என்னை நடுத்தெருவில் விட்டு ஏமாற்றிய தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சிக்கு நான் சவால் விடுக்கின்றேன்.

அரசாங்கத்துடன் நாங்கள் இணைய வேண்டும், இல்லையேல் உரிமை உரிமை என்று கூறுகின்றவர்களுக்கு வக்காளத்து வாங்க வேண்டும்.
இதனை விடுத்து இடை நடுவில் நிற்பது சாத்தியமில்லை என்று தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் முன்னாள் மத்திய செயற்குழு உறுப்பினரும் மண்முனை தென் மேற்கு பிரதேச சபையின் முன்னாள் தவிசாளருமான தம்பியப்பா பேரின்பராசா தெரிவித்தார்.


களுமுந்தன்வெளிக் கிராமத்தில் மைதான புனரமைப்புக்கான அடிக்கல் நாட்டும் விழா ஞாயிற்றுக்கிழமை (17) இடம்பெற்றது. இங்கு கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.


அங்கு அவர் தொடர்ந்து உரையாற்றுகையில்,

நான் முன்னைய காலத்தில் இழுபறிப்பட்ட கட்சியில் காலத்தின் கட்டாயம் காரணமாக இணைந்து பணியாற்ற வேண்டிய துர்ப்பாக்கிய நிலைக்கு தள்ளப்பட்டிருந்தேன். எமது கிராமத்தின் நன்மை கருதியே தீர்மானங்களை மேற்கொள்ள் வேண்டும். எனவே தான் இந்நாளை எமது கிராமத்தினை அபிவிருத்தி பாதைக்கு இட்டு செல்வதற்கான அடிக்கல் நட்டப்பட்ட பொன் நாளாக நான் கருதுகின்றேன்.

என்னுடைய பொருளாதாரத்தினை சீரழித்து, மக்களுக்கு கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றிக் கொடுக்காமல் என்னை நடுத்தெருவில் விட்டு ஏமாற்றிய தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சிக்கு நான் சவால் விடுக்கின்றேன்.

நாங்கள் இருக்கும் வரை, படுவான் கரையில் முனைக்காடு கிராமத்தினைத் தவிர வேறு எந்த பிரதேசத்திலும் ஒரு வாக்கேனும் தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியினர் எடுப்பதற்கு விடமாட்டோம் என நான் சவால் விடுக்கின்றேன். இக்கிராமத்தினை ஜனாதிபதியின் விஷேட கவனமுள்ள கிராமமாக மாற்றியமைக்க வேண்டும் என்பதுதான் எனது எண்ணம்.

அன்பான மக்களே நீங்கள் அரசியலில் விழிப்படைய வேண்டும். பழைய அரசியல் சித்தாந்த சிந்தனைகளை உடைத்தெறிய வேண்டும்.
இன்று மனித உரிமை பிரச்சினை ஒன்றினை பற்றி கதைக்கின்றனர். உண்மையில் அதுவொரு பூச்சாண்டி வேலை. காரணம் ஜனாதிபதியுடன் மூன்று வல்லரசு நாடுகள் நிற்கின்றன.

தமிழீழ கோரிக்கையையும் அது சார்ந்த போராட்டதையும் வல்லரசு நாடுகளில் இரண்டு நாடுகள் அங்கிகரிக்க வேண்டும்.

ஆனால் பக்கத்தில் இருக்கும் இந்தியா கூட இதனை பயங்கரவாத போராட்டம் என எடுத்துரைத்தது. எனவே தான் எமக்கு மேலும், மேலும் துர்ப்பாக்கிய நிலை வராமலிருக்க எமது மக்களை வழமாக்குவோம், விழிப்படைய வைப்போம், தெளிவடைய வைப்போம் என அவர் மேலும் தெரிவித்தார்.