கன்டர் ரக வாகனம் துவிச்சக்கர வண்டி மீது மோதியதில் ஒருவர் பலி

(சித்தாண்டி நித்தி) மட்டக்களப்பு மாவட்டத்தின் வாகரை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கதிரவெளியில் இன்று காலை கன்டர் ரக வாகனம் துவிச்சக்கர வண்டி மீது மோதியதில் துவச்சக்கர வண்டியில் வந்தவர் ஸ்தலத்திலேயே உயிரிந்துள்ளார்.

இன்று வியாழக்கிழமை காலை 6.00மணியளவில் திருகோணமலை - மட்டக்களப்பு பிரதான வீதியில் கதிரவெளி, பால்சேனை பாடசாலைக்கு அருகில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது. இந்த விபத்தில் காளிகோயில் வீதி கதிரவெளியை சேர்ந்த ஐந்து பிள்ளைகளின் தந்தையான செல்வம் புலேந்திரன் (44வயது) என்பவரே உயிரிழந்துள்ளதாக வாகரை பொலிஸார் தெரிவித்தனர்.

மீன் வியாபாரியான இவர் கடந்த கால யுத்த சூழ்நிலையின்போது நிலக்கண்ணிவெடியில் ஒரு காலின் விரல்களை இழந்துள்ளார். இவர் இன்று காலை மீன் எடுப்பதற்காக சென்றுகொண்டிருந்தபோது வன்னியில் இருந்து வாழைக்காய் கொண்டுவந்த லொறி மோதியுள்ளதுடன் சுமார் 300 மீற்றர் தூரத்துக்கு இவர் இழுத்துச்செல்லப்பட்டுள்ளார்.

ஸ்தலத்திலேயே இவர் உயிரிழந்துள்ளதுடன் ஸ்தலத்துக்கு விரைந்த பொலிஸார் சடலத்தினை மீட்டு வாழைச்சேனை வைத்தியசாலைக்கு கொண்டுசென்றுள்ளனர் இது தொடர்பில் கன்டர் சாரதி கைதுசெய்யப்பட்டுள்ளதுடன் வாகனமும் தடுத்துவைக்கப்பட்டுள்ளதாக வாகரை பொலிஸார் தெரிவித்தனர்.

இது தொடர்பான விசாரணையை வாகரை பொலிஸார் மேற்கொண்டுவருகின்றனர்.