பாடசாலை செல்லாத 28 மாணவர்கள் மடக்கிப்பிடிப்பு


மட்டக்களப்பு மாவட்டத்தின் ஏறாவூர்ப்பற்று செங்கலடிப் பிரதேச செயலகப் பிரிவிலுள்ள களுவன்கேணிக் கிராமத்தில் இன்று வியாழக்கிழமை (18)  மேற்கொள்ளப்பட்ட ஒருங்கிணைந்த சுற்றிவளைப்பின்போது,  பாடசாலைகளுக்குச் செல்லாமலிருந்த 28 மாணவர்கள் மடக்கிப் பிடிக்கப்பட்டதாக சமூகசேவை உத்தியோகஸ்தர் பி.ராஜ்மோகன் தெரிவித்தார்.

பாடசாலைகளுக்குச் செல்லாமல் வீணாக காலம் கழிக்கின்ற மாணவர்களை தேடிப் பிடித்து மீண்டும் பாடசாலைகளில் இணைக்கும் நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது.


இந்த 28 மாணவர்களுடன்; அவர்களின் பெற்றோர் மற்றும் பாதுகாலவர்கள் கிராம அலுவலகரின் அலுவலகத்துக்கு அழைத்துச்செல்லப்பட்டு அறிவுறுத்தப்பட்டனர்.

நாளை வெள்ளிக்கிழமையிலிருந்து (19)  பாடசாலைகளுக்கு சமூகமளிப்பதற்கான  நடவடிக்கைகளை எடுக்குமாறு இவர்கள் பணிக்கப்பட்டனர்.

இதன்போது பாடசாலை அதிபர்களும் இங்கு பிரசன்னமாகியிருந்தனர்.

இந்த அறிவுறுத்தலை ஏற்றுக்கொண்ட பெற்றோர் மற்றும் பாதுகாவலர்கள், தங்களது பிள்ளைகளை நாளையதினத்திலிருந்து பாடாலைகளுக்கு அனுப்புவதற்கு நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தனர்.

களுவன்கேணிக் கிராமத்திலுள்ள 3 பாடசாலைகளில் கற்கும் சுமார் 300 மாணவர்கள் இடைவிலகலில் உள்ளதாக கணக்கிடப்பட்டுள்ளது. அதிலும், குறிப்பாக களுவன்கேணி விவேகானந்தா வித்தியாலயத்திலிருந்து சுமார் 200 சிறுவர்கள் இன்றையதினம் (18) பாடசாலைக்குச் சமுகமளித்திருக்கவில்லை என்று  சமூக சேவை உத்தியோகஸ்தர் பி.ராஜ்மோகன் தெரிவித்தார்.

இந்த நடவடிக்கையில் ஏறாவூர் பொலிஸார், பிரதேச சிறுவர் பாதுகாப்பு உத்தியோகஸ்தர் ரீ.ஜெயசாந்தினி, சிறுவர் மேம்பாட்டு அலுவலர் ரீ.மதிராஜ், மகளிர் அபிவிருத்தி உத்தியோகஸ்தர் என்.பர்ஸானா, கிராம அலுவலர்களான கே.ராஜ்குமார், வி.உதயகுமார், பொருளாதார அபிவிருத்தி உத்தியோகஸ்தர் உள்ளிட்ட ஒருங்கிணைந்த அணி ஈடுபட்டது.