற்பங்கள், ஏடுகள் போன்ற புராதன தொல்லியல் எச்சங்களை ஆவணப் படுத்த வேண்டிய வரலாற்றுக் கடமை நம் அனைவருக்கும் உண்டு. எனவே, இத்தகய சாhன்றாதாரங்களைப் பற்றி தகவல்களை மேல்வரும் தொலைபேசி இலக்கத்திற்கோ அல்லது மின்னஞ்சல் முகவரிக்கோ வழங்குமாறு கோட்டுக் கொள்கின்றேன். இதன் மூலம் குறித்த வரலாற்று சான்றுகளை ஆவணப்படுத்தி, எதிர்கால சந்ததிற்கு வழங்கமுடியும். இது எமது கடமையும் பொறுப்பாகும். தொடர்புகளுக்கு
077-1790685/0756580482  e-mail – shivahaneshan @ gmail.com.