தமிழினம் மனமகிழ்வுடன் புத்தாண்டை கொண்டாடுவதற்கான ஆரோக்கியமான சூழல் இன்னும் மலரவில்லை

தமிழினம் மனமகிழ்வுடன் தமிழ் - சிங்கள புத்தாண்டை கொண்டாடுவதற்கான ஆரோக்கியமான பாதுகாப்பான சூழல் இன்னும் மலரவில்லை, இந்நாட்டில் வாழும் சிங்கள மக்கள் ஆண்டு அனுபவிக்கின்ற உரிமைகளும், சலுகைகளும் சிறுபான்மை தமிழ் மக்களுக்கு இன்னும் கிட்டவில்லை, இந் நிலையில் எவ்வாறு தமிழ் மக்கள் தமிழ் சிங்கள புத்தாண்டை மன மகிழ்வுடன் கொண்டாடுகின்றார்கள் என்று கூற முடியும்.
இவ்வாறு தமிழ்த்தேசியக் கூட்டமைப்பின் கிழக்கு மாகாணசபை உறுப்பினர் மு.இராஜேஸ்வரன் குறிப்பிட்டார்.

கல்முனை – பெரியநீலாவணை நியூஸ்டார் விளையாட்டுக் கழகம் ஏற்பாடு செய்து நடாத்திய சித்திப் புத்தாண்டு விளையாட்டு விழா பெரியநீலாவணை தொடர்மாடி வீடமைப்பு பகுதியில் இடம் பெற்றது. இந் நிகழ்வில் பிரதம அத்தியாக கலந்து சிறப்பித்த கிழக்கு மாகாணசபை உறுப்பினர் மு.இராஜேஸ்வரன் இங்கு மேலும் பேசுகையில்

பேசுகையில்அற்ப சொற்ப சலுகைகளுக்காகவும், அபிவிருத்தி என்ற மாயையில் சிக்குண்டும் தமிழினத்தை எமது தமிழ் தேசியக் கூட்டமைப்பு அடகு வைக்க மாட்டாது. மாறாக எமது இனத்தின் அரசியல் உரிமையை வென்றெடுக்க இடையறாது பாடுபடும். தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மூலம் அரசியல் அடையாளத்தை பெற்று, எமது தமிழ் மக்கள் உணர்வு பூர்வமாக அளித்த வாக்குகளின் மூலம் பாராளுமன்ற உறுப்பினராகி, பின்னர் தனது சுயநலனுக்காக கட்சி தாவி, எமது மக்களை ஏமாற்றிச் சென்ற பாராளுமன்ற உறுப்பினர் எமது தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மாகாணசபை உறுப்பினர்கள் பங்குபற்றும் விழாக்களில் கலந்து கொள்ள மாட்டேன் என்று கூறுவது அவரின் உள் மனதை உறுத்தும் விடயமாகும். இதனையிட்டு நாம் அலட்டிக் கொள்ளத் தேவையில்லை.

பெரியநீலாவணைக் கிராமத்தை எனது இறுதி மூச்சு உள்ளவரை மறக்க மாட்டேன். நான் அரசில் பிரவேசம் செய்த போது என் மீது கொண்ட நம்பிக்கையுடன், தமிழ் உணர்வை பறைசாற்றி எனக்கு, கட்சிக்கும் அதிக வாக்கை வழங்கிய தமிழ் உணர்வாளர்கள் வாழும் மண் இதுவாகும்.

இன்று இவ் விழாவில் கலந்து கொண்டு உரையாற்றும் போது அண்மையில் வெளியான கல்விப் பொதுத் தராதரப்பத்திர சாதாரண தரப் பரீட்சையில் பெரிய நீலாவணை விஷ்ணு மகாவித்தியாலய மாணவன் ஒருவர் 9ஏ சித்தியையும், இரண்டு மாணவர்கள் தலா 8ஏ 1பி சித்தியையும் பெற்று இவ்வூரின் கல்வி வரலாற்றின், இப் பாடசாலையின் வராலாற்றில் சாதனை பதிவை உண்டுபண்ணியதை பாராட்டுவதற்கு நல்ல வாய்ப்பு கிட்டியதை எண்ணி மகிழ்வடைகின்றேன்.

எமது சமூகத்திலுள்ள விளையாட்டு கழகங்கள் வெறுமனே விளையாட்டில் மட்டும் நாட்டம் செலுத்தாமல், விளையாட்டு துறைக்கு அப்பால், சமூக, பொருளாதார கல்வி மேம்பாட்டிற்காக  உழைப்பவர்களாக இருக்க வேண்டும் அப்போது தான் நாம் போர் இடம் பெற்ற காலத்தில் இழந்த இழப்புக்களை சீர் செய்ய முடியும்
குறிப்பாக, விளையாட்டு கழக பிரதி நிதிகள் எமது மாணவ சமுதாயத்தின் கல்வி மேம்பாட்டுக்காக ஏதோ ஒரு வகையில் உதவ முன்வர வேண்டும் அப்போது நான் வகிக்கும் பதவி மூலமும், எனது சொந்த நிதியின் மூலமும் உங்களுக்கு உதவ சித்தமாகவுள்ளேன்.

எதிர்வரும் சித்திரைப் பத்தாண்டு, அவல வாழ்வுக்கு சொந்தகாரர்களாக உள்ள தமிழர்களின் வாழ்வில் விடிவு கிட்டவும், விமோசனம் அமையவும் வழி செய்ய வேண்டும். இதற்காக இறைவனை துதிப்போம் என்றார்.