முதலிடம் பெற்ற மட்டு மாநகர சபைக்கு மட்டக்களப்பில் மாபெரும் வரவேற்பும் கௌரவமும்.

( சிவம் ,  உதயகாந்த் )

கிழக்கு மாகாணத்தில் முதல் முறையாக கிழக்கு மாகாண பிரதம செயலாளர் அலுவலகத்தினால் நடாத்தப்பட்ட அதிவிசேட விருது வழங்கும் விழா  2013 இல் போட்டியடிப்படையில்  உள்ளூராட்சி மன்றங்கள், திணைக்களங்கள், அமைச்சுக்களுக்கிடையில் நடாத்தப்பட்ட தெரிவுகளுக்கமைவாக கிழக்கு மாகாணத்தில் போட்டியிட்ட 30 உள்ளுராட்சி மன்றங்களிலும் முன்னிலைவகித்து மட்டு மாநகர சபை முதலிடத்தினைப் பெற்று சாதனை படைத்துள்ளது.

இவ்வாறாக சாதனைபடைத்த மாநகர சபையின் ஆணையாளர் மா.உதயகுமார் உட்பட அதன் ஊழியர்கள் அனைவரையும் கௌரவிக்கும் வண்ணம் இன்று (11) வியாழக்கிழமை மட்டக்களப்பு நகரில் மாபெரும் வரவேற்பு மற்றும் கௌரவிப்பு நிகழ்வும் இடம்பெற்றது.

இந்நிகழ்வின் ஆரம்ப நிகழ்வாக செல்வநாயகம் எரிபொருள் நிறப்பு நிலையத்தின் அருகாமையில் இருந்து சாதனை படைத்த மாநகர சபையின் உத்தியோகத்தர்கள் , ஊழியர்கள் அனைவரையும் வரவேற்று மலர் மாலை அணிவித்து அங்கிருந்து சிசிலியா, வின்சன்ட் பெண்கள் உயர்தர பாடசாலைகளின் மாணவிகளின் பாண்ட் வாத்திய இசை முழங்க ஊர்வலமாக காந்தி பூங்கா வழியாக மாநகர சபை மண்டபத்தினை  வந்தடைந்தது.

இம் மாபெரும் வரவேற்பு நிகழ்வினை  மட்டக்களப்பு மாவட்ட சிவில் சமூகம், மாநகர வரியிறுப்பாளர் சங்கம், வர்த்தக சங்கம், மாவட்ட கைத்தொழில் வர்த்தக சம்மேளனம் , வர்த்தக சம்மேளனம் , இஸ்லாமிய வர்த்தக நலன்புரி அமைப்பு ஆகிய அமைப்புக்கள் இணைந்து மிகவும் திறம்பட நடாத்தியிருந்தனர்.

அதனைத்தொடர்ந்து மாநகர சபை மண்டபத்தில் இடம்பெற்ற விசேட நிகழ்வில்  மங்கள விளக்கேற்றப்பட்டு  அதனைத்தொடர்ந்து இவ்வெற்றியினை தனது அயராத முயற்சி மற்றும் அற்பணிப்பு ஆகியவற்றின் ஊடாக மட்டக்களப்பு மாநகரத்திற்கு  பெற்றுத்தந்த மாநகர ஆணையாளர் மா.உதயகுமார் அவர்களுக்கு வர்த்தக பிரமுகர்களினால் மாலைகள் அணிவித்தும் , பொன்னாடைகள் போர்த்தியும் கௌரவிக்கப்பட்டார்.

அங்கு உரையாற்றிய ஆணையாளர் தமது உரையில் ''நமது வெற்றியை நாளைய சரித்திரம் சொல்லும் , இப்படை தோற்பின் எப்படி வெல்லும்..... எனும் இனிய பாடல் வரிகளினூடாக அரச நிறுவனங்கள், அரச சார்பற்ற நிறுவனங்கள், சிவில் சமூகம் , ஊடகவியலாளர்கள் மற்றும் பொது மக்கள் ஆகியோர் மாநகர சபையுடன் இணைந்து செயற்படுகின்றனர் என்பதையும் மேலும் மாநகர உத்தியோகத்தர்கள் , ஊழியர்களின் அயராத அர்ப்பணிப்புடன் கூடிய சேவையினாலேயே இவ்வெற்றியை தாம் அடைய முடிந்தது எனும் வகையில் தமது உரையினை நிகழ்த்தியிருந்தார்.