இளம் பெண்களுக்கான சுயதொழிலை மேம்படுத்தும் செய்முறை பயிற்சி

(சுழற்சி நிருபர்)
இளம் பெண்களுக்கான சுயதொழிலை மேம்படுத்தும் செய்முறைப் பயிற்சி விவசாயத் திணைக்களத்தினால் நடத்தப்படுவதாக காத்தான்குடி விவசாய போதனாசிரியர் குந்தவை ரவிசங்கர் தெரிவித்தார்.
மரக்கறிகள் மலிவாக விற்பனை செய்யப்படும் காலங்களில்; உணவு பாதுகாத்தல் செயன்முறை மூலம் பதனிட்டு, விற்பனைக்காக பொதி செய்தல் வரையிலான செயன்முறைகள் இப்பயிற்சி நெறியில் உள்ளடக்கப்பட்டிருந்ததாக அவர் மேலும் சொன்னார்.
காத்தான்குடி தக்வா நகரில் கிராம அபிவிருத்திச் சங்கக் கட்டிடத்தில் நேற்று வியாழக்கிழமை 24.07.2014 விவசாய போதனாசிரியர் குந்தவை ரவிசங்கரினால் செய்முறைப் பயிற்சிகள் நடாத்தப்பட்டது.
உள்ளுர் மரக்கறியான கத்தரிக்காயைக் கொண்டு விருந்துகளில் விரும்பி உண்ணும் சுவையான சட்னி சந்தைப்படுத்தக் கூடிய தரத்தில் தயாரித்து தயாரித்துக் காட்டப்பட்டது. இப் பயிற்சி வகுப்பில் 25 பயனாளிகள் பயிற்றப்பட்டனர்.
இவ்வாறான பயிற்சி வகுப்புக்கள் மட்டக்களப்பு விவசாய விரிவாக்கல் பிரிவின் பிரதிப் பணிப்பாளர் ஆர். கோகுலதாஸனின் பணிப்புரைக்கு அமைய விதாதா வள நிலையத்தின் அனுசரணையுடன் மாதாந்தம் நடத்தப்படுகின்றது என்பதும் குறிப்பிடத்தக்கது.