குத்துச் சண்டையில் இலங்கைத் தீவின் குன்றின் மேலிட்ட தீபமாக திகழும் மட்டு மண்ணின் மைந்தன் றொயிஸ்ரன்

( ரவிப்ரியா )
மட்டக்களப்பு மண்ணிற்கு தனது சாண்டோ சாகசங்களால் மகிமை சேர்த்தவர் அமரர் சாண்டோ சங்கரதாஸ். அன்னாரின் பெயரில் இயங்கும் விளையாட்டுக் கழகத்தின் சார்பாக விளையாட்டு அமைச்சினால் நடாத்தப்பட்ட (84 -87கி.கி) திறந்த
  மாவட்டம், மற்றும் மாகாணப் போட்டிகளில் பங்கேற்று முதலாம் இடத்தைப் பதிவு செய்துகொண்டார், மட்டு மண்ணின் மைந்தன் எஸ்.றொயிஸ்ரன். இதனால் கிழக்கு மாகாணம் சார்பாக விளையாட்டு அமைச்சின் கொழும்பு விளையாட்டு உள்ளக அரங்கில் நடைபெற்ற தேசிய ரீதியிலான போட்டியில் பங்கு கொள்ளும் அரிய வாய்ப்பை அண்மையில் அவர் பெற்றுக்கொண்டார்.

மிகக் கடுமையான போட்டிகளுக்கு தைரியமாக முகம் கொடுத்து, மட்டக்களப்பிற்கு முதற் தடவையாக தேசிய மட்டத்திலான மேற்படி திறந்த போட்டியில் மூன்றாம் இடத்தைப் பெற்றுக் கொடுத்து, வெங்கலப் பதக்கத்தை சுவீகரித்து வரலாற்றுச் சாதனை ஒன்றைப் புரிந்துள்ளார். இதன் மூலம் மட்டக்களப்பு மாவட்ட இளைஞர்களுக்கு குத்துச் சண்டையில் ஒரு விழிப்பணர்வையும் நம்பிக்கையையும் ஏற்படுத்தி சகல விளையாட்டுத் தறைகளிலும் எமது மாட்ட இளைஞர்களாலும் சாதிக்க முடியும் என நிரூபித்துள்ளார்.

எமது மாவட்டத்தை சகல துறைகளிலும் முன்னிலைக்கு கொண்டு வரவேண்டும் என்ற முனைப்போடு செயற்பட்டுக் கொண்டிருக்கும் மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி பி.எம்.எஸ்.சாள்ஸ் அவர்களுக்கு இது மிகுந்த உற்சாகத்தை அளித்துள்ளது. எனவே வீரரை அலுவலகத்திற்கு அழைத்து தனதும் தனது அதிகாரிகளினதும் வாழ்த்தை நேரடியாகப் பகிர்ந்து கொண்டு பாராட்டும் தெரிவித்துள்ளார். இந் நிகழ்வில் மேலதிக அரசாங்க அதிபர் கிரிதரன், உதவி மாவட்ட அரசாங்க அதிபர் ரங்கநாதன், மாவட்ட விளையாட்டு உத்தியோகத்தர் ஈஸ்வரன், பிரதம கணக்காளர் நேசராசா, மண்முனை வடக்கு பிரதேச செயலாளர் தவராசா, விளையாட்டு உத்தியோகத்தர் ரூபராஜ், பயிற்றுனர் வே.திருச்செல்வம் ஆகியோரும் இணைந்து மெருகேற்றியுள்ளனர்.

இவ் வெற்றிக்கனியை தட்டிக் கொள்வதற்கு வழிகாட்டியாக இருந்த மாவட்ட விளையாட்டு உத்தியோகத்தர் ஈஸ்வரன், பிரதேச விளையாட்டு உத்தியோகத்தர் ரூபராஜ், பயிற்றுனர் வே.திருச்செல்வம் ஆகியோரின் மண்பற்றுடன் கூடிய அர்ப்பணிப்பான செயற்பாடும் பாராட்டுக்கரியது.

மண்ணை முழுமையாக நேசிக்கின்ற கிழக்கின் முன்னாள் மாகாண முதலமைச்சரும், ஜனாதிபதியின் ஆலோசகரும், மாகாண சபை உறுப்பினருமான சிவநேசதுரை சந்திரகாந்தனும் வீரரை தனது அலுவலகத்திற்கு அழைத்து வாழ்த்தைத் தெரிவித்தததடன் பாராட்டியும் முன்மாதிரி காட்டியுள்ளார்.

அண்மையில் கிழக்கு பல்கலைக்கழகத்தில் பல்கலைக்கழகங்களுக்கிடையே தேசிய ரீதியில் நடைபெற்ற போட்டியில் தங்கப் பதக்கத்தைச் சுவீகரித்து மண்ணிற்கு மற்றுமோர் மகுடம் சூட்டிய மறவன் றொயிஸ்ரன் என்பது இங்கு குறிப்பிடத்தக்கது.

இத்தனைக்கும் கிழக்குப் பல்கலைக் கழகத்தின் கலைப் பிரிவு இறுதியாண்டு மாணவனான அவர், விளையாட்டு, படிப்பிற்கு, தடையில்லை என்பதையும் வெளிப்படுத்தியுள்ளார். இவர் பட்டதாரியாக வெளிவரும் நாளும் வெகு தூரத்தில் இல்லை. எனவே விளையாட்டுத் துறையில் ஆர்வமுள்ள மாணவர்கள் இவரை முன் உதாரணமாகக் கொள்ளலாம். படிப்பிலும் விளையாட்டிலும் ஒன்றுக்கொன்று பாதிப்பில்லாமல் சாதித்துக் காட்டலாம்.