வவுணதீவு பிரதேசத்தில் 'திவிநெகும சஹன அருண" விசேட கடன் வழங்கிவைப்பு

(ச.சுரேந்திக்கா)
வாழ்வின் எழுச்சி அபிவிருத்தி திணைக்களத்தின் விசேட திட்டத்தின்கீழ் வாழ்வின் எழுச்சி சமுதாய வங்கியினால் 'திவிநெகும சஹன அருண"  எனும் வங்கிக்கடன் நடளாவியரீதியில் இன்று காலை திவிநெகும பயனாளிகளுக்கு வழங்கிவைக்கப்பட்டது.


இந் நிகழ்வின் ஆரம்ப நிகழ்வுகள் மட்டக்களப்பு மாவட்டத்தின் வவுணதீவு பிரதேச செயலாளர் பிரிவிலுள்ள  வாழ்வின் எழுச்சி சமுதாய வங்கிகளிலும் இடம்பெற்றது.

இதில் பிரதம அதிதியாக மண்முனை மேற்கு பிரதேச செயலாளர் எஸ்.சுதாகர் அவர்கள் கலந்துகொண்டு திவிநெகும பயனாளிகளுக்கு கடன்களை வழங்கி இந் நிகழ்வினை ஆரம்பித்துவைத்தார்.

இதன்போது வாழ்வின் எழுச்சி முகாமைத்துவப் பணிப்பாளர் த.சத்தியசீலன்,வாழ்வின் எழுச்சி சமுதாய கரவெட்டி வங்கி முகாமையாளர் மணிவண்ணன், புதுமண்டபத்தடி வங்கி முகாமையாளர் கே. தில்லையம்பலம் , திட்ட முகாமையாளர் திருமதி.எஸ்.தமயந்தி மற்றும் வாழ்வின் எழுச்சி அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் வங்கி கட்டுப்பாட்டு சபை உறுப்பினர்கள் என பலரும் கலந்துகொண்டனர்.

இக் கடன் ரூபா.5,000 தொடக்கம் ரூபா.50,000 வரை திவிநெகும பயனாளிகளுக்கு வழங்கப்படுகின்றது. இதற்கு பிணை இல்லை,வயதெல்லை இல்லை,அடைமானம்(ஈடு) இல்லை போன்ற சலுகைகள் உள்ளன. மேலும் இக்கடன் மீளச்செலுத்தும் சலுகைக் காலம் ஒரு வருடம் எனவும், வருடாந்த வட்டி 4வீதம் எனவும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

இந் நிகழ்வில் கலந்துகொண்ட பிரதேச செயலாளர் கருத்துத் தெரிவிக்கையில்,

திவிநெகும பயனாளிகளுக்கு அதிகம் சலுகைகள் கொண்டதாக சஹன அருண" கடன் அமைந்துள்ளது. ஏனைய கடன்களை மக்கள் பெறுவதானால் பல ஆவணங்கள் சமர்ப்பிக்க வேன்டும் அத்துடன் பிணையாளிகள் ஒப்பமிடவேன்டும். ஆனால் இக் கடனுக்கு அவ்வாறான விடயங்கள் தேவைப்படாது.


இப் பிரதேசத்தில் சில நிறுவனங்களினால் அதிக வட்டிக்கு  கடன்கள் வழங்கப்படுகின்றது. நிறுவனங்கள் ஏனைய தனியார் அமைப்புக்கள் கடன் வழங்கினால் பெரும்பாலான மக்கள் வட்டிவீதத்தைப் பார்ப்பதில்லை. கடன் பெறுவதிலே கவனத்தைச் செலுத்துகின்றனர். இந் நிலை மாறவேன்டும். நாம் கடன் பெறமுன்னர் அதன் வட்டி எவ்வளவு என்றுதான் ஆராந்து பார்க்கவேன்டும்.

இவ்வாறு சுயதொழில்களுக்கம் ஏனைய சிறு வருமானம் ஈட்டக்கூடிய தொழிலில் ஆர்வம் உள்ளவர்களுக்கு இக் கடன் மிக  மிக பயனுள்ளதாக அமையும் என நம்புகின்றேன்.

எந்தவொரு வங்கியாலும் இவ்வாறு சலுகைகள் உள்ள கடன்கள் வழங்கப்படமாட்டாது. இக் கடனைபெற்று சிறந்த முறையில் பயன்படுத்தினால், ஒவ்வொருவரும் நல்ல வருமானத்தைப்பெற்று வாழ்வின் எழுச்சிபெறமுடியும்.

என கூறினார்.