14 இலட்சம் ரூபா செலவில் கறுத்தார்முறிக்குளம் புனரமைப்பு வேலைகள் ஆரம்பம்

(சதீஸ்கஷ்ரோ)
வவுணதீவு பிரதேச செயலகப் பிரிவுக்குட்பட்ட இலுப்படிச்சேனை கிராமத்திலுள்ள கறுத்தார்முறிக்குளம் புனரமைக்கும் வேலைத்திட்டம் இன்று காலை ஆரம்பித்துவைக்கப்பட்டது.

ரூபா 14 இலட்சம் செலவுமதிப்பீட்டில் இவ் கறுத்தார்முறிக்குளம் புனரமைக்கப்படவுள்ளது. இவ் வேலையினை இன்று காலை மண்முனை மேற்கு பிரதேச செயலாளர் எஸ்.சுதாகர் மற்றும் உதவி திட்டமிடல் பணிப்பாளர் ரி.நிர்மல்ராஜ் ஆகியோர் ஆரம்பித்துவைத்தனர்.

இக்குளம் புனரமைக்கப்பட்டால் குளத்தை அண்டிய பகுதி மக்களுக்கு பெரும் உதவியாக அமையும் என இப் பிரிவு விவசாய அமைப்பின் பிரதிநிதிகள் எமக்கு தெரிவித்தனர்.

மேலும், வேளாண்மை வயலுக்கு பெரும்போகத்தில் தண்ணீர் தட்டுப்பாடு ஏற்பட்டால் குறிப்பிட்ட சில ஏக்கர் வயல் காணிகளுக்கு தண்ணீர் பாச்சமுடியும் எனவும், தோட்டப் பயிர் செய்கைக்கும் உதவுவதுடன், வரட்சி காலத்தில் குளத்தை அண்டிய கிணறுகளில் தண்ணீர் தட்டுப்பாடு ஏற்படாமல் இருக்கும் எனவும் தெரிவித்தனர்.

இக் குளத்தின் புனரமைப்புத் திட்ட வேலைகளுக்கு உதவிய மட்டக்களப்பு மாவட்ட அரசாங்கஅதிபர் மற்றும் அதிகாரிகளுக்கு இங்கு வருகைதந்த மக்கள் நன்றியினைத் தெரிவித்தனர்.