பழுதடைந்த நிலையிலிருந்த, உணவுக்கு உதவாத ஒரு தொகை மீன்கள் சுகாதார பரிசோதகர்களினால் மீட்பு

(ராஜா)
களுவாஞ்சிகுடி  சுகாதார வைத்திய அதிகாரி பிரிவுக்குட்பட்ட களுவாஞ்சிகுடி பொதுச் சந்தையில் பழுதடைந்த நிலையிலிருந்த, உணவுக்கு உதவாத ஒரு தொகை மீன்கள் சுகாதார பரிசோதகர்களினால் நேற்று  புதன் கிழமை 23 ம் திகதி  கைப்பற்றப்பட்டது.

மேற்பார்வை சுகாதார பரிசோதகர் கா.ஜெயசங்கர் தலைமையில்   களுவாஞ்சிக்குடி பிரதேசத்திற்கு பொறுப்பான சுகாதார பரிசோதகர் சி.யோகேஸ்வரன் கோட்டைக்கல்லாற்றுக்கு பொறுப்பான சுகாதார பரிசோதகர் கு. குபேரன் ஆகியோரைக் கொண்ட குழு மேற்கொண்ட நடவடிக்கைக்கு அமைவாகவே இவ் மீன்கள் கைப்பற்றப்பட்டன.

இச் சம்பவம் தொடர்பாக சுகாதார பரிசோதகர் குழுவினருக்கு தலைமைதாங்கிய மேற்பார்வை பொது சுகாதார பரிசோதகர்; கா.ஜெயசங்கர் அவர்கள் தெரிவிக்கையில்.

களுவாஞ்சிகுடி பொதுச்சந்தையில் விற்கப்பட்ட மீன்களை பொதுமக்கள் வாங்கி உட்கொண்டதனால் மூன்றுபேர் வாந்திபேதி, வயிற்றோட்டம் காரணமாக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்தனர். இதன் பிரகாரம் பொது மக்களிடமிருந்து கிடைக்கப் பெற்ற முறைப்பாட்டினையடுத்து மேற்கொண்ட தேடுதலின் போதே இவ் மீன்கள் விற்பனை நிலையத்தில் வைத்து கைப்பற்றப்பட்டது.

கைப்பற்றப்பட்ட மீன்களில் கும்பிளாப்பாரை, வளயா போன்ற மீன்கள் அடங்குவதுடன் இரண்டு வியாபாரிகளிடமிருந்து மொத்தமாக 96 கிலோக்கிராம் மீன்கள் கைப்பற்றப்பட்டிருந்தது.  உடனடியாக கைப்பற்றப்பட்ட மீன்களையும், வியாபாரிகளையும், மட்டக்களப்பு நீதவான் முன்னிலையில் முன்னிலைப் படுத்தப் பட்டதனையடுத்து வியாபாரிகளை ஐம்பதாயிரம் ரூபாய் சரிரிப்பிணையில் விடுதலை செய்ததுடன் இன்று நீதிமன்றில் ஆஜராகுமாறும் மீன்களையும் இன்று நீதிமன்றுக்கு கொண்டுவருமாறு நீதவான் உத்தரவிட்டதாக மேலும் தெரிவித்தார்.