2 வீடுகளை தீக்கிரையாக்கியவர்கள் தாமாகவே முன்வந்து நீதி மன்றத்தில் ஆஜர்

சமீபத்தில் அம்பாறை திருக்கோவில் பொலிஸ் பிரிவில் இரண்டு வீடுகள் தீக்கிரையாக்கப்பட்ட சம்பவத்துடன் தொடர்புடைய மூன்று சந்தேக நபர்கள் வெள்ளிக்கிழமை (29) தாமாகவே முன்வந்து பொத்துவில் மாவட்ட நீதவான் நீதி மன்றத்தில் நீதிபதி முன்னிலையில் ஆஜராகியுள்ளதாக திருக்கோவில் பொலிஸார் தெரிவித்தனர்.

இச்சம்பவம் குறித்து தெரியவருவதாவது,


கடந்த செவ்வாய்கிழமை (19) அதிகாலை திருக்கோவில் ஸ்ரீ சித்திரவேலாயுதர் சுவாமி  ஆலயத்தின் குறுக்கு வீதியில் அமைந்துள்ள முன்னாள் தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் முக்கியஸ்தர் சீலனின் தாயார் விநாசித்தம்பி புவனேஸ்வரியின் வீடு தீக்கிரையாக்கப்பட்டது.

தொடர்ந்து செவ்வாய்க்கிழமை (26) நள்ளிரவு தம்பிலுவில் கலைமகள் வீதியில் அமைந்திருந்த விஜயராசா சத்தியசீலனின் வீடு முற்றாக தீக்கிரையாக்கப்பட்டது.

இதனைத்தொடர்ந்து விஜயராசா சத்தியசீலனினால் 26ஆம் திகதி சம்பவத்துடன் தொடர்புடையவர்கள் என சிலரை அடையாளப்படுத்தி, அவர்கள் கைத்துப்பாக்கிகளுடன் தனது வீட்டுக்கு வந்து தன்னை தாக்கி மரத்தில் கட்டி வைத்துவிட்டு வீட்டுக்கு தீ வைத்ததாக திருக்கோவில் பொலிஸில் முறைப்பாடு ஒன்றினை பதிவு செய்திருந்தார்.

இதனை அடுத்து திருக்கோவில் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வந்த நிலையில் விஜயராசா சத்தியசீலனினால் சந்தேக நபர்களாக அடையாளம் காட்டப்பட்ட மூவர் வெள்ளிக்கிழமை (29) தாமாக சென்று நீதிபதி முன்னிலையில் ஆஜராகினர்.

மேற்படி நீதிமன்றில் முன்னிலையாகி இருந்த சந்தேக நபர்கள்  மூவரையும் எதிர்வரும் திங்கட்கிழமை 01ஆம் வரை விளக்கமறியலில் வைக்குமாறு பொத்துவில் மாவட்ட நீதிமன்ற நீதிபதி உத்தரவு விட்டுள்ளார்.