போட்டிப் பரீட்சைக்கான பலிக்கடாக்களாக வளர்க்கப்படும் சிறுவர்களும், அவர்களை மீட்டெடுத்தலுக்கான மாற்றுக் கல்வி முறையும்

 
(கலாநிதி. சி.ஜெயசங்கர்.)
இன்றைய சூழலில் பெரும்பாலும் மண்டபங்களுக்குள்ளும்,அறைகளுக்குள்ளும் அடைக்கப்பட்ட நிலையிலேயே கல்வி நடவடிக்கைகளும்,பொழுது போக்கு நிகழ்ச்சிகளும் அமைக்கப்பட்டு சிறுவர்கள் வளர்த்தெடுக்கப்படுவது நடைமுறையாக இருக்கின்றது.

சிறுவர்கள் அவர்களது ஊர்,ஊரவர்கள்,அவர்களது மாண்புகள்,மகிமைகள் அறியாதவர்களாக வளர்வது யதார்த்தமாக இருக்கின்றது.

தொழிற் சந்தைக்கான உழைப்புச் சக்திகளைத் தயாரிப்பது கல்வியின் நோக்கமாகத் தரந்தாழ்த்தப ;பட்டிருக்கின்றது.

சிறுவர்கள் தங்களது ஆற்றல்களைக் கண்டுபிடித்துக் கொண்டாடி மகிழ்வது சிறுவர்கள் உலகின் அடிப்படையான விடயமாகும். ஆனால் பயன் எதுவுமற்ற ஆனால் பாதகங்கள் நிறைந்த போட்டிப் பரீட்சைக்கான பலிக்கடாக்களாக வளர்க்கப்படுவது கொண்டாட்டத்திற்குரியதாகி இருக்கின்றது.

ஒரு பகுதி மக்களின் நம்பிக்கையாக இருக்கும் மிருக பலியிடுதலைக் காட்டுமிராண்டித் தனமானதாக எதிர்க்கும் மனித நேயம் கொண்டவர்கள் வேள்விக்காக வளர்க்கப்படும் மிருகங்கள் போல சிறுவர்கள் நடாத்தப்படுவதனை எதிர்க்க முடியாதவர்களாகவும்,அதைத் தவிர்க்க முடியாது என நியாயம் சொல்லுபவர்களாகவும் இருந்து வருகின்றனர்.

பரம்பொருளைத் திருப்திப்படுத்த பிள்ளைக்கறி சமைத்து நாயனார் ஆகியது போல்,பெற்ற பிள்ளைகளையே போட்டிப் பரீட்சைக் களத்தில் பலி கொடுத்துப் பெருமை கொள்வது பெரும் பண்பாடாகி இருக்கின்றது. இதைப் பண்பாட்டுப் பயங்கரவாதம் என்றும் சொல்லலாம்.

இவர்களுக்கு எவை எப்படிக் கற்பிக்கப்படுகின்றன? போட்டிப் பரீட்சைக்கென இவ்வாறு வளர்த்தெடுக்கப்படும் சிறுவர்கள் எவ்வாறு உருவாகிறார்கள்? எத்தகையதொரு சமூகம் இதனூடாக உருவாகிறது? இவை பற்றிய சிந்தனையும்,உரையாடலும் பொதுச் சமூகத்திற்குரியது.

இந்நிலையில் சிறுவர்களது ஆளுமைகள் மற்றும் ஆற்றல்களை வளர்த்தெடுப்பதற்கான சூழலாகவும் சிறுவர்களை அவர்கள் வாழும் சூழலுடனும்,அவர்களது சமூகத்துடனும் ஒன்றிணைய வைக்கும் கலைக்களமாகச் சிறுவர் கூத்தரங்கு உருவாக்கம் பெற்றிருக்கின்றது.

சிறுவர்கள் தங்களையும்,தாங்கள் வாழும் சூழலையும்,தமது சமூகத்தினரையும் விளங்கிக் கொண்டு உலகம் தழுவிய அறிவை,அனுபவத்தைப் பெற்றுக்கொள்வதற்கும்,ஆற்றல்களை வெளிப்படுத்துவதற்கும்,சவால்களை எதிர் கொள்வதற்கும்,சாதனைகளைப் புரிவதற்குமான தயார்படுத்தல்களுக்குமான ஒரு மாற்றுக் கல்வி முறையாகவே சிறுவர்களுக்கான கூத்தரங்கு அமைந்திருக்கின்றது.