நீர்ப்பாசன திணைக்களத்திற்கெதிராக செங்கலடியில் விவசாயிகள் ஆர்ப்பாட்டம்

மட்டக்களப்பு உறுகாமம் நீர்ப்பாசன திட்டத்தின் கீழ் அங்கீகாரமின்றி மேற்கொள்ளப்படும் விவசாயசெய்கை தடைசெய்யப்பட வேண்டும் இவர்களுக்கான நீர் வழங்கல் நிறுத்தப்பட வேண்டும் எனக் கோரி விவசாயிகளும் மீனவர்களும் இன்று காலை ஆர்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

ஆர்ப்பாட்டக்கரர்கள் “உறுகாமத்தையும் கித்துளையும் இணைத்துவிட்டு புறன்வட்டைக்கு நீர் வழங்கி எங்கள் வயிற்றில் அடிக்காதே” “உறுகாமக் கால காலபோக கண்டங்களுக்கே மறந்துவிடாதே” “உறுகாமம் கித்துள் இணைப்பு எப்போது” “ விடமாட்டோம் விடமாட்டோம் அத்துமீறிய வேளாண்மை எம்மை அழிக்க விடமாட்டோம்” “மாவடியோடையை இழுத்தடிக்காதே” “மேலதிக காணிக்கு அனுமதி விழங்கிய பணிப்பாளரே எங்கள் வாழ்வாதாரத்தை யோசித்தீரா?” “யாரைக் கேட்டு நீரை அத்துமீறி விட்டாய் பணிப்பாளரே?” “நீர்பாசன இலாகவே அத்துமீறிய வேளாண்மையை ஆதரியாதே?” “அத்துமீறலை ஆதரிக்கும் பணிப்பாளரே உடனடியாக மாற்றலாகிச் செல்” “பாசம் பேசி மேசம் செய்யும்  பொறியியலாளரே காசுக்கு வளையாதே” “அங்கீகரித்த விவசாயிகள் சாவதற்காக இந்த தீர்மானம்” “அத்துமீறலை ஆதரிக்கும் பொறியியலாளரே உடனடியாக வெளியேறு” போன்ற வாசகங்கள் எழுதிய பதாதைகளை ஏந்தியவண்ணம் நீர்ப்பாசன திணைக்களத்திற்கு எதிராக கோஷங்களை எழுப்பினர்.

உறுகாமம் குளத்திலுள்ள நீரினை கொண்டு 5240 ஏக்கரில் இம்முறை விவசாயம் செய்வதாக சிறுபோகச் செய்கைக்கான ஆரம்பக் கூட்டத்தில் 13 விவசாய அமைப்புக்கள் இணைந்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. ஆனால் தற்போது இரண்டு நாட்கள் மழை பெய்தவுடன் எல்லோரும் வேளாண்மை செய்வதற்கான ஏற்பாடுகளை செய்துவருகிறார்கள் இவர்களின் அத்துமீறிய நடவடிக்கை காரணமாக ஏற்கனவே செய்கை பண்ணப்பட்ட காணிகளுக்கு நீர் வழங்குவதில் பிரச்சினை ஏற்பட்டுள்ளது. நீர்ப்பாசன திணைக்களத்தினரும் தற்போது அத்துமீறி வேளாண்மை செய்பவர்களுக்கு நீர் வழங்குகிறது. இதனை உடனடியாக நிறுத்த வேண்டும்  என வலியுறுத்தி ஆரப்பாட்டத்தில் ஈடுபட்டனர்

இது தொடர்பாக நீர்ப்பாசன திணைக்கள உறுகாமம் பிரிவு பொறியியலாளர் எஸ்.ஹேமகாந்திடம் கேட்ட போது அவர் பதிலளிக்க மறுத்துவிட்டார்.