ஞாயிறு, பொது விடுமுறை நாட்களில் பாடசாலைக் கடமைகளில் மாணவர்களையும், ஆசிரியர்களையும் ஈடுபடுத்துவோர் மீது நடவடிக்கையை எடுக்க வேண்டும்!

(காரைதீவு நிருபர்) வாரத்தில் வருகின்ற ஞாயிற்றுக் கிழமைகளிலும், அரச பொது விடுமுறை நாட்களிலும் மாணவர்களையும், ஆசிரியர்களையும் கல்வி அமைச்சின் சுற்று நிருபங்களுக்கு மாறாக கடமையில் ஈடுபடுத்துவோர் மீது கல்வி அமைச்சு கடுமையான நடவடிக்கைகளை எடுக்க வேண்டுமென்று இலங்கைத் தமிழர் ஆசிரியர் சங்கம் வேண்டுகோள் விடுத்துள்ளது.


வாரத்தில் ஒரு நாள்தான் மாணவர்களுக்கும், ஆசிரியர்களுக்கும் விடுமுறை நாளாகும். அந்நாளில்தான் அவர்கள் தமது சுய கடமைகளைச் செய்கின்ற ஓய்வுக்குரிய நாளுமாகும்.

அந்த நாட்களில் மாணவர்களை பாடசாலைக்கு அழைப்பதும், ஆசிரியர்களை கடமையில் ஈடுபடுத்துவதும் பல்வேறு துஸ்பிரயோகங்களுக்கு வழிவகுப்பதோடு மாணவர்களையும், ஆசிரியர்களையும் உளப்பாதிப்புக்களுக்கும் உள்ளாக்கும் செயற்பாடாகும்.
இதைவிட இந்த நாட்களில் பாசாலைச் சேவையில் ஈடுபடும் பேருந்துகள் தமது சேவையை நிறுத்தியும் உள்ளன. ஆதலால் போக்குவரத்துத் தொடர்பான பிரச்சினைகளும் உள்ளன.

எனவே பொது விடுமுறை நாட்களில் இதுபோன்ற நடவடிக்கைகளில் ஈடுபடுவோர் மீது கடுமையான நடவடிக்கைகள் எடுக்க வேண்டுமென்று மத்திய கல்வி அமைச்சிடம் இலங்கைத் தமிழர் ஆசிரியர் சங்கம் வேண்டுகோள் விடுத்துள்ளது.

இதுபோன்ற அழைப்புக்களை விடுப்போர்மீது உரிய முறையில் புகார் அளித்தால் உடனடியாக நடவடிக்கை மேற்கொள்ள வசதியாக இருக்குமென்றும் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.
அரசதுறை அதிகாரிகளுக்கு பொது விடுமுறை நாட்களுக்கு மேலதிக கொடுப்பனவுகள் வழங்கப்படுகின்றன என்பதனையும் சங்கம் தமது வேண்கோளில் சுட்டிக்காட்டியுள்ளது.