அன்றைய உறவும் இன்றைய போக்கும்

(படுவான் பாலகன்) ஆடம்பரங்கள் நிறைந்த இவ்வுலகிலே பணம், பதவி என்று தலைக்கணம் பிடித்து ஊசலாடுகின்ற சமூகத்திலே மனிதநேயங்களும் ஒழுக்கங்களும் சீர்குலைந்து சிதைந்து நிற்கின்றது. மற்றவரைப்பார்த்து சிரிக்கின்ற ஏளனம் செய்கின்ற ஏமாற்றுகின்ற சமூகமே இவ்வுலகில் நிறைவாய் நிற்கின்றது. இவ்வற்றையெல்லாம் சீர்செய்ய வேண்டிய கடமை அனைவருக்குமே உண்டு.


உறவு என்பது அழிக்க முடியாத பெரும் சொத்து என்னதான் பணம் இருந்தாலும், பதவியிருந்தாலும் உறவு ஒன்றுதான் நிலையாய் நிற்பது. இதை பணம் கொடுத்து வாங்கமுடியாது, பதவிகொடுத்து வாங்கமுடியாது இது இறைவன் கொடுத்த கொடை இன்றைய இயந்திர உலகில் இயந்திரங்களின் வேகத்திற்கு மனிதர்களும் ஈடுகொடுக்க வேண்டியவர்களாக இருக்கின்றார்கள் அதனால் வீடுகளில் இருந்து உறவுகளுடன் உறவாடி மகிழ்ந்த அன்றைய நினைவுகள், நிஜங்கள் இன்று நிம்மதியற்றுப் போயிருக்கின்றது.

பழைய நினைவுகளையும் சுவாரசியங்களையும் சொல்லி குதூகலமாய் இருந்தவர்கள் இன்று மனதிற்குள்ளே பல சஞ்சலங்களையும், உள்ளக்குமுறல்களையும் வைத்து வெளிக்காட்ட முடியாதவர்களையாய் இருக்கின்றார்கள்.

மரநிழலின் கீழிலிருந்து நாட்டுப்பாடல்களைப்பாடி, உணவுஉண்டு,
களைப்பாறி, கதைசொல்லி, பிள்ளைகளுடன் சந்தோசப்பொழுதை கழித்தவர்கள் இன்று வேலைசெய்யும் இடங்களில் இருந்து கொண்டு தங்களின் துயரத்தை அழுகுரலில் பாடுகின்றார்கள்.

குடும்பத்தில் பிள்ளைக்கு தெரியாது தந்தையின் முகம் அந்தளவுக்கு சமூதாயம் மாறி இருக்கின்றது. காரணம் பிள்ளை எழும்புவதற்கு முன் தந்தை வேலைக்கு சென்றுவிடுவார். தந்தை வீட்டுக்கு வருகின்ற வேளை குழந்தை நித்திரை செய்துவிடுவார் இதுதான் இன்றைய நிலை இதனால் பிள்ளை தந்தைக்கு இடையேயான பாசப்பிணைப்பு இல்லாமல் போகின்றது. இதனால் காலப்போக்கில் தந்தையாக பார்க்கவேண்டியவரை மாமனைப்பார்ப்பதை போன்று வெட்கித்து நின்று பார்க்கின்றனர். தந்தையிடம் ஏதும் கேட்க வேண்டும் என்று நினைத்தால் அதை தாயிடம் சொல்லி கேட்கின்றான் இந்நிலைமைகள் மாற வேண்டும். இந்நிலைமைகள் தொடர்ச்சியாக செல்கின்ற போது தற்போது எம்மத்தியில் தலைவிரித்து ஆடுகின்ற பல துஸ்பிரயோகங்களும் தொடர்ச்சியாக இடம்பெற்றே செல்லும் குறிப்பாக தந்தை பிள்ளையை துஸ்பிரயோகம் செய்தல் , பிள்ளை தாயை துஸ்பிரயோகம் செய்தல் என்று எண்ணிடங்காத பிரச்சினைகள் இன்று நாளுக்கு நாள் அதிகரித்தே செல்கின்றது. சிறந்த பாசப்பிணைப்புக்கள் இருந்திருந்தால் இப்பிரச்சினைகள் ஏற்பட்டிருக்காது.

அன்று பிள்ளைக்கு ஒரு பிரச்சினை என்றால் பெற்றோரிடம் பகிர்ந்து கொள்ளும் அப்போ அந்த பிள்ளைக்கு மனதில் நிம்மதி கிடைக்கும் இன்று அதை பகிர்ந்து கொள்வதற்கு வீட்டில் யாரும் இல்லை இதனால் தொடர்ச்சியாக அதை பற்றி சிந்திக்கின்ற போது பிழையான முடிவுகளை எடுப்பதற்கு அந்த பிள்ளைக்கு தோன்றுகின்றது. அதுதான் இன்று எம்மத்தியில் இடம்பெறுகின்ற தற்கொலைகள். அன்னையும், பிதாவும் முன்னெறி தெய்வம் என்ற ஆன்றோர் வாக்கு இன்று தாயும், தந்தையையும் அந்நியனாக பார்க்கின்றனர். இதற்கும் காரணம் சிறந்த உறவு அங்கு பேணப்படவில்லை.
வீட்டில் உணவு உண்பதாக இருந்தால் குடும்பத்தில் அனைவரும் ஒன்று சேர்ந்திருந்து அக்காலத்தில் உணவு உட்கொள்வர் இன்று எத்தனை குடும்பத்தில் ஒரு நேரமாவது அனைவரும் இருந்து உணவு உண்கின்றனர் என்று பார்த்தால் ஒன்றும் கிடையாது. ஏன்? உலகத்தோடு போட்டியிட வேண்டும் அதற்காக நேரமில்லை என்று கூறுவர்.

அன்று வீட்டில் ஏதும் நிகழ்வு என்று சொன்னால் சொந்தங்கள் எல்லாம் ஒன்று சேர்ந்துவிடும் 02,03நாட்களுக்கு முன்னே. அப்போ அனைவரும் ஆடிப்பாடி ஆனந்தமாய் இருந்து ஆறுதல் அடைவார்கள் எந்த கஸ்டங்கள் இருந்தாலும் அவை மறந்து விடும் ஆனால் இன்று வீட்டில் ஓர் நிகழ்வென்றால் கூலிக்கு வேலை செய்ய யாரோ ஒருவன் வந்துநிற்பான். சொந்தங்கள் எல்லாம் தூரத்தவர் போன்று வந்து செல்வர், சிலர் வருவதுமில்லை காரணம் உறவுகள் தேவையில்லை உழைப்பு மட்டுமே போதுமென்று நினைக்கின்றனர்.

பெற்றோர் குழந்தையை சிறுவயதில் இருந்தே தொட்டு அரவணைத்து வளர்க்க வேண்டும் தாயானவள் தனது குழந்தையை மார்போடு அணைத்து முத்தமிட்டு கொஞ்சி உறவாட வேண்டும், தந்தை குழந்தையை மடியில் இருத்தி தோளில் இட்டு வளர்க்க வேண்டும் இதுதான் பிள்ளையின் ஆழ்மனதில் சிறந்த பாசப்பிணைப்பாக பதியும். இன்று பார்த்தால் தங்கள் பிள்ளையை எத்தனை பெற்றோர்கள் இவ்வாறு வளர்கின்றார்கள் என்றால் ஒரு சிலர் மட்டுமே மற்றையவர்கள் வேலைக்காக ஒருவரை அமர்த்தி அவரை பார்க்க சொல்கின்றனர். இதனால் பெற்றோருக்கும் பிள்ளைக்குமான உறவு நெருக்கடையுமா என்று பார்த்தால் இல்லை விரிசலே அடையும். இதனாலையே பிள்ளைகள் உளரீதியாக பாதிப்படைகின்றனர்.

இன்றைய வேகமான உலகத்தில் பிள்ளைகளுடன் பாசத்தைப் பகிர்ந்து கொள்வதற்கு எத்தனை பெற்றோர்கள் தங்களது நேரங்களை ஒதுக்கியுள்ளார்கள் என்று கேட்டால் மிகக்குறைவு. ஆகவே  உலகிற்கு ஏற்றவகையில் நாமும் ஓடவேண்டி உள்ளதுதான் அதற்காக எமக்கு பின்னால் வருகின்றவர்களை விட்டு விட்டு ஓட முடியாது அவர்களையும் ஒழுங்காக கொண்டு செல்ல வேண்டும். அரைகுறையாக கொண்டு செல்லக் கூடாது. அதற்காக பிள்ளைகளுக்காக ஒரு நேரத்தை ஒதுக்கி அவர்களிடம் உங்களது பாசத்தை அவர்களது அன்பை பகிர்ந்து கொள்ளுங்கள் அதுதான் பிள்ளையினுடைய எதிர்காலம் அந்த எதிர்காலத்தை நிலைநாட்ட வேண்டியது ஒவ்வொருவர் கடமை அதற்காக அற்பணியுங்கள். அப்போதுதான் நாம் அனைவரும் எண்ணுகின்ற கனவுகாணுகின்ற உண்மை உலகத்தை நிலைநாட்ட முடியும்.