கல்லடி கடற்கரையில் வெகுவிமர்சையாக இடம்பெற்ற பட்டமிடும் திருவிழா - பல்லாயிரக்கணக்கானோர் பங்கேற்பு

(உ.உதயகாந்த்)

தேசிய மொழிகள் மற்றும் சமூக ஒருமைப்பாட்டு அமைச்சினால்  சமூக ஒருமைப்பாடு வாரத்தினை முன்னிட்டு யூஎன் வோலண்டியஸ்,  கைட் ஸ்ரீலங்கா மற்றும் மட்டக்களப்பு மாவட்ட செயலகம் என்பவற்றின் அனுசரணையுடன் இன்று (19) சனிக்கிழமை மாலை மட்டக்களப்பு கல்லடி கடற்கரையில் பட்டமிடும் திருவிழா - 2014 வெகுவிமர்சையாக இடம்பெற்றது.

மட்டக்களப்பு மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் எஸ்.கிரிதரன் பிரதம அதிதியாக கலந்துகொண்ட இந்நிகழ்வில் தேசிய மொழிகள் மற்றும் சமூக ஒருமைப்பாட்டு அமைச்சின் உயரதிகாரிகளும் மட்டக்களப்பு மாநகர ஆணையாளர் மா.உதயகுமார் மற்றும் முப்படையின் உயரதிகாரிகளும் சிறப்பு விருந்தினர்களாக கலந்து சிறப்பித்தனர்.

சமூக ஒருமைப்பாட்டின் ஊடாக தேசிய ஐக்கியம் எனும் தொனிப்பொருளில் இடம்பெற்ற இந்நிகழ்வில் மூவின மக்களும் கலந்து சிறப்பித்ததுடன், பட்டமிட்டு  மகிழ்ந்தமையும் குறிப்பிடத்தக்கது.

இந்நிகழ்வின் போது மாவட்ட செயலகத்தின் அனுசரணையுடன் நாச்சியார் பாரம்பரிய உணவகத்தினால் அறுசுவை பாரம்பரிய உணவுப் பண்டங்கள் அனைவருக்கும் இலவசமாக வழங்கப்பட்டதுடன், இந்நிகழ்விற்கு வருகைதந்த இஸ்லாமிய  சகோதரர்களின் நன்மைகருதி இலவச உணவு வழங்கப்பட்டு  இப்தார் நிகழ்வு இடம்பெற்றதும் குறிப்பிடத்தக்கது.

பட்டமிடும் திருவிழா நிகழ்வினை மேலும் சிறப்புக்குமுகமாக மூவின மக்களின் கலாசாரத்தினை பிரதிபலிக்குமுகமாக மாணவர்களினால் கலை கலாசார நிகழ்வுகளும் அரங்கேற்றப்பட்டது.