மண்முனை வாவியூடாக படகுகளில் பயணித்தவர்களில் 30 பேர் கடந்த காலங்களில் உயிரிழப்பு

1972ஆம் ஆண்டு முதல் மண்முனை வாவியூடாக  படகுகளில்  பயணித்தவர்களில் 30 பேர் இதுவரையில் உயிரிழந்துள்ளதாக மீள்குடியேற்ற பிரதியமைச்சர் விநாயகமூர்த்தி முரளிதரன் தெரிவித்தார்.

மண்முனைப்பாலம் சனிக்கிழமை (19) திறந்துவைக்கப்பட்டது. இந்நிகழ்வில் உரையாற்றுகையிலேயே அவர் மேற்கண்டவாறு கூறினார்.



அங்கு அவர் மேலும் உரையாற்றுகையில்,

'மண்முனைப்பாலம் கிழக்கின் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த பாலமாகும். இந்த மண்முனை வாவியில் படகுகளில் பயணிக்கும் காலம் தற்போது நிறைவடைந்துள்ளது.

1972ஆம் ஆண்டு முதல் இந்த வாவியில் படகுகளில் பயணித்தவர்களில் 30 பேர் உயிரிழந்துள்ளனர். இவர்களில் ஒரு உதவி அரசாங்க அதிபரும் உயிரிழந்துள்ளார். இவ்வாறான துயரச் சம்பவங்களும் இந்த வாவியில் இடம்பெற்றுள்ளன.

இனிமேல் படுவான்கரையொன்றில்லை. படுவான்கரையையும் எழுவான்கரையையும் மண்முனைப்பாலம் இணைத்துள்ளதால் படுவான்கரையொன்று இனிமேல் இல்லை.

இந்த மண்முனைப்பாலம் அமைக்கப்படாதென்றும் இந்தப் பாலத்தை எவராலும்  நிர்மாணிக்க முடியாதென்றும்  தீய சக்திகள் பிரசாரம் செய்து வேடிக்கையும் பார்த்தன. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர்களும் பொய்களை கட்டவிழ்த்துவிட்டிருந்தனர். இந்தப் பாலத்தை நிர்மாணிக்க முடியாதெனவும் விமர்சித்தனர்.

ஆனால், தற்போது இந்தப் பாலத்தின் கனவு நிறைவேறியுள்ளது. பல வருடங்களாக இந்தப் பிரதேச மக்கள் பயணிப்பதற்கு பட்ட துன்பம் முடிவுக்கு வந்துள்ளது. இந்த மக்களின் வாழ்வாதாரம், விவசாயம் என்பன மேம்படுவதற்கு இந்தப் பாலம் மிகவும் முக்கியமாதொரு பாலமாகும்.

இந்த மண்முனைப்பாலத்தை  நிர்மாணித்து தந்த ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவை  என்றைக்கும்  எம்மால் மறக்க முடியாது. ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கு எமது பாராட்டுக்களையும் நன்றிகளையும் தெரிவித்துக்கொள்கிறேன்' என்றார்.