சுவிஸ் உதயம் மற்றும் ஏடு அமைப்பினால் பல்கலைக்கழக மாணவர்களுக்கான நிதி உதவி!

(எம்.ஏ.றமீஸ்)
சுவிஸ் உதயம் அமைப்பின் அனுசரணையில் ஏடு அமைப்பினால் மேற்கொள்ளப்பட்டு வரும் வருமானம் குறைந்த பல்கலைக்கழக மாணவர்களுக்கான நிதி உதவி வழங்கும் நிகழ்வு நேற்று(23) களுவாஞ்சிகுடியில் இடம்பெற்றது.

கிழக்கு உதயம் அமைப்பின் தலைவரும் பிரதிக் கல்விப் பணிப்பாளருமான எம்.விமலநாதன் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வின்போது கிழக்கு உதயம் அமைப்பின் செயலாளரும் கோட்டக் கல்விப் பணிப்பாளருமான பி.பாலச்சந்திரன் உள்ளிட்ட முக்கியஸ்தர்கள் கலந்து கொண்டனர்.

இதன்போது வருமானம் குறைந்த 53 பல்கலைக்கழக மாணவர்களின் கல்வி நடவடிக்கைகளை மேம்படுத்தும் நோக்கில் ஏடு அமைப்பினால் மேற்கொள்ளப்பட்டு வரும் செயற்பாட்டிற்கென சுவிஸ் உதயத்தின் மூலம் ரூபா மூன்று இலட்சத்திற்கான காசோலைகள் வழங்கி வைக்கப்பட்டதுடன், திருக்கோவில் பிரதேசத்தில் குறைந்த வருமானத்தைக் கொண்ட பாடசாலை மாணவர்களுக்கான நிதி உதவிக் காசோலைகளும் இதன்போது வழங்கி வைக்கப்பட்டன.

மாணவர்களுக்கான கல்வி நடவடிக்கைகளுக்காக பல்வேறுபட்ட உதவிகளை மேற்கொண்டு வரும் சுவிஸ் உதயம் அமைப்பின் பொருளார் கே.துரைநாயகத்தினை தொடர்பு கொண்டு கேட்டபோது இதுபற்றி அவர் கருத்துத் தெரிவிக்கையில், எமது சுவிஸ் உதயம் அமைப்பு நமது மக்களுக்கு பல்வேறான உதவிகளை மேற்கொள்ளும் வகையில் ஆரம்பிக்கப்பட்டதாகும். இதன்மூலம் பல்லாயிரக் கணக்கான மாணவர்களும் மக்களும் பயன் பெற்று வருகின்றனர்.

தம்மிடம் பல்வேறான திறமைகளை வைத்துக் கொண்டு வாழ்வில் முன்னேற முடியாமல் அல்லல் பட்டுக் கொண்டிருக்கும் மாணவர்களை இனங்கண்டு அவர்களையும் சமுதாய நீரோட்டத்தில் இணைத்து வெற்றியடையச் செய்யும் வழிமுறைகளை எமது அமைப்பு மேற்கொண்டு வருகின்றது.

வாழ்வின் அடிமட்டத்திலிருந்த எத்தனையோபேர் வரலாறுகள் கூறுமளவிற்கு தமது பெயர்களை நிலைபெறச் செய்யவில்லையா? இவ்வாறான சம்பவங்களை தம் வாழ்வில் முன்நிறுத்தி மாணவர்கள் முன்னேற முயற்சிக்க வேண்டும். வறுமையினை காரணம் காட்டி கல்வியினை கைவிடும் மாணவர்களின் வாழ்வில் ஒளியேற்றும் செயற்பாடுகளை நாம் பல ஆண்டுகளாக செய்து வருகின்றோம். கல்வி கற்றவருக்கு சென்ற இடமெல்லாம் சிறப்பிருக்கின்றது. மாணவர்கள் சிறந்த முறையில் கற்று வாழ்வில் வளம் பெறும் வகையில் எமது சேவையும் தொடர்ந்து கொண்டே இருக்கும் என்றார்.