வடக்கு நோக்கி கிழக்கு தமிழ்த்தேசியக்கூட்டமைப்பு அரசியல்வாதிகள் நகரவேண்டுமென கூறுவது அறிவிலித்தனமாகும்!

(நடனம்)
'வடக்கு நோக்கி கிழக்கு தமிழ்த்தேசியக்கூட்டமைப்பு அரசியல்வாதிகள் நகரவேண்டுமென சிறிலங்கா சுதந்திர கட்சியின் பட்டிருப்புத் தொகுதி அமைப்பாளர் இராஜபுத்திரன்- சாணக்கியன் கூறுவது அவருடைய அரசியலின் அறிவிலித்தனமாகும்' என இலங்கைத் தமிழரசுக்கட்சியின் மட்டக்களப்பு மாவட்ட இளைஞர் அணிச்செயலாளர் திரு.ந.துஷ்யந்தன் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

தமிழ் தேசியக்கூட்டமைப்பினை விமர்சித்து சுதந்திரக்கட்சியின் பட்டிருப்பு தொகுதி அமைப்பாளர் விடுத்துள்ள ஊடக அறிக்கையை கண்டித்து அவர் விடுத்துள்ள ஊடக அறிக்கையில் மேற்படி தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில் சாணக்கியன் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினை விமர்சித்து வருவது அவரின் அரசியலின் அறிவிலித்தன்மையை காட்டுகின்றது. இவர் தன்னுடைய கடந்தகால வாழக்;கை வரலாறுகளை மறந்தும்,தமிழ் தேசியத்திற்காக பாடுபடும் மக்களின் அபிலாஷைகளை மறந்தும், விசேடமாக இலங்கை தமிழரசுக்கட்சியின் தலைவராக இருந்த தன்னுடைய பாட்டனார் மறைந்த இராசமாணிக்கம் ஐயாவின் தமிழ் தேசிய உணர்வினை பேரினவாத சக்திகளுக்கு விற்றும் அரசியல் செய்து கொண்டு வருகின்றார். இவர் கூறுவது போன்று வடக்கிற்கு கிழக்கு அரசியல்வாதிகள் செல்லவில்லை, இவரின் பாட்டனாரான இராசமாணிக்கம் ஐயாவை அரசியலுக்கு கொண்டு வந்ததுகூட வடக்கு தலைமைதான் என்பதனை இன்னும் அறியாமல்; இருக்கின்றார்.

தமிழ் தலைவர் தந்தை செல்வநாயகம் வழியிலே இலங்கை தமிழரசுக்கட்சியின் மூலம் அரசியலுக்கு வந்து இலங்கை தமிழரசுக்கட்சியின் தலைவராகவும் இருந்து தமிழுணர்வோடு, தமிழ் மக்களின் உரிமைக்காக இறுதி மூச்சு வரை குரல் கொடுத்தவர் இராசமாணிக்கம் ஐயா அவர்கள். இவ்வாறானவர்களில் வழியில் வந்து அவரின் பெயருக்கு கலங்கம் ஏற்படும் செயலில் ஈடுபடுவது மிவும் வேதனையான விடயமாகும். கடந்த வருடம் இராசமாணிக்கம் ஐயாவின் நூற்றாண்டு விழாவினை களுவாஞ்சிகுடியில் நடாத்துவதற்கு தமிழ் கூட்டமைப்பின் தலைவர்களை வரவழைத்து, அந்த நிகழ்வை வெற்றிகரமாக நடாத்தி முடித்து விட்டு, அதன் பிற்பாடு அதனை வைத்து அரசியல் லாபம் தேடிய சாணக்கியனுக்கு தமிழ் தேசியக் கூட்டமைப்பை விமர்சிக்க என்ன தகுதி இருக்கின்றது என்பதனை கேட்க விரும்புகின்றேன்.

தமிழ் மக்களின் பகுதிகளில் கலாசார சீரழிவுகள் வேகமாக அதிகரித்து வரும் இக்கால சூழ்நிலையில் அதனை எவ்வாறு தடுக்கலாம் என்பதனை யோசிக்காமல், தமிழ் தேசியக் கூட்டமைப்பினரையும், தமிழ் மக்களுக்காக குரல் கொடுப்போரையும் விமர்சிப்பதை முதலில் நிறுத்த வேண்டும், அதே வேளை சாணக்கியன் புரிய வேண்டும் இலங்கை தமிழரசுக்கட்சியின் முன்னாள் தலைவரான அமரர் இராசமாணிக்கம் இல்லாவிட்டால் தான் அரசியலுக்கு வந்திருக்க முடியாது என்பதனையும். அதை அறியாமல் வாய்க்கு வந்த மாதிரி அறிக்கை விடுவதை நிறுத்த வேண்டும், இல்லா விட்டால் இராசமாணிக்கம் ஐயாவின் ஆத்மா கூட அவரை மன்னிக்காது என்றார்.