தமிழியல் விருது 2014 முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளன

எழுத்தாளர் ஊக்குவிப்பு மையம் வருடம் தோறும் நடத்தும் தமிழியல் விருதின்  இவ்வருடத்துக்கான விருதாளிகளின் விபரம் வெளியிடப்பட்டுள்ளது. 

எழுத்தாளர் ஊக்குவிப்பு மையம் ஆண்டுதோறும் ஈழத்திலும், வெளிநாடுகளிலும் வாழ்கின்ற ஈழத்துத் தமிழ்ப் படைப்பாளிகளை ஊக்குவிக்கும் வண்ணம், தமிழியல் விருது வழங்கி வருகின்றது. 

6வது தமிழியல் விருதாக அமையும் இவ்வருடத்துக்கான விருதுகளை 25 விருதாளிகளின் பெறவுள்ளனர். இவர்களது விபரங்களை எழுத்தாளர் ஊக்குவிப்பு மையம் வெளியிட்டுள்ளதுடன்  இவ்விருதுகள் வழங்கும் நிகழ்வின் திகதி மற்றும் விபரம் பின்னர் அறிவிக்கப்படவுள்ளதாகவும் எழுத்தாளர் ஊக்குவிப்பு மையத்தின் மேலாளர் ஓ.கே.குணநாதன் தெரிவித்தார். 

இலக்கிய மேம்பாட்டுக்கு உரமாய் உழைத்த மிகச் சிறந்த மூத்த படைப்பாளிக்கான எழுத்தாளர் ஊக்குவிப்பு மைய ஸ்தாபகர் ஓ.கே.பாக்கியநாதன் உயர் தமிழியல் விருதை டாக்டர் ஜின்னாஹ் ஷரிபுத்தீன் பெறுகிறார்.

தமிழ் இலக்கிய மேம்பாட்டுக்கு  உரமாய் உழைத்த மைக்கான வவுனியூர் ஸ்ரீராமகிருஷ்ணா கமலநாயகி தமிழியல் விருதுகளை  பேராசிரியர் வே. அந்தனிஜான் அழகரசன் (அமெரிக்கா), பேராசிரியர் கு.கலாமணி (யாழ்ப்பாணம் ), நுணாவிலூர் கா.விஜயரத்தினம் (லண்டன் ) ,  ஆ.தங்கராசா (மட்டக்களப்பு),  நந்தினி  சேவியர் (திருகோணமலை)  ஆகியோர் பெறுகின்றனர். 
தமிழ்ப்பணியாளர் தமிழியல் விருதான கல்விமான் வ.கனகசிங்கம் தமிழியல் விருதை பெறும்  அயல்நாட்டுப் படைப்பாளியாக நாவலாசிரியர் கு.சின்னப்பாரதி (நாமக்கல்-தமிழ்நாடு) பெறுகிறார்.

இன நல்லுறவுக்காக உழைத்த சிங்களமொழிப் பணியாளருக்கு வழங்கப்படும் இனநல்லுறவு தமிழியல் விருதான  ஆலங்கேணி கணபதிப்பிள்ளை – செல்லம்மா தமிழியல் விருது  இம்முறை  எஸ். கொடகே (ஸ்தாபகர் : கொடகே சாகித்திய விருது) க்குக் கிடைக்கிறது.

ஓவியருக்கான தமிழியல் விருதான  ஓவியர் கிக்கோ தமிழியல் விருது  என்.எஸ்.ஞானகுருபரன்,  சிறந்த வடிவமைப்புக்கான தமிழியல் விருதான பம்பைமடு கந்தையா-இரஞ்சிதமலர் தமிழியல் விருது கே.எம்.மஸாஹிம்  ( நூல் : உயிரின் உண்மைகள் ), சிறந்த சஞ்சிகைக்கான  தமிழியல் விருதான  பம்பைமடு நாகலிங்கம் - நல்லம்மா தமிழியல் விருது  தாய்வீடு (கனடா)  சங்சிகைக்கும் வழங்கப்படுகிறது. 
அத்துடன், சிறந்த நூலுக்கான தமிழியல் விருதுகள் 10ஆயிரம் ரூபா பண முடிச்சுடன், 2013இல் வெளிவந்த 13 நூல்களுக்கு வழங்கப்படுகிறது. 

சிறுகதை க்கான திருமலை லூர்து அருளானந்தம் தமிழியல் விருது கோ. சேனாதிராஜா   எழுதிய குதிரைகளும் பறக்கும் நூலுக்கும், நாவலுக்கான நாவலாசிரியை பவளசுந்தரம்மா தமிழியல் விருது, தமிழ்க்கவி  எழுதிய ஊழிக்காலம் நூலும், கவிதைக்கான  புலவர்மணி ஆ.மு.ஷரிபுத்தீன் தமிழியல் விருது கவிஞர் த.ஜெயசீலன் எழுதிய எழுதாத ஒரு கவிதை நூலுக்கும், கவிஞர் எருவில்மூர்த்தி  தமிழியல் விருது த.உருத்திரர எழுதிய ஆண்கோணி நூலுக்கும் வழங்கப்படுகிறது. 

சிறுவர் இலக்கியத்துக்கான தகவம் வ.இராசையா தமிழியல் விருது சபா சுப்பிரமணியம் எழுதிய உத்தமன் கதைகள் நூலுக்கும், நாடகத்துக்கான  கலைஞர் ஒ.கணபதிப்பிள்ளை தமிழியல் விருது பாலு மகேந்திரா எழுதிய கதை நேரம் (தொலைக்காட்சி நாடகங்கள்) நூலுக்கும், காவியத்துக்கான  கவிஞர் கல்லாறன்மு.கணபதிப்பிள்ளை தமிழியல் விருது   டாக்டர் ஜின்னாஹ் ஷரிபுத்தீன் எழுதிய எல்லாள காவியத்துக்கும், சமய நூலுக்காக வழங்கப்படும் அருட்கலைவாரிதி  சு.சண்முகவடிவேல் தமிழியல் விருதுஎன்.கே.எஸ்.திருச்செல்வம்  எழுதிய பாரம்பரியமிக்க கதிர்காம யாத்திரையும் கந்தசாமிக் கடவுளின் புனித பூமியும் நூலுக்கும் வழங்கப்படுகிறது. 

கட்டுரைக்கான செந்தமிழ்ச்செல்வர் சு.ஸ்ரீகந்தராஜா தமிழியல் விருது தமிழ் நாட்டில் வசிக்கும் கே.ஜீ.மகாதேவா  எழுதிய நிஜங்களின் பதிவுகள் நூலுக்கும், வரலாற்று ஆய்வுக்கென வழங்கப்படும் ஆலங்கேணி கணபதிப்பிள்ளை-செல்லம்மா  தமிழியல் விருது ஞா.ஜெகநாதன் எழுதிய நாகர் எழு வன்னி நூலுக்கும், ஆய்வியலுக்கான  வைத்தியாச்சாரி மீராசாஹிபு அஹமது தமிழியல் விருது  எம்.சீ. ரஸ்மின் எழுதிய போர்கால சிங்கள இலக்கியங்கள் நூலுக்கும், பயணக்கட்டுரைக்கான பதிவாளர்நாயகம் எஸ்.முத்துக்குமாரன் தமிழியல் விருது  ஞா. பாலச்சந்திரன் எழுதிய 'அங்கோர்' உலகப் பெருங்கோயில் நூலுக்கும், அறிவியலுக்கான  வித்தியாகீர்த்தி ந.சந்திரகுமார் தமிழியல் விருது கலாநிதி கனகசபாபதி எழுதிய  சுதேச மருத்துவம் பற்றிய இலங்கை தமிழ் நூல்கள் ஆகியனவும் பெறுகின்றன.