சேவையில் உள்ள சேவகர்களின் கண்கள்; குறுடாய்ப் போனது ஏன்?

சேவை செய்வது என்பது இறைவன் ஒவ்வொருவருக்கும் கொடுத்த உன்னத கொடை. அந்தக் கொடையை சரியாக செய்வது பொறுப்பானவர்களின் கடமையாகும். அதைப் பெற்றுக்கொள்வோர் சிறந்த முறையில் பயன்படுத்த வேண்டும். இல்லையெனில் தேவையுள்ளோருக்கு அதைப் பெற்றுக்கொடுக்க பொறுப்பான அதிகாரிகள் செயல்பட வேண்டும். இன்று எம் நாட்டில் நடைபெறும் பெரும்பாலான விடயங்கள் வேதனையை தருவனவாகக் காணப்படுகின்றது.



  கடந்த 2004 .12 .26 ஏற்பட்ட சுனாமி அனர்த்தத்தின் போது எமது நாடும் பாதிக்கப்பட்டது யாவரும் அறிந்த உண்மை. அதிகமான மக்கள் தங்களின் உயிர்கள் , உடைமைகள் யாவற்றையும் இழந்து தவிர்த்த போது ஏனைய நாடுகள் நேசக்கரம் நீட்டி உயிரைத் தவிர இழந்து போன பொருட்களை முடிந்தவரை பெற்றுக்கொடுத்தது. அவை தேவையுள்ளோருக்கும் , தேவையற்றோருக்கும் கிடைத்தமையை அறிய முடிகின்றது. ஆனால் இந்த உதவியானது பலருக்கு மேலதிகமாக கிடைத்தமையை எவரும் மறுக்க முடியாது. அதே நேரம் பலருக்கு குறிப்பிட்டளவு கிடைத்தமையை யாரும் மறுக்க முடியாது.

   இன்று எம் நாட்டை நோக்கும் போது 25 மாவட்டங்களிலும் எத்தனையோ ஆயிரமாம் ஆயிரம் குடும்பங்கள் இருப்பதற்கு ஒரு இருப்பிடம் கூட  இல்லாமல் தவிக்கின்ற போது  சுனாமியால் பாதிக்கப்பட்டவர்களுக்கென்று அமைத்துக் கொடுக்கப்பட்ட எத்தனையோ வீடுகள் இருப்பதற்கு யாருமே இல்லாமல் வெறுமையாய் காணப்படுகின்றது.  வீட்டுக்கு மனிதனா? அல்லது மனிதனுக்கு வீடா? என்ற சந்தேகம் ஏற்படுகின்றது.

 இன்றும் எம் நாடு மற்றைய நாடுகளின் உதவியைப் பெற்று அதிகமானவர்களுக்கு வீடுகளை அமைத்துக் கொடுக்கின்றது. ஆனால் இவையெல்லாம் சரியாக பொறுப்பான அதிகாரிகளால் பகிர்ந்தளிக்கப்படுகின்றதா  என்பது சந்தேகமாகவே உள்ளது. ஏனெனில் சுனாமி வீட்டுத்திட்டங்கள் கொடுக்கப்படும் போது ஒரே குடும்பத்திற்கு பல வீடுகள் கிடைக்கப்பட்டது இதற்கெல்லாம் யார் காரணம்? கிராம சேவகரா அல்லது பிரதேச செயலாளரா அல்லது மாவட்ட அதிகாரியா அல்லது யாவருமா?

  யாராக இருந்தாலும் பராவாயில்லை நீங்கள் கொடுத்த வீடுகள் இன்று இருப்பதற்கு யாரும் இல்லாமல் பாழடைந்து கிடக்கின்றமை உங்கள் கண்ணில் படவில்லையா? எத்தனையோ வீடுகள் பெறுமதியற்ற நிலையில் விற்கப்படுகின்றது இது உங்கள் காதுகளில் கேட்கவில்லையா? அரசு தரும் பணத்தை ஏன் விரயம் செய்கின்றீர்கள்? பொறுப்பான அதிகாரிகளேஇ கண்களை மூடிக்கொண்டு செயற்படாமல் கண்களைத் திறந்து செயற்படுங்கள். கிராமங்களில் எத்தனையோ குடும்பங்கள் இருப்பிடம் இல்லாமல் தத்தளிக்கின்றமை உங்கள் கண்களில் படவில்லையா? அப்படி தவிக்கும் மக்களுக்கு யாரும் இல்லாமல் இருக்கின்ற வீடுகளைப் பெற்றுக்கொடுத்து இவ்வாறான மக்களின் வாழ்வில் ஒளியேற்றுங்கள்.

 எடுத்துக்காட்டாக கூறவேண்டுமானால் கல்முனைப்பிரதேசத்தில் அமைந்துள்ள பெரிய நீலாவனையில் செஞ்சிலுவைச் சங்கம் அமைத்துக் கொடுத்த தொடர்டமாடி வீடுகள் இ களுவாஞ்சிகுடிப் பகுதியில் அமைந்துள்ள மாடிவீடுகள் இ  மட்டக்களப்பு பகுதியில் கொடுக்கப்பட்ட வீடுகள் இன்னும் எத்தனையோ இடங்களில் வீடுகள் யாரும் இல்லாமல் காணப்படுகின்றன. இவ்வாறு வீணாக வீடுகள் அழியாமல் பொறுப்பான அதிகாரிகள் தேவையானோருக்கு பெற்றுக்கொடுக்க முன்வருமாறு கேட்கின்றோம்.


"பொறுப்பான அதிகாரிகளின் உண்மைத்துவமான செயல் தத்தளிக்கும் மக்களை வாழவைக்கும்'.                                                                                                       - என் .எஸ் .எஸ் -

c