இலங்கையராகிய நாம் தாய்மொழி எதுவானாலும் பிரச்சினையில்லை, பொதுமொழியான ஆங்கிலமொழியை கட்டாயம் தெரிந்துகொள்ளவேண்டும்.

(சித்தாண்டி நித்தி) பல்கலைக்கழக மாணவர்களுக்கு பொதுவாக மொழிப்பிரச்சினை காணப்படுகின்றது. கிழக்கு பல்கலைக்கழகத்தை எடுத்துக்கொண்டால் இருமொழி பேசுகின்ற சமூகம் காணப்படுகின்றது. இங்கு ஒருவருடன் ஒருவர் கலந்துரையாடும்போது தடங்கலாக இருப்பது மொழிப்பிரச்சினையாகும்.

எனவே இதனைத் தவீர்த்துக் கொள்வதற்கு ஆங்கில மொழியை கற்றுக் கொள்ள ஆர்வம் செலுத்த வேண்டும் என்று கிழக்கு பல்கலைக்கழக உபவேந்தர் கலாநிதி கிட்ணன் கோபிந்தராஜா தெரிவித்தார்.

கிழக்கு பல்கலைக்கழகத்திற்கு 2012 மற்றும் 2013 ஆம் கல்வியாண்டுக்கான புதிய  மாணவர்களை வரவேற்கும்  நிகழ்வு திங்கள் கிழமையன்று கிழக்கு பல்கலைக்கழகத்தில் நடைபெற்றது. இவ் நிகழ்வில் பிரதம அதிதியாக கலந்துகொணடு  உரையாற்றும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.
அவர் அங்கு மாணவர்கள் மத்தியில் தொடர்ந்து உரையாற்றும் போது தெரிவித்ததாவது

பல்கலைக்கழகத்திற்கு தெரிவு செய்யப்பட்ட மாணவர்களாகிய நீங்கள் எதிர்காலத்தில் ஒவ்வொருதுறையிலும்; முன்னிலையாக திகழப்போகின்றவர்கள்.  ஏன் நாட்டின் ஜனாதிபதியாகக் கூட நீங்கள் வரக் கூடியவர்கள்.  உயர்கல்வியை முடித்து பல்வேறுதுறைகளுக்கு செல்லவேண்டிய நீங்கள் பல்கலைக்கழகத்தினுடைய நற்பெயரை காப்பாற்றவேண்டும், அதனைவிடுத்து பல்கலைக்கழகத்திற்கு எதிராக வீதியில் இறங்கி  ஆர்பாட்டம் செய்பவர்களாக மாறக்கூடாது.

 பல்கலைக்கழகத்தில் காணப்படுகின்ற அனைத்து கல்விசார் வளங்களும் உங்களுடையது. அதனை சிறந்தமுறையில் பயன்படுத்தி உங்களின் பட்டப்படிப்புக்களை பயனுள்ளதாக மாற்றவேண்டும். பல்கலைக்கழகங்களுக்கு தெரிவாகிய மாணவர்களுக்கு பகிடிவதைகள் என்கின்றபோர்வையில் பல்வேறு அசம்பாவிதங்கள் இடம்பெறுவதாக அறிந்திருக்கின்றோம். ஆனால் கிழக்கு பல்கலைக்கழகத்திற்கு தெரிவாகிய நீங்கள் எதற்கும் அஞ்சத்தேவையில்லை  ஏன் எனில் இங்கு பூச்சியம் வீதமாக பகிடிவதைகள் இடம்பெறுவதை குறைத்துகாட்டுவதற்கு நாங்கள் தீர்மானித்திருக்கின்றோம்.

கிழக்கு பல்கலைகழக மாணவர்களின் நலன் கருதி கடந்த காலங்களில் நாட்டினுடைய  அதிமேதகு ஜனாதிபதி மகிந்தராஜபக்ச அவர்களினால் கல்வி நடவடிக்கைக்கென பாரிய ஐந்து கட்டடத்தொகுதிகளை திறந்து தந்துள்ளார். அதற்கு இவ்விடத்தில் நான் நன்றி கூற கடமைப்பட்டுள்ளேன்.

உயர்கல்வி அமைச்சர் கௌரவ எஸ்.பி.திசாநாயக்க அவர்களின் ஒத்துழைப்பினூடக மாணவர்களுக்குரிய கட்டட வசதிகளை  நிவர்த்தி செய்யக்கூடியதாகவிருந்தது. எதிர் காலத்தில் கிழக்கு பல்கலைக்கழகத்திற்கு வருகை தரும் மாணவர்களின் நலன் கருதி மேலும் பல்வேறு கல்விசார் வசதிகளை பெற்றுக்கொடுக்க நடவடிக்கை எடுக்கப்படும். என்று அவர் மேலும் தெரிவித்தார்.