சித்தாண்டி ஸ்ரீ சித்திரவேலாயுத சுவாமி பேராலய வருடாந்த மகோற்சவம்

(நித்தி) மீன்பாடும் தேனாடாம் மட்டுமா நகர்தனிலே வடபால் உயர் கோபுரத்தோடு அருள்வளமும் திருவளமும் நிலவளமும் நிறைந்திலங்கு செந்தமிழ் மாட்சியும் சைவத்தின் உயர் நெறியும் கமழும் தொன்மை வாய்ந்த அழகு நிறை சித்தாண்டி கிராமத்தின் மத்தியில் பன்னெடுங்காலம் திருக்கோயில் கொண்டு வேண்டுவோர்க்கு வேண்டுவன வழங்கி அருள் சோதி வீசும் ஸ்ரீ சித்திரவேலாயுத சுவாமி பேராலய வருடாந்த மஹோற்சவம் நிகழும் மங்களகரமான ஜய வருடம் ஆவணித் திங்கள் 9ஆம் நாள் (25.08.2014) திங்கட்கிழமை சதுர்த்தசி திதியும் ஆயிலிய நட்சத்திரமும் கூடிய சுபவேளையாகிய நண்பகல் 12.05 மணியளவில் ஆலய பிரதம குரு ஈசான சிவாச்சாரிய திலகம் சிவஸ்ரீ.எம்.கே.குகன் குருக்கள் மற்றும் மகோற்சவ பிரதம குரு கலாநிதி ஸ்ரீ ஐயப்பதாஸ சாம்பசிவ சிவாச்சாரியார் (ஜே.பி) ஆகியோரின் தலைமையில் கோடியேற்றத்துடன் ஆரம்பமாகி ஆவணித் திங்கள் 24ஆம் நாள் (09.09.2014) செவ்வாய்க் கிழமை முற்பகல் 8 மணி 20 நிமிடமளவில் இடம்பெறும் சரவணப்பொய்கை தீர்தோற்சவத்துடன் நிறைவுபெறும்.

ஆலயத்தின் அதி விசேட தினங்களான மயில்கட்டுத் திருவிழா 06.09.2014 தொடக்கம் 08.09.2014 ஆகிய மூன்று தினங்களிலும் அதிகாலை 4.00 மணியளவில் முருகப்பெருமான் வள்ளி, தெய்வானை சமேதராய் ஆறுமுகமும் பன்னிரு திருக்கரங்களுடன் நீல மயில் ஏறி பவனி வந்து பக்தர்களுக்கு அருள்பாலிக்கும் இக் கண்கொள்ளாக் காட்சியை கண்டுகளிக்க இவ் எல்லையில் எம்மவர்க்கு இப் பெருவிழாக்காண இப்பிறவி வாய்ந்ததே என்று அடியார்கள் குன்று தோறாடும் குமரன், குறவள்ளி கந்தன், கோலமயில் வாகனன், குமரக்கடவுளின் அருட்கடாட்சங்களை பெற்றேகும் வண்ணம் அன்புடன் அழைக்கின்றனர்