மட்டக்களப்பு மகாஜன மகளிர் கல்லூரியில் புதிய தொழினுட்ப பாடத்துறையை ஆரம்பிக்க கல்வியமைச்சு அனுமதி!

(சுழற்சி நிருபர் , சதீஸ்)
மட்டக்களப்பு மகாஜன மகளிர் கல்லூரியில் புதிய தொழினுட்ப பாடத்துறையை ஆரம்பிக்க கல்வியமைச்சு அனுமதி வழங்கியுள்ளதாக கல்வியமைச்சின் செயலாளர் அனுர திஸாநாயக்க அறிவித்துள்ளார்.

மட்டக்களப்பு மஹாஜன மகளிர் கல்லூரியில் புதிய தொழினுட்ப பாடத்துறையை ஆரம்பிக்க வேண்டும் என்று தான் கல்விப் பணிப்பாளர்களின் சிபார்சுடன் கல்வியமைச்சுக்கு விடுத்த வேண்டுகோள் ஏற்றுக் கொள்ளப்பட்டு அதனை ஆரம்பிக்க கல்வியமைச்சு அனுமதி வழங்கியுள்ளது என்று மஹாஜனக் கல்லூரி அதிபர் நேசலெட்சுமி துரைராஜசிங்கம் தெரிவித்தார்.

இதனால் இந்தப் பாடசாலையின் மாணவிகள் முதன் முறையாக உயர் புதிய தொழினுட்பத்துறையில் காலடி எடுத்து வைக்க அரிய வாய்ப்புக் கிட்டியுள்ளதாகவும் அதிபர் நேசலெட்சுமி மகிழ்ச்சி தெரிவித்தார்.
முதற்கட்டமாக உயர் தொழினுட்ப பாடத்துறைக்கு இக்கல்லூரியின் 30 இற்கு மேற்பட்ட மாணவிகள் அனுமதிக்கப்பட்டிருக்கின்றனர்.

மேலும்இ ஏனைய பிரபல பாடசாலைகளிலிருந்தும் மாணவர்களின் விண்ணப்பங்கள் கிடைக்கப் பெற்றுள்ளதாகவும் அவர் கூறினார்.
மட்டக்களப்பு நகரில் புதிய தொழினுட்பப் பாடத்துறையை ஆரம்பிப்பதற்காக தெரிவு செய்யப்பட்டுள்ள ஒரேயொரு மகளிர் கல்லூரி இது என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் சமீபத்தில் வெளியான க.பொ.த.சாத பெறுபேற்றின் அடிப்படையில் மட்டக்களப்பு மஹாஜன மகளிர் கல்லூரியிலிருந்து பரீட்சைக்குத் தோற்றிய 100 வீதமான மாணவிகளும் உயர் தரம் கற்கும் தகுதியைப் பெற்றுள்ளனர்.
ஏற்கெனவே மட்டக்களப்பு மஹாஜன மகளிர் கல்லூரியில் சகல வசதிகளுடனும் கூடிய மஹிந்தோதய ஆய்வு கூடம் அமைக்கப்பட்டுள்ளது என்பதும் குறிப்பிடத்தகது.