சர்வதேச பரீட்சையில் கிழக்கிலங்கை சர்வதேச கல்லூரி மகத்தான சாதனை ! மட்டக்களப்பிற்கு பெருமை!!

( ரவிப்ரியா )
மட்டக்களப்பு நகரில் இயங்கிவரும் கிழக்கிலங்கை சர்வதேச கல்லூரி அண்மையில் வெளியான சர்வதேச பரீட்சையில் அசத்தலான சாதனை ஒன்றைப் பதிவு செய்துள்ளது. வெளியான
பெறுபேற்றின் அடிப்படையில் வடக்கு நிழக்கு மாகாணத்தில் முதன்மை நிலையை அடைந்துள்ளதுடன் தேசிய, ரீதியில் இரண்டாம் நிலையில் உள்ளது. இதன் மூலம் மட்டக்களப்பு மாவட்டத்தை தலைநிமிரச் செய்துள்ளதுடன், சர்வதேச தரத்திற்கு எமது மாவட்ட மாணவர்களை இனம் காட்டும் இமாலய சாதனையை தனதாக்கியுள்ளது. 


பிரித்தானிய பாடத்திட்டமான Edexcel கல்வி முறையானது, சர்வதேச ரீதியாக 183 நாடுகளில் அங்கீகாரம் பெற்ற ஒரு பிரபல்யமான கல்வி முறையாகும். இக் கல்வித் திட்டத்தினை, உலகளாவிய ரீதியிலுள்ள புத்திஜீவிகளான பெற்றோர்கள், தங்களது குழந்தைகள் இம் முறையினில் கல்வியினைப் பெற்று, நவீன கால சவால்களை எதிர்த்து எதிர்நீச்சல் போடக் கூடியவர்களாகவும், சிறந்த துறை சார்ந்த நிபுணர்களாகவும் மிளிர வேண்டும் என்பதற்காகவே இக் கல்வி முறையினை நாடுகின்றனர்.

இக் கல்வித் திட்டம், உலகிலே பெரும்பான்மையான நாடுகளின் தலைநகரங்களில் உள்ள பாடசாலைகளிலேயே மாத்திரம் இயங்கி வருகின்றது. ஆனால், கிழக்கு மாகாணத்திலே தலைநகருக்கு நிகராக மட்டக்களப்பு நகரில் கிழக்கிலங்கை சர்வதேசக் கல்லூரி
(Eastern International College) இக் கல்வி திட்டத்தினை எமது மாணவர்களுக்காக முன்னெடுத்துச் செயலாற்றுவது குறிப்பிடத்தக்க அம்சமாகும்.

அந்த வகையில் கடந்த ஜுன் மாதம் 25, 26, மற்றும் 27ம் திகதிகளில் நடைபெற்று முடிந்த 3ம், 4ம், 5ம் தரங்களுக்கான Edexcel சர்வதேசப் பரீட்சையில் கிழக்கிலங்கை சர்வதேசக் கல்லூரி (Eastern International College) மாணவர்கள் சாதனை மேல் சாதனை படைத்துள்ளனர். அதில் 7 மாணவர்கள் ஆங்கிலம், கணிதம், விஞ்ஞானம் ஆகிய 3 பாடங்களிலும் அதிவிசேட (Supper Achievers) சித்தியினைவும், 22 மாணவர்கள் விசேட சித்தியினையும் (High Achievers) பெற்றுள்ளமை பெருமைக்குரிய விடயமாகும். பரீட்சைக்குத் தோற்றிய அனைத்து மாணவர்களும் சித்தியடைந்துள்ளமை பாராட்டுக்குரிய விடயமாகும்.

ஆசிரியர்களின் அர்ப்பணிப்பு, மாணவர்களின் முயற்சி, பாடசாலை நிர்வாகத்தின் முகாமைத்துவச் சிறப்பு, என்பவற்றின் அறுவடையாக அமைந்த இந்த பெறுபேறு நிச்சயமாக மாவட்ட கல்விப் புலத்தில் நல்லதொரு விழிப்புணர்வை ஏற்படுத்தும் என்பதில் ஐயமில்லை. பல்வேறு பாதிப்புக்களைச் சந்தித்து பின்னடைவில் இருந்த மாணவ சமுதாயத்திற்கு இது ஒரு நம்பிக்கையை ஏற்படுத்தவே செய்யும்.

எமது மாவட்ட மாணவர்களுக்கு உள்ள ஒரேயொரு அழியாச் சொத்து கல்விதான் என்பது எமது கடந்தகால அனுபவமாகும். இப்போது கல்விக்கான இதுபோன்ற பல கதவுகள் திறக்கப்பட்டிருப்பது எமது வரப் பிரசாதமாகும். பணம் மட்டும் சேர்க்கும் நோக்கமாக இருந்திருந்தால் சர்வதேச ரீதியல் அனைவருமே சித்தியடைந்திருக்க முடியாது. எனவே இப் பாடசாலையின் நோக்கம் மாணவர்களின் சிறந்த பெறுபேறே என்பது புலனாகின்றது. எனவே இந்த பாடசாலை பாராட்டுக்குரியது.

அதிசிறந்த பெறுபேறுகளைப் பெற்று எமது மாவட்டத்திற்கு பெருமை சேர்த்த மாணவர்கள், மற்றும் சித்தி பெற்ற அனைத்து மாணவர்களும் பாராட்டுக்குரியவர்கள்.

இந்த அரிய சாதனையை நிலைநாட்டிய, கிழக்கிலங்கை சர்வதேச கல்லூரியை வற்றி நியூஸ் வெகுவாகப் பாராட்டுவதுடன்,. குறிஞ்சி மலர் போல் பெறுபேறு மூலம் பூத்துள்ள இந்த இளம் சிட்டுக்களை வாயார வாழ்த்துகின்றது.