ஆலையடிவேம்பில் வலது குறைந்தோருக்கான உதவிகள், உபகரணங்கள் வழங்கிவைப்பு

(உ.உதயகாந்த்)

கிழக்கு மாகாண சமுக சேவைகள் திணைக்களத்தின் வலது குறைந்தோருக்கான உதவி உபகரணங்கள் வழங்கும் திட்டத்தின்கீழ் ஆலையடிவேம்பு பிரதேசத்தில் விசேட தேவைக்குட்பட்டோருக்கு சக்கர நாற்காலிகள், ஊன்றுகோல்கள் மற்றும் வீடமைப்பு நிதியுதவிகள் என்பன வழங்கும் நிகழ்வுகள் இன்று, 01-10-2014 புதன்கிழமை காலை ஆலையடிவேம்பு பிரதேச செயலகத்தில் இடம்பெற்றன.

ஆலையடிவேம்பு பிரதேச செயலக சமுக சேவைகள் பிரிவால் ஏற்பாடு செய்யப்பட்ட இந்நிகழ்வின்போது விசேட தேவையுடையோராக இனங்காணப்பட்ட அக்கரைப்பற்று – 7/2 கிராமசேவகர் பிரிவைச் சேர்ந்த எஸ்.தவராசா, கோளாவில் – 2 கிராமசேவகர் பிரிவைச் சேர்ந்த ஓ.வள்ளியம்மை ஆகியோருக்குச் சக்கர நாற்காலிகளும், பனங்காடு கிராமத்தைச் சேர்ந்த பி.தயாழன், கவடாப்பிட்டி கிராமத்தைச் சேர்ந்த எஸ்.பத்மநாதன் ஆகியோருக்கு ஊன்றுகோல்களும் ஆலையடிவேம்பு பிரதேச செயலாளர் வி.ஜெகதீசனால் அன்பளிப்பாக வழங்கிவைக்கப்பட்டன.

இவ்வைபவத்தில் சமுக சேவைகள் உத்தியோகத்தர் எஸ்.எம்.எம்.அமீன் தலைமையில் அப்பிரிவு உத்தியோகத்தர்களும், குறித்த கிராமசேவகர் பிரிவுகளுக்கான கிராம உத்தியோகத்தர்களும் கலந்துகொண்டனர்.

அடுத்து, மஹிந்த சிந்தனை அபிவிருத்தி வேலைத்திட்டத்தின்கீழ் சமுகசேவைகள் அமைச்சின் அங்கவீனர்களுக்கான தேசிய செயலகத்தினால் வலது குறைந்தோருக்கான வீடமைப்பு நிதியுதவிகள் வழங்கும் வேலைத்திட்டத்தின் அடிப்படையில் ஆலையடிவேம்பு பிரதேசத்திலுள்ள கண்ணகிகிராமம் – 1 இனைச் சேர்ந்த சசிகலா யோகேஸ்வரன் என்ற பயனாளிக்கு அவரது இல்லத்தின் இரண்டாம் கட்ட மிகுதி நிர்மாணிப்பு வேலைகளுக்கான காசோலை வழங்கும் வைபவம் இடம்பெற்றது. இதன்போது பிரதேச செயலாளர் வி.ஜெகதீசனால் குறித்த காசோலை பயனாளியிடம் கையளிக்கப்பட்டது. இவரது வீட்டின் முதலாம் கட்ட வேலைகளுக்கான காசோலை கடந்த 31-07-2014 அன்று இதேபோன்றதொரு நிகழ்வில் வழங்கப்பட்டிருந்தமையும் இங்கு குறிப்பிடத்தக்கது.