ஆலையடிவேம்பு பிரதேச செயலகத்தில் இடம்பெற்ற ‘சஹன அருண’ கடன் வழங்கும் நிகழ்வு

(தியாஷினி)

ஆலையடிவேம்பு பிரதேச செயலக வாழ்வின் எழுச்சி (திவிநெகும) அபிவிருத்தி பிரிவின் ஏற்பாட்டில் தெரிவு செய்யப்பட்ட பயனாளிகளுக்கு ‘சஹன அருண’ துரித நிவாரணக் கடன் வழங்கும் நிகழ்வு இன்று (01) காலை வாழ்வின் எழுச்சி அபிவிருத்தி பிரிவின் மகாசங்க முகாமைத்துவப் பணிப்பாளர் ரி.பரமானந்தம் தலைமையில் இடம்பெற்றது.

ஆலையடிவேம்பு பிரதேச செயலகக் கேட்போர் கூடத்தில் இடம்பெற்ற இந்நிகழ்வுக்குப் பிரதம அதிதியாக அம்பாறை மாவட்டப் பாராளுமன்ற உறுப்பினர் பி.எச்.பியசேன பிரதம அதிதியாகவும், ஆலையடிவேம்பு பிரதேச செயலாளர் வி.ஜெகதீசன் கௌரவ அதிதியாகவும் கலந்து சிறப்பித்ததுடன், வாழ்வின் எழுச்சி அபிவிருத்தி பிரிவின் தலைமையக முகாமையாளர் கே.நேசராஜா, ஆலையடிவேம்பு பிரதேச வாழ்வின் எழுச்சி சமுதாய அடிப்படை வங்கிகளின் முகாமையாளர்களான கே.அசோக்குமார் மற்றும் திருமதி.கமலப்பிரபா, கிராம உத்தியோகத்தர்களுக்கான நிருவாக உத்தியோகத்தர் ஏ.தர்மதாச உட்பட வாழ்வின் எழுச்சி அபிவிருத்தி பிரிவின் உத்தியோகத்தர்களும் அதன் பயனாளிகளும் கலந்துகொண்டனர்.

இதன்போது தெரிவுசெய்யப்பட்ட ஆலையடிவேம்பு தெற்கு வாழ்வின் எழுச்சி சமுதாய அடிப்படை வங்கியின் பயனாளிகள் 16 பேருக்கும், ஆலையடிவேம்பு வடக்கு வாழ்வின் எழுச்சி சமுதாய அடிப்படை வங்கியின் பயனாளிகள் 2 பேருக்கும் அதிதிகளால் குறித்த கடனுக்கான காசோலைகள் வழங்கிவைக்கப்பட்டன.

உச்ச வயதெல்லையற்ற வகையில் வாழ்வின் எழுச்சி அபிவிருத்தித் திணைக்களத்தின் கீழ் பயன்பெறும் அனைவரும் துரிதகதியில் பிணையின்றி ஆகக்கூடியது 3 நாட்களுக்குள் பெற்றுக்கொள்ளக்கூடிய இந்நிவாரணக் கடனானது, நுகர்வுத் தேவையின் பொருட்டோ அல்லது தமது வாழ்வாதார அபிவிருத்திக் கருத்திட்டங்களின் மீதான கொடுப்பனவுகளின் பொருட்டோ அன்றேல் அவசரத் தேவை ஒன்றிற்காகவோ பெற்றுக்கொள்ளமுடிவதுடன், இரண்டு வருடத் தவணையில் ரூபாய். 5,000 தொடக்கம் 50,000 வரை வழங்கப்படும் இக்கடனுக்கு பயனாளியின் வாழ்வாதார அபிவிருத்தியின் பொருட்டு முதல் ஒருவருடகால சலுகை வழங்கப்படுவதுடன் அதன்பின்னர் சம அளவிலான தவணைகளில் குறித்த கடன் தொகையை மீளச் செலுத்தமுடியும் என்பதும் இங்கு குறிப்பிடத்தக்கது.