வைத்தியர்களுக்கெதிராக ஒலுவிலில் ஆர்ப்பாட்டம்

(எம்.ஏ.றமீஸ்)
ஒலுவில் மாவட்ட வைத்தியசாலையில் கடமை நேரங்களில் வைத்தியர்கள் சமூகமளிப்பதில்லை என பிரதேச மக்களால் நேற்று(31) வைத்தியர்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து ஆர்ப்பாட்டம் இடம்பெற்றன. சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற அக்கரைப்பற்று பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி ஏ.எல்.எம்.ஜெமீல் தலைமையிலான குழுவினர் இவ் ஆர்ப்பாட்டத்தினை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தனர்.
நேற்றுக் காலை வேளை ஒலுவில் பிரதேசத்தைச் சேர்ந்த ஏ.எல்.இஜாஸ் என்ற இளைஞர் தனது நண்பர்களுடன் இளநீருக்காக மரத்திலேறி குரும்பை பறித்துக் கொண்டிருந்த போது இவ் இளைஞன் கீழே விழுந்தார். இதனையடுத்து மயக்கமடைந்து உயிருக்காகப் போராடிக் கொண்டிருந்த இவ் இளைஞரை ஒலுவில் மாவட்ட வைத்தியசாலைக்கு கொண்டு சென்றபோது அங்கு வைத்தியர்கள் எவருமில்லமையால் ஒலுவில் பிரதேசத்தில் பதற்றம் நிலவியது.
உயிருக்காகப் போராடிய நிலையில் இருந்த இளைஞனை பல கிலோமீற்றர்களுக்கப்பால் உள்ள சம்மாந்துறை வைத்தியசாலைக்கு முச்சக்கரவண்டியில் கொண்டு சென்றனர். இதனைத் தொடர்ந்து அவர் தற்போது அவசர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டு பராமரிக்கப்பட்டு வருகின்றார்.
இவ்விடயம் தொடர்பில் ஆத்திரம் கொண்ட ஒலுவில் பிரதேச இiளுஞர்களும் பொதுமக்களும் வைத்தியசாலையின் நடவடிக்கைகள் தொடர்பில் மிகுந்த ஆத்திரம் கொண்டு வைத்தியசாலையின் பிரதான வாயிலை மூடி விட்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். மக்களுக்கு சேவையாற்ற வேண்டிய வைத்தியசாலை மூலம் தொடர்ச்சியாக நன்மை கிட்டாமல் போவதால் அதனை மூடுவது சிறந்தது என்ற வகையில் சிறிது நேரம் வைத்தியசாலையின் வாயில்கள் மூடப்பட்டுக் கிடந்தன.
'வைத்தியர்கள் வீட்டில் நோயாளிகள் இங்கு அவதி'  'அவசரத்திற்கு வரும் நோயாளி மரணமடைவதா?' வைத்தியசாலையின் சேவை மக்களுக்காகவா அங்கு கடமையாற்றும் உத்தியோகத்தர்களுக்கா? ஆபத்திற்கு உதவாக அம்புயுலன்ஸ் வண்டியை ஏல விற்பனை செய்யவும், உண்மையாக மக்கள் நலனில் அக்கறையோடு சேவையாற்றக் கூடிய வைத்தியர்களை சேவையில் இணைத்துக் கொள்ளுங்கள், சேவை மனப்பாங்கற்ற வைத்தியர்களை உடனடியாக இடமாற்றம் செய்யவும் போன்ற கோசங்களை எழுப்பி சுலோகங்கள் மற்றும் பதாதைகள் போன்றவற்றை தாங்கியவாறு ஆர்ப்பாட்டக்காரர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
இவ்வைத்தியசாலையில் கடமை நேரங்களில் வைத்தியர்கள் இருப்பதில்லை என்ற குற்றச்சாட்டுக்கள் அடிக்கடி வந்த வண்ணமே உள்ளன. அண்மையில் ஒலுவில் பிரதேச கடலில் நீராடிக் கொண்டிருந்த இளைஞர்கள் கடலில் மூழ்கியதையடுத்து இவ்வைத்தியசாலைக்கு கொண்டு சென்றபோதும் இங்கு வைத்தியர்கள் கடமையில் இருக்கவில்லை என்றும் இதனால் 10 கிலோமீற்றருக்கும் அப்பால் உள்ள அக்கரைப்பற்று ஆதார வைத்தியசாலைக்கு அவர்களைக் கொண்டு சேர்த்து சிகிச்சையளிக்க வேண்டி ஏற்பட்டதாகவும் ஆர்ப்பாட்டக்காரர்கள் விசனம் தெரிவித்தனர்.
இவ்வைத்தியசாலையில் இது போன்ற சம்பவங்கள் தொடர்ச்சியாக இடம்பெறுவதாக சம்பந்தப்பட்ட தரப்பினருக்கு தெரிவித்தும் இதுவரை எவ்வித நடவடிக்கைகளும் எடுக்கப்படவில்லை என பிரதேச மக்கள் தெரிவித்தனர். நேற்று நடந்த சம்பவம் பற்றி பிராந்தி சுகாதார சேவைகள் பணிப்பாளருக்கு வைத்தியசாலையின் அபிவிருத்திக்குழுவினர் தெரியப்படுத்தியதாகவும் இவ்விடயம் பற்றி எவ்வித நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்படவில்லை எனவும் வைத்தியசாலை அபிவிருத்திக்குழுவினர் சுட்டிக்காட்டினர்.