பிரதேச சாதனையாளர் கௌரவிப்பு நிகழ்வு

( ஏ.எல்.ஏ.றபீக் பிர்தௌஸ் )
நிந்தவூர் சமூக பொருளாதார மறுமலர்ச்சிக்கான அமைப்பினர் ஏற்பாடு செய்த நிந்தவூர் பிரதேச சாதனையாளர் கௌரவிப்பு நிகழ்வு நேற்று  நிந்தவூர் அல்- மஸ்ஹர் பெண்கள் உயர்தரப் பாடசாலையில் இடம் பெற்றது.
அமைப்பின் தலைவர் ஏ.பி.அப்துல் கபூர் தலைமையில் இடம் பெற்ற இந்நிகழ்வில் தொழில், மற்றும் தொழில் உறவுகள் பிரதியமைச்சர் றியர் அட்மிறல் சரத் வீரசேகர பிரதம அதிதியாகக் கலந்து கொண்டு, சாதனையாளர்களைக் கௌரவித்தார்.



மேலும் இந்நிகழ்வில் மாகாண சபை உறுப்பினர் சட்டத்தரணி ஆரீப் சம்சுதீன், கல்முனை வலயக் கல்விப் பணிப்பாளர் எம்.எஸ்.அப்துல் ஜலீல், நிந்தவூர் பிரதேச செயலாளர் திருமதி.றிபா உம்மா ஜலீல், நிந்தவூர் பிரதேச பாடசாலைகளின் அதிபர்கள், ஆசிரியர்கள், மாணவர்கள், சாதனையாளர்கள் எனப்பலரும் இதில் கலந்து கொண்டனர்.
இதில் கடந்த வருடம் நடைபெற்ற 5ம் வகுப்பு புலமைப் பரிசில் பரீட்சை, க.பொ.த( சாதாரன தரப்) பரீட்சை போன்றவற்றில் அதி திறமைச் சித்திகளைப் பெற்ற மாணவ, மாணவிகள்- பரிசுகள், நினைவுச் சின்னங்கள் என்பன வழங்கி கௌரவிக்கப்பட்டனர்.
பிரதியமைச்சர் சரத் வீரசேகர இங்கு கருத்துத் தெரிவிக்கையில்:- 'சிங்களவர், தமிழர், முஸ்லிம் என்ற வேறுபாடுகளின்றி,  எல்லா இனத்தவருக்குமாகவே நான் சேவை செய்து வருகின்றேன். எமது சேவைகளை மக்கள் பொருந்திக் கொள்கின்றனர். இதனால் தான் என்னை எல்லா இனத்தவர்களும் அழைத்து, ஆதரவளிக்கின்றனர்' எனத் தெரிவித்தார்.