மட்டக்களப்பு இந்துக் கல்லூரியும், பெரியகல்லாறு மத்திய கல்லூரியும் மோதும் மாபெரும் கிரிக்கற் சமர்

( ரவிப்ரியா )
2011ல் ஆரம்பிக்கப்பட்டு தொடர்ந்து நான்கு வருடங்களாக மட்டக்களப்பு இந்துக்கல்லூரி, பெரியகல்லாறு மத்தியகல்லூரி ஆகியவற்றிற்கிடையே hநடைபெற்றுவரும்,
இவ்வாண்டிற்கான இமயத்திற்கான கிரிக்கற் சமர் மட்டக்களப்பு கல்லடி சிவானந்தா வித்தியாலய விளையாட்டு மைதானத்தில் இந்துக் கலலூரி அதிபர் கே.அருட்பிரகாசம் தலைமையில் காலை  8.30க்கு ஆரம்பமாகின்றது.

அங்குரார்ப்பண நிகழ்வில் பிரதம அதிதிகளாக கிழக்கு மாகாணசபை உறுப்பினர் கே.கருணாகரம் மற்றும் மட்டக்களப்பு வலயக் கல்விப் பணிப்பாளர் கே.பாஸ்கரன் ஆகியோரும், விசேட விருந்தினர்களாக பட்டிருப்பு வலய உடற்கல்வி உதவிக் கல்விப் பணிப்பாளர் என்.நாகராஜா, கிழக்கு மாகாண கிரிக்கற் பயிற்றுவிப்பாளர் மஞ்சுள கருணாரெட்ண, மட்டக்களப்பு மாவட்ட கிரிக்கற் சங்க தலைவர் என்.வி.ராஜன், ஆகியோரும் கலந்து கொள்ளுகின்றனர்.

மாலைநேர பரிசளிப்பு விழாவில் பிரதம விருந்தினராக பாராளுமன்ற உறுப்பினர் பொன் செல்வராசா, பட்டிருப்பு வலய கல்விப் பணிப்பாளர் திருமதி என்.புள்ளநாயகம் ஆகியோரும், மட்டக்களப்பு வலய பிரதி கல்விப் பணிப்பாளர், எம்.குருகுலசிங்கம், உடற்கல்வி உதவிப் பணிப்பாளர் வி.லவகுமார், மொவிற்றல் பிராந்திய தலைமை உத்தியோகத்தர் சுரேன் ஹேவாவிதாரண ஆகியோர் கலந்து கொள்ளுகின்றனர்.

2011.2013 ஆகிய ஆண்டுகளில் நடைபெற்ற போட்டிகளில் பெரியகல்லாறு மத்திய கல்லூரியும், 2012 நடைபெற்ற போட்டியில் மட்டக்களப்பு இந்துக் கல்லூரியும் கிண்ணத்தைச் சுவீகரித்ததால் இப்போட்டியானது இரு அணிகளுக்கம் முக்கிய போட்டியாக அமைவதால் போட்டி விறுவிறுப்பானதாக அமையம் என்று எதிர்பார்க்கப்படுகின்றது.

மீன்பாடும் தேன் நாடாம் மட்டுமா நகரில் கல்லடி சிவானந்தா வித்தியாலய விளையாட்டு மைதானத்தில் 2014.07.29 செவ்வாயன்று,  கிரிக்கற் ரசிகர்களை மகிழ்விக்க,  மட்டக்களப்பு வலயத்தில் நகரில் அமைந்துள்ள மட்டக்களப்ப இந்துக் கல்லூரியும், பட்டிருப்பு கல்வி வலயத்தில் பெரியகல்லாறு கிராமத்தில் அமைந்துள்ள மத்தியகல்லூரியும் இமயத்திற்கான கிரிக்கற் சமரில் மோதுகின்றன.


நகரமும், கிராமமும் சம பலத்துடன் மோதுகின்ற ஒரு சமராக இது அமைகின்றது. இரு அணிகளும் மூன்றாண்டு கால முன் அனுபவத்துடன் மோத இருக்கின்றன. நடந்து முடிந்த 3 போட்டிகளும் கிரிக்கற் திருவிழாவாகவே நடந்து முடிந்துள்ளமையும் இங்கு குறிப்பிடத்தக்கது. போட்டியை சவாலாக இரு அணிகளும் ஏற்று தொடர் பயிற்சியில் ஈடுபட்டு வந்துள்ளனர். இந்துக் கல்லூரி பயிற்றுனர் ஜவ்வணனும், பெரியகல்லாறு மத்தியகல்லூரி பயிற்றுனர் மோசஸ்ம் முறையான பயிற்சிகளை அளித்து தங்கள் தங்கள் அணியினரை தயார் நிலையில் வைத்திருக்கின்றனர். எனவே கிரிக்கற் ரசிகர்கள் எதிர்பார்க்கும் அதிரடி ஆட்டங்களும், எதிர்பாராத ஆட்ட இழப்புக்களும் இருக்கத்தான் செய்யும். எனவே இச் சமர் கிரிக்கற் ரசிகர்களின் ஆர்வத்திற்கு நல்ல தீனியாக அமையப் போகின்றது என கிரிக்ற் விமர்கசர்கள் எதிர்வு கூறியுள்ளனர்.

நகரம் மட்டும் சொந்தம் கொண்டாடிய கிரிக்கற் இன்று கிராமத்திற்கு பரவலாக்கப்பட்டு சமப்படுத்தப்பட்டுள்ளமைக்கு, இச் சமர் சான்றாக அமைகின்றது. இந்த வகையில் மட்டக்களப்பு மாவட்டம் பெருமை கொள்ளுமளவிற்கு இச் சமரை ஒழுங்கு செய்த இரு பாடசாலைகளும், பாராட்டுக்குரியவை. அதேபோல் இந்த நல்லதொரு கைங்கரியத்திற்கு அனுசரணை வழங்கிய அனுசரணையாளர்களினது பங்களிப்பும் எதிர்கால மாவட்ட வீரர்களை தேசிய மற்றும் சர்வதேச மட்டத்திற்கு கொண்டு செல்வதற்கான உந்து சக்தியாக அமையும் என்பதில் எவ்வித சந்தேகமுமில்லை.

மட்டக்களப்பு மாவட்டம் இன்று விளையாட்டுத் துறையில் நல்ல சாதகைனளை நிலைநாட்டி வருகின்றது. இந் நிலையில் இச் சமர் இடம் பெறுவது விளையாட்டுத்துறையில் ஒரு மைல் கல்லாக பதிவு செய்யப்படும். ஏனெனில் இது கிராமத்தையும், நகரத்தையும் இணைக்கின்ற ஒரு ஆரோக்கியமான நட்புறவை வளர்க்கின்ற நல்லதொரு முயற்சியாகவும் இதைக் கணிக்கலாம்.