ஆலையடிவேம்பில் கணினி மயப்படுத்தப்பட்ட பதிவாளர் பிரிவின் சேவைகள் ஆரம்பம்

(உ.உதயகாந்த்)

ஆலையடிவேம்பு பிரதேச செயலகத்தின் புதிய கணினி மயப்படுத்தப்பட்ட பதிவாளர் பிரிவின் நடவடிக்கைகள் பிரதேச செயலாளர் வி.ஜெகதீசனால் இன்று (02) காலை உத்தியோகபூர்வமாக அங்குரார்ப்பணம் செய்துவைக்கப்பட்டுள்ளன.

இதற்கமைய முதலாவது சேவை வழங்கலாகப் பொதுமகன் ஒருவருக்கு பிறப்பு அத்தாட்சிப் பத்திரம் வழங்கும் வைபவம் ஆலையடிவேம்பு பிரதேச செயலக மேலதிக மாவட்டப் பதிவாளர் எம்.பிரதீப் தலைமையில் இடம்பெற்றது. இதன்போது பிரதேச செயலாளரால் குறித்த அத்தாட்சிப் பத்திரம் வழங்கிவைக்கப்பட்ட நிகழ்வில் பதிவாளர் பிரிவின் பிரதம முகாமைத்துவ உதவியாளர் எம்.புண்ணியநாதன், அபிவிருத்தி உத்தியோகத்தர் திருமதி.ஜீவாநதி சிவகுமார், முகாமைத்துவ உதவியாளர் திருமதி.எம்.எம்.றுவைஸா மற்றும் அலுவலக உதவியாளர் பி.விக்கிரமார்த்தன் ஆகியோர் கலந்துகொண்டனர்.

இதன்போது கருத்துத் தெரிவித்த மேலதிக மாவட்டப் பதிவாளர் எம்.பிரதீப், அகில இலங்கை ரீதியான e-BMD வலைப்பின்னல் செயற்திட்டத்தின் மூலம் முதற்கட்டமாக அம்பாறை மாவட்டத்தின் ஆலையடிவேம்பு உள்ளிட்ட 20 பிரதேச செயலகப் பிரிவுகளையும் சேர்ந்த பொதுமக்கள் தமக்குத் தேவையான பிறப்பு, இறப்பு மற்றும் திருமண அத்தாட்சிப் பத்திரங்களை அவற்றுக்கான கட்டணங்களைச் செலுத்தி 5 நிமிடங்களுக்குள் பெற்றுக்கொள்ளக்கூடிய வசதிகள் செய்யப்பட்டுள்ளதுடன், 1960 ஆம் ஆண்டு தொடக்கம் 2008 ஆம் ஆண்டு வரையான மேற்குறித்த பத்திரங்களை ஒன்லைன் மூலம் தற்போது பெற்றுக்கொள்ளமுடியும் எனத் தெரிவித்ததுடன், மிக விரைவில் 2014 ஆம் ஆண்டு வரையிலான நாடளாவிய அனைத்து பிரதேச செயலகப் பிரிவுகளுக்குமான சேவை வழங்கும் பதிவாளர் பிரிவாக இதனை விஸ்தரிப்பதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.