52 வருடங்களின் பின் பாடசாலைக்கு பெருமை சேர்த்த மாணவன்

(த.லோகதக்சன்)

தற்போது வெளியாகிய ஐந்தாம் தர புலமைப் பரீட்சைகள் முடிவில் மட்டக்களப்பு கல்வி வலயத்திற்குட்பட்ட நாவற்கேணி ஸ்ரீ கண்ணகி வித்தியாலயத்தில் பாடசாலை ஆரம்பிக்கப்பட்டு 52 வருடங்களின் பின் முதல் தடவையாக ஒரு மாணவர் சித்தி பெற்றுள்ளார்.

இப்பாடசாலையானது 1962ம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்டு 52 வருடங்களின் பின் முதல் தடவையாக பு.மிருசனன் 162 புள்ளிகளைப் பெற்று பாடசாலைக்கு பெருமை சேர்த்துள்ளதாக பாடசாலை அதிபர் வணக்கத்துக்குரிய ஸ்ரீ.வாலராஜ் தெரிவித்தார்.

சித்தியடைந்த மாணவனுக்கு மட்டக்களப்பு மாவட்ட தமிழ் தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் சீனித்தம்பி யோகேஸ்வரன் திங்கட்கிழமை தனது அலுவகத்தில் வைத்து பொன்னாடை போர்த்தி பாராட்டி கௌரவித்தார்.

அத்தோடு பாடசாலை ஆரம்பிக்கப்பட்டதிலிருந்து முதல் தடவையாக சித்தி பெற வைத்தமைக்காக பாடசாலை அதிபர் வணக்கத்துக்குரிய ஸ்ரீ.வாலராஜிக்கும் பொன்னாடை போர்த்தி கௌரவித்தும், கற்பித்த ஆசிரியரான திருமதி.பி.ராஜரெட்ணத்தையும் பாராட்டினார்.

இப்பாடசாலையில் இருந்து ஐந்து மாணவர்கள் ஐந்தாம் தர புலமைப் பரீட்சைக்கு தோற்றியுள்ளனர்.

சித்தி பெற்ற மாணவனுக்கு துவிச்சக்கரவண்டி மற்றும் ஏனைய உதவிகளை வழங்குவேன் என பாராளுமன்ற உறுப்பினர் உறுதியளித்தார்.

அத்தோடு ஏனைய மாணவர்கள் மற்றும் சித்தி பெற்ற மாணவனின் பெற்றோர்களையும் பாராட்டினார்.

இதன் போது பாடசாலை அதிபர் வணக்கத்துக்குரிய ஸ்ரீ.வாலராஜ், கற்பித்த ஆசிரியரான திருமதி.பி.ராஜரெட்ணம், பிரதி அதிபர் மற்றும் மாணவர்கள் கலந்து கொண்டனர்.