திடீர் சுகவீனமுற்று ஏழு மாணவர்கள் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்

(ஏ.எல்.ஜனூவர்)
அட்டாளைச்சேனை கல்விக் கோட்டத்திற்குட்பட்ட அந்-நூர் மத்திய மகாவித்தியாலய மாணவர்கள் ஏழு பேர் திடீர் சுகவீனமுற்று அட்டாளைச்சேனை பிரதேச வைத்தியசாலையில் இன்று காலை அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

தரம் ஆறாம் மற்றும் ஏழாம்  தரம்  வகுப்புகளில் கல்வி கற்கும் மாணவர்களில் சிலரே இவ்வாறு சுகவீனமுற்று வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.


இது தொடர்பாக வைத்தியசாலை பொறுப்பதிகாரி டாக்கடர். ஏ.எம். இஸ்மாயில் தெரிவிக்கையில்,

அனுமதிக்கப்பட்டுள்ள மாணவர்களின் தோல்பகுதி அரிப்புத் தன்மையினால் தடித்து காணப்படுவதுடன் சில மாணவர்கள் சக்தியிழந்த நிலையில் தலையிடியுடன் காணப்படுவதாகவும் தெரிவித்தார்.

இதற்கான காரணம் உடன் கண்டறியப்படாத போதிலும் மாணவர்கள் சிற்றூண்டிச்சாலையில் உட்கொண்ட உணவு அல்லது சூழலில் ஏற்பட்ட தாக்கம் காரணமாக ஒவ்வாமை ஏற்பட்டிருக்கக கூடும் என்றார்.
 தற்போது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட மாணவர்கள் எவரும் ஆபத்தான நிலையில் இல்லை எனவும் தொடர்ந்தும் அவர்களுக்கான சிகிச்சை வழங்கப்பட்டு வருவதாகவும் தெரிவித்தார்.
இது தொடர்பான உரிய காரணத்தை கண்டறியும் பொருட்டு அட்டாளைச்சேனைப் பிரதேச சுகாதார வைத்திய அதிகாரிக்கு அறிவிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.