கொம்புமுறி விளையாட்டின் மூலம் பெறப்படும் மகிழ்வளிப்பு

 இலங்கையின் கிழக்குப் பகுதியில்  மக்கள் பல்வேறு விதமான தொழில்களிலும் ஈடுபட்டு வருபவர்களாகவே காணப்படுகின்றனர். இவர்கள் விவசாயம் செய்தல், மீன்பிடித்தல்; கால்நடை வளர்ப்பு போன்ற தொழில்களையே பிரதானமாக மேற்கொண்டு தங்களது பொருளாதார வளத்தினைப் பெருக்கிக் கொள்ள முயற்சிக்கின்றனர்.

எனவே இவ்வாறான தொழில்களை மேற்கொள்வதற்கு இவர்களுக்கு இயற்கை சக்திகள் உதவிபுரிகின்றன. இவ் இயற்கை ரீதியான சக்திகளாக நிலம், நீர், ஆகாயம், காற்று ஆகியன விளங்குகின்றன.

எமது இயற்கை சக்திகள் சிலவேளைகளில் மக்களின் தொழில்களுக்கு இடையூறு விளைவிக்கின்ற போதும், தமது சக்தியை வழங்காமல் பொய்பிப்க்கின்றபோதும் இம்மக்கள் இயற்கை சக்கிகளை வழங்குகின்ற தெய்வங்களுக்கு சடங்கினை மேற்கொள்வதுண்டு

இச்சடங்குகள் பெரும்பாலும் இம்மக்கள் தங்கள் தொழில்களை பூர்த்தி செய்து ஓய்வாக இருக்கின்ற காலப்பகுதியாகவே அமையும் வைகாசி தொடக்கம் புரட்டாதி மாதம் வரையிலான காலப்பகுதியே இச்சடங்கினை மேற்கொள்வதற்கு இவர்களுக்கு ஏதுவாக அமைகின்ற காலப்பகுதி எனக் கூறலாம்.

இக்காலப்பகுதியில் நெற்செய்கை மூலம் அதிகளவான வருவாய்களை பெறக்கூடியதாகவும் ஏனைய விவசாய உற்பத்திகளில் இருந்து அதிகளவான பொருளாதார வளத்தினை ஈட்டிக்கொள்ளக் கூடியதாகவும் அமைய வழமைக்கு மாறாக பயிர்ச்செய்கைகளில் பூச்சிபீடைகளின் தொற்றுக்கள் ஏற்படுகின்ற போதும், மழையில்லாத வறட்சியான காலப்பகுதியில் பயிர்களுக்கு பாதிப்பு ஏற்படுகின்ற போதும் தெய்வங்களுக்கு நேர்த்தி வைத்து சடங்கினை மேற்கொள்வதற்கு தயாராவர்



கொம்பமுறி விளையாட்டும் இவ்வாறான ஒரு சூழ்நிலையிலேயே நிகழ்த்தப்படுகின்றது. மழைபொழியாது பொய்க்கின்ற வேளையில் அம்மனின் சீற்றமே இதற்குக் காரணமாக அமைகின்றது எனக்கருதி அம்மனின் சீற்றத்தினைப் போக்க முயற்சிக்கின்றனர் அம் முயற்சியின் பயனாக கொம்புமுறி விளையாட்டு மேற்கொள்ளப்படுகின்றது. கிழக்கிலங்கையில் ஆகம முறை சாராத சடங்கு கோயில்களிலேயே இக்கொம்பு முறித்து விளையாடும் வழக்கம் ஈழத்தமிழரிடையே இருக்கின்றது எனலாம்.

இக்கொம்புமுறி விளையாட்டானது உளரீதியான அமைதி மகிழ்வு குதூகலம் என்பவற்றை மக்களது மனங்களில் தோன்றச் செய்கின்றது.



இந்த வகையில் கிழக்குப் பல்கலைக்கழக நுண்கலைத்துறையினரால் மட்டக்களப்பு மாமாங்கேஸ்வரர் ஆலய திருவிழாச் சூழலில் வருடா வருடம் நிகழ்த்தப்பட்டு வருகின்ற பாரம்பரிய அரங்க விழா இவ்வருடமும் மிகச் சிறப்பான முறையில் நிகழ்த்தப்பட்டது. இதில் காட்சிக் கூடமும், பாரம்பரிய அரங்க ஆற்றுகைகளும் அளிக்கைசெய்யப்பட்டன.

இப்பாரம்பரிய அரங்கக் காட்சிக்கூடத்தில் கண்ணகி வழிபாட்டுடன் தொடர்புடைய கொம்புமுறிச் சடங்கிலே பயன்படுத்தப்படுகின்ற பொருட்கள் காட்சிப்படுத்தப்பட்டிருந்தன. வடசேரிக் கொம்பு, தென்சேரிக் கொம்பு, மரவளையம், பில்லி, தாய் அடை, ஆப்பு என்பவற்றுடன் பாரம்பரிய இசை வாத்தியங்களும் காட்சிப்படுத்தப்பட்டன. கொம்புமுறி சடங்கானது குறிப்பிட்ட கிராமங்களில் உள்ள மக்களை ஒன்றிணைத்து விளையாட்டாக நிகழ்த்தப்படுகின்றது. இன்றைய 21 ஆம் நுர்ற்றாண்டில் எங்களுக்கான சமூக பண்பாட்டு உருவாக்கம், அறிவியல், தொழில்நுட்ப உருவாக்கம் என்பவற்றுக்கான  சிந்தனைத் தேடலின் ஊற்றுவாயாக கொம்புமுறி விளையாட்டும் காணப்படுகின்றது.

இந்த வகையில் கொம்புமுறியின் சமகால முக்கியத்துவம்  அறியப்பட்டு அதனை மேலும் பரவலாக்குவதும், ஆழமானதுமான கல்விசார் உரையாடல்களுக்கும், முன்னெடுப்புக்களுக்கும் உரிய வகையில் கொம்புமுறி சார் கல்வி, கலை செயற்பாடுகள்  சமூகம் தழுவிய வகையில் முன்னெடுக்கப்பட்டு வருகிறது.

                    கீ.லினுஷா
                    நுண்கலைத்துறை
                    கி.ப.க