சிறுமி துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தப்பட்டு கொலை

மட்டக்களப்பு, காத்தான்குடி பொலிஸ் பிரிவில் புதன்கிழமையன்று (10) 8 வயது சிறுமியொருவரை துஷ்பிரயோகத்துக்கு உட்படுத்தி படுகொலை செய்த சம்பவத்தோடு தொடர்புடைய சந்தேகநபரை இன்று வியாழக்கிழமை (11) கைது செய்ததாக காத்தான்குடி பொலிஸார் தெரிவித்தனர்.

நேற்று புதன்கிழமை (10) மாலை மேற்படி சிறுமியின் தந்தையினது பலசரக்கு கடைக்கு சென்றுள்ள சந்தேக நபர் மழை பெய்வதால் குடையொன்றை கேட்டுள்ளார்.


இதன்போது அந்நபருக்கு குடையொன்றை கொடுத்துள்ள சிறுமியின் உறவினர் ஒருவர் சிறுமியையும் கூடவே அனுப்பியதுடன், சந்தேகநபரின் சகோதரியின் வீட்டில் அவரை விட்டுவிட்டு, குடையை எடுத்து வருமாறு சிறுமிக்கு அறிவுறுத்தியுள்ளார்.

இவ்வாறு இந்நபருடன் சென்ற சிறுமி வீடு வந்து சேராததால் சிறுமியின் குடும்பத்தினரும் அயலவர்களும் சிறுமியை தேடியுள்ளனர். சிறுமியை காணவில்லையென பொலிஸாருக்கும் அறிவித்துள்ளனர்.

மாலை 7மணியளவில் காத்தான்குடி பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி ஆர். வெதகெதரவின் தலைமையிலான பொலிஸார், குறித்த சந்தேக நபரின் சகோதரியின் வீட்டை உடைத்துப் பார்த்த போது பை ஒன்றினுள் சிறுமியின் கை கால் மற்றும் வாய் கட்டப்பட்டு கட்டிலுக்கு கீழே மயக்கமான நிலையில் போடப்பட்டிருப்பதை கண்டுள்ளனர்.

உடனடியாக சிறுமி காத்தான்குடி ஆதார வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டு பின்னர் அங்கிருந்து மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்படும் போது உயிரிழந்துள்ளார்.

சிறுமியின் சடலம் தற்போது மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து, சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேக நபரை காத்தான்குடி பொலிஸார் வியாழக்கிழமை (11) அதிகாலை செங்கலடி- பதுளை வீதியில் வைத்து கைது செய்துள்ளனர்.

சிறுமியை துஷ்பிரயோகத்துக்குட்படுத்தி கொலை செய்திருக்கலாமென சந்தேகிப்பதாக காத்தான்குடி பொலிஸார் தெரிவித்தனர்.

குறித்த சந்தேக நபர் காத்தான்குடியை பிறப்பிடமாக கொண்டவர் என்றும் மூன்று பிள்ளைகளின் தந்தையெனவும் காத்தான்குடி பொலிஸார் குறிப்பிட்டனர்.

இந்த சம்பவம் தொடர்பாக விசாரணைகளை மேற்கொண்டுவருவதாக காத்தான்குடி பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.