உயிர்வாயு தொழினுட்பத்தை விரிவாக்குதல் சம்பந்தமான பயிற்சி நெறி

(சுழற்சி நிருபர்)
இலங்கையில் நிலைத்து நிற்கும் அபிவிருத்தியை உறுதிசெய்யும் நோக்கிலும் காலநிலை மாற்றத்தினால் ஏற்படும் பாதிப்புக்களை குறைப்பதற்காகவும் உயிர்வாயு தொழினுட்பத்தை விரிவாக்குதல் சம்பந்தமான பயிற்சி நெறி இன்று திங்கட்கிழமை 29.09.2014 மட்டக்களப்பு மாவட்டத்தின் கோட்டைக்கல்லாறு மகா வித்தியாலயத்தில் நடத்தப்பட்டது.

சுவிற்ச் ஏசியா (Switchasia) நிறுவனத்தின் அனுசரணையோடு பிரக்டிகல் அக்ஸன் நிறுவனம் இந்த பயிற்சிக் கருத்தரங்கை ஏற்பாடு செய்திருந்தது.

கோட்டைக் கல்லாறு மகா வித்தியாலய அதிபர் ஆர். செல்வராஜா நிகழ்வை ஆரம்பித்து வைத்தார்.
கோட்டைக்கல்லாறு மகா வித்தியாலயத்தில் கல்விப் பொதுத் தராதரப் பத்திர சாதாரண தரம் மற்றும் உயர்தரத்தில் கற்கும் சுமார் 100 மாணவர்கள் இந்த இயற்கை வாயு தொழினுட்பம் பற்றிய விழிப்புணர்வூட்டல் பயிற்சி நெறியில் பங்குபற்றினர்.

உயிர்வாயு தொழினுட்பம் பற்றி விழிப்புணர்வூட்டும் தேசிய மற்றும் மாவட்ட ரீதியிலான விழிப்புணர்வுத் நிகழ்ச்சித் திட்டங்களின் ஒரு அங்கமாக இந்தப் பயிற்சி இடம்பெற்றது.

உயிர்வாயு தொழினுட்பத்தை ஊக்குவிப்பதற்கான திட்டமொன்றை தேசிய மற்றும் மாகாண ரீதியில் அபிவிருத்தி செய்வதற்காக தெரிவு செய்யப்பட்ட முக்கிய பகுதிகளில் பயிற்சிப் பட்டறைகளும் அமர்வுகளும் நடத்தப்படுகின்றன.
நிகழ்ச்சித் திட்ட முகாமையாளர் ஐ.எச்.எல். தரங்கா , வடக்கு கிழக்கு இணைப்பாளர் கே. ராஜ் சங்கர்;வளவியலாளர் அனுலா அன்ரன் ஆகியோர் பயிற்சி நெறிகளை வழங்கினர்.