கிழக்கு பல்கலைக்கழத்தில் 5 புதிய கட்டடத்தொகுதிகளை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச திறந்துவைக்கும் நிகழ்வு

(சித்தாண்டி நித்தி) வந்தாறுமூலை கிழக்கு பல்கலைக்கழகத்தில் 555 மில்லியன் ரூபா செலவில் நவீன வசதிகளுடன் கூடிய புதிதாக அமைக்கப்பட்ட நூழைவாயில் மற்றும் நான்கு பாரிய கட்டடத்தொகுதிகளை இன்று (19.04.2014) ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச சுபவேளையில் நாடாவெட்டி திறந்துவைத்தார்.

கிழக்கு பல்கலைக்கழக துணைவேந்தர் கலாநிதி கிட்ணன் கோபிந்தராஜா தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் உயர்கல்வி அமைச்சர் எஸ்.பி.திசாநாயக்கா மற்றும் உற்பத்தி ஊக்குவிப்பு அமைச்சர் பசீர் சேகுதாவூத், மீள்குடியேற்ற பிரதி அமைச்சர் விநாயகமூர்த்தி முரளிதரன், பொருளாதார பிரதி அமைச்சர் எம்.எல்.ஏ.எம்.ஹஸ்புல்லா, கிழக்கு மாகாண முதலமைச்சர் நஜித்.மஜித் மற்றும் அரசியல்வாதிகளும் அதிதிகளாக கலந்துகொண்டனர். அத்துடன் பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் தலைவி பேராசிரியை திருமதி.சானிகா.ஹிரும்புரெகம, அமைச்சின் அதிகாரிகள் கிழக்கு பல்கலைக்கழக பீடாதிபதிகள் விரிவுரையாளர்கள் மற்றும் உத்தியோகத்தர்களும் கலந்துகொண்டனர். 

இந்த அபிவிருத்தித்திட்டங்களில் 7 மில்லியன் செலவில் அமைக்கப்பட்ட புதிய நுழைவாயில், 230 மில்லியன் செலவில் அமைக்கப்பட்ட வர்த்தக முகாமைத்துவ பீட கட்டடத் தொகுதி, 121 மில்லியன் செலவில் அமைக்கப்பட்ட கலை கலாசார பீட கட்டடத் தொகுதி, 171 மில்லியன் செலவில் அமைக்கப்பட்ட பிரதான நூலக கட்டடத் தொகுதி, 25 மில்லியன் செலவில் அமைக்கப்பட்ட உடல் வலுவூட்டல் உள்ளக விளையாட்டரங்கு என்பன அடங்குகின்றன.

கடந்த காலங்களை விட தற்போழுது கிழக்கு பல்கலைக்கழகத்தின் அனைத்து பகுதிகளும் நவீன மயப்படுத்தப்பட்டு பாரிய அபிவிருத்தி கண்டுவருவதும் குறிப்பிடத்தக்கது.