மட்டக்களப்பில் ஏழு நாடுகளின் கூட்டு இராணுவ ஒத்திகைக் கண்காட்சி!

(சுழற்சி நிருபர்)
இலங்கை முப்படைகளும் சீனா, பாகிஸ்தான், மாலைதீவு, பங்களாதேஸ், நேபாளம், பிறேசில் ஆகிய ஏழு நாடுகளும் இணைந்து மேற்கொண்ட கூட்டு இராணுவ ஒத்திகைக் கண்காட்சி இன்று 24.09.2014 புதன்கிழமை பிற்பகல் மட்டக்களப்பு மாவட்டத்தின் புன்னைக்குடாக் கடற்கரையில் இடம்பெற்றது.


'நீலத் தரை வரைபடம்' 'Blue Land Map”' எனப் பெயரிடப்பட்ட இந்த இராணுவ ஒத்திகையைப் பார்வையிட இராணுவத் தளபதி லெப்டினன்ற் ஜெனரல் தயா ரத்னாயக்க LIEUTENANT GENERAL R.M. DAYA RATNAYAKE, பிறேசில் நாட்டு பிரதி தலைமைத் தூதர் ஜொஸ் ரொபேட்டோ பரகோபியக் (Embassy of Brazil Deputy Head of Head of Mission JOSE ROBERTO PROCOPIAK)  இராணுவ நடவடிக்கைப் பணிப்பாளர் ஜெனரல் சுமேத பெரேரா, 22 வது இராணுவ பயிற்சி;ப் பிரிவு பணிப்பாளர் பிரிகேடியர் றோஹித்த தர்மசிரி, காலாட்படை பிரிகேடியர் ராஜபக்ஷ, இணைந்த இராணுவ பயிற்சிப் பணிப்பாளர் பிரிகேடியர் பிரசன்ன சில்வா, லொஜிஸ்டிக் கொமாண்டர் மேஜர் ஜெனரல் சிரந்த திஸாநாயக்க உள்ளிட்டோரும் முப்படைகளின் உயர் இராணுவ அதிகாரிகளும் வருகை தந்திருந்தனர்.

இந்த இராணுவ ஒத்திகை நிகழ்வுகளைப் பார்வையிட ஆயரக்கணக்கான தமிழ் முஸ்லிம் சிங்கள பொதுமக்களும் திரண்டிருந்தனர்.
எதிரியின் தளத்தை முப்படையினரும் இணைந்து எவ்வாறு வெற்றிகரமாகத் தாக்கியளிப்பது என்பதை இந்த இராணுவ கூட்டு ஒத்திகைக் கண்காட்சியில் காட்டப்பட்டது.

2007 ஆம் ஆண்டு கிழக்கில் யுத்தம் முடிவடைந்த பின்னர் ஹெலிகொப்டர்கள், மிக் ரக போர் விமானங்கள் மற்றும் கடற்படைக் கப்பல்கள் இணைந்து குண்டுகளைப் பொழிந்த காட்சியை பொது மக்கள் நேரடியாகக் காணக் கிடைத்தது இதுவே முதன்முறையாகும்.

இலங்கை முப்படையினரின் கூட்டுப் பலத்தை நேரடியாகக் கண்டு கொள்ள இந்த இராணுவ தாக்கியழிப்பு ஒத்திகைக் கண்காட்சி பொதுமக்களுக்கு ஒரு வாய்ப்பளித்திருக்கும் என்று இராணுவத் தளபதி லெப்டினன்ற் ஜெனரல் தயா ரத்னாயக்க தெரிவித்தார்.