கோரளைப்பற்று பிரதேச செயலகத்தின் ஏற்பாட்டில் நடைபெற்ற வாகரைப் பிரதேச இளைஞர் மாநாட்டு நிகழ்வு

(சித்தாண்டி நித்தி) பசுமையான வாழ்வை நோக்கி என்ற தொனிப்பொருளிலான வாகரைப் பிரதேச இளைஞர் மாநாடு கோரளைப்பற்று பிரதேச செயலகத்தின் ஏற்பாட்டில் பிரதேச செயலாளர் செல்வி .எஸ்.ராகுலநாயகி தலைமையில் நடைபெற்றது.

இன்றைய தினம் வியாழக்கிழமை காலை முதல் வாகரை மகாவித்தியாலய மண்டபத்தில் நடைபெற்ற இம்மாநாட்டில் மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி.பி.எஸ்.எம்.சார்ள்ஸ் பிரதம அதிதியாகக் கலந்து கொண்டார்.

வாகரை பிரதேச செயலகப்பிரிவுக்குட்பட்ட அனைத்து கிராம சேவையாளர் பிரிவுகளையும் சேர்ந்த இளைஞர் யுவததிகள் கலந்து கொண்ட 2014ஆம் ஆண்டுக்கான இளைஞர் மாநாட்டில் ஆரம்பத்தில் இளைஞர்களின் பேரணி நடைபெற்றது.

தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தின் ஒத்துழைப்புடன் நடைபெற்ற நிகழ்வில் அதிதிகள் கலாசார வரவேற்பு நடனங்களுடன்  அழைத்து வரப்பட்டதுடன், தேசியக் கொடியேற்றல், இளைஞர் சத்தியப்பிரமாணம் என்பவற்றுடன் மாநாடு ஆரம்பமானது. அத்துடன் இந்நிகழ்வில் தேசிய இளைஞர் சேகைள் மன்றத்தின் மட்டக்களப்பு மாவட்ட உதவிப் பணிப்பாளர் எம்.எல்.எம்.என்.நையுரூஸ் கலந்து கொண்டார். உதவித்திட்டமிடல் பணிப்பாளர் எஸ்.நவிரதனின் வரவேற்புரையைத் தொடர்ந்து பிரதேச செயலாளரது தலைமையுரை நடைபெற்றது.

நிகழ்வின் சிறப்புரையினை மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி பி.எஸ்.எம்.சார்ள்ஸ் நிகழ்த்தினார் அதனையடுத்து வாகரைப்பிரதேச இளைஞர்களின் பிரேரணைகளும், அவர்களது கோரிக்கைகள் அடங்கிய மகஜரும் அரசாங்க அதிபருக்கு வாகரை இளைஞர் சம்மேளனத்தின் தலைவரால் கையளிக்கப்பட்டது. அத்துடன், வாகரைப்பிரதேச செயலகத்தின் நினைவுப் பரிசினை பிரதேச செயலாளர் செல்வி எஸ்.ராகுலநாயகி அரசாங்க அதிபருக்கு வழங்கிவைத்தார்.

இதனையடுத்து, இளைஞர்களுக்கான விரிவுரைகள் நடத்தப்பட்டன. இவற்றில் தொழில் வழிகாட்டல் விரிவுரையினை  கிழக்குப் பல்கலைக்கழக முகாமைத்துவப்பிரிவின் சிரேஸ்ட விரிவுரையாளர் திருமதி .பாரதி. கென்னடி, தொழில் வாய்ப்பினைப் பெற்றுக்கொள்ளும் வழிமுறைகள் விரிவுரையினை மட்டக்களப்பு உயர் தொழில்நுட்பக் கல்வி நிறுவக இணைக்காளர் எஸ்.ஜெயபாலன், தொழில்நுட்பக் கல்வியும் இளைஞர்களும் என்ற விரிவுரையினை மஞ்சந்தொடுவாய் தொழில்நுட்பக்கல்லூரி விரிவுரையாளர், தொழில் வழிகாட்டல் உத்தியோகத்தர் ஏ.சதானந்தன், உளவளத்துறை ஆலோசனையை மட்டக்களப்பு பிராந்திய சுகாதார சேவைகள் திணைக்கள உளவள சமூக விருத்தி உத்தியோகத்தர் எஸ்.தவேந்திரராஜா, தொழில்நுட்பக் கல்வியும் இன்றைய உலகமும் என்ற விரிவுரையினை வந்தாறுமூலை தேசிய தொழில் பயிற்சி அதிகாரசபை போதனாசிரியர் வி.விஜயராஜன் ஆகியோரும் நிகழ்த்தினர் அதனையடுத்து இளைஞர்கலா மன்றங்களின் கலை நிகழ்வுகளும் நடைபெற்றன.