பட்டிப்பளை பிரதேசத்தில் 2014 - 2015 ம் ஆண்டுக்கான விவசாய செய்கையின் ஆரம்பக்கூட்டம்.


(படுவான் பாலகன்) பட்டிப்பளை பிரதேசத்தின் பெரும்போக செய்கைக்கான ஆரம்பக்கூட்டம் கொக்கட்டிச்சோலை கலாசார மண்டபத்தில் நடைபெற்றது. மட்டக்களப்பு மாவட்ட மேலதிக அராங்க அதிபர் திரு.கிரிதரன் அவர்களின் தலைமையில் நடைபெற்ற இக்கூட்டத்திற்கு
மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர்கள், மாகாணசபை உறுப்பினர்கள், பிரதேச செயலாளர், மாவட்ட விவசாய பணிப்பாளர், கமநல சேவை திணைக்கள அதிகாரிகள் நீர்ப்பாசன திணைக்கள அதிகாரிகள், விவசாய போதனாசிரியர்கள், கிராம உத்தியோகத்தர்கள், அபிவிருத்தி உத்தியோகத்தர்கள், கமநல அமைப்பக்களின் தலைவர் செயலாளர், மற்றும் பல விவசாயிகள் எனப்பலர் கலந்து கொண்டிருந்தனர்.

இதன்போது நீர்ப்பாசனக் காணிகள் 8354 ஏக்கர் வயல்கள் கடுக்காமுனை குளம், புளுகுணாவி குளம், அடைச்சல் குளம் என்பவற்றை அடிப்படையாக வைத்தும், மழையினை அடிப்படையாக கொண்டு ஒருபோக செய்கைகளில் ஈடுபடுத்தப்படும் மானாவாரி வயல்களும் செய்கை பண்ண தீர்மானிக்கப்பட்டது. அத்துடன் இவ்வாண்டு விவசாய செய்கைகள் அனைத்தும் 20.09.2014 அன்று ஆரம்பிக்கப்பட்டு 10.11.2014 அன்றுடன் விதைப்பு வேலைகள் நிறைவடையும் எனவும் கூறப்பட்டது. விவசாயிகள் இதன்போது தாம் விவசாயச் செய்கையில் பயன்படுத்தும் உழவு இயந்திரங்களில் கலப்பையினை கொழுவிச் செல்லவும், உழவு இய்ந்திரங்களில் இழுவைப் பெட்டிகளில் தொழிலாளிகளை ஏற்றிச்செல்லவும் அனுமதி வழங்கப்பட வேண்டும் என கேள்வி எழுப்பினர். அதற்கு இக்கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டதை கொக்கட்டிச்சோலை பொலிசாருக்கு அறிவிப்பதாக கூறப்பட்டது.