இரண்டு நாட்களாக தரைவழிபோக்குவரத்துக்கு தடை - கிரான் பாலத்தின்மேலாக வெள்ள நீர்

(சித்தாண்டி நித்தி) மட்டக்களப்பு மாவட்டத்தில் பெய்துவரும் மழையினால் கிரான்புல் ஆற்று நீர் உயர்வடைந்ததின் காரணமாக கிரான் பாலத்தினூடான தரை வழி போக்குவரத்து இரண்டு நாட்களாக தடைப்பட்டுள்ளது. 

கிரான் தெற்கு பிரதேச செயலக பிரிவுக்குட்ப்பட்ட பேருளாவெளி, கோராவெளி, புலாக்காடு, முறுத்தாணை, குலாவாடி போன்ற கிராம சேவகர் பிரிவுகளில் வசிக்கும் மக்களின் தரை வழி போக்குவரத்து முற்றாக தடைப்பட்டுள்ளது. 

பாலத்தின் மேலாக வெள்ள நீர் மட்டம் உயர்வடைந்ததினால் கிரான் பிரதேச செயலக அனர்த்த முகாமைத்துவப் பிரிவு மற்றும் கிரான் இராணுவப் பிரிவும் இணைந்து படகுச் சேவையை நேற்றிலிருந்து (23) தொடர்ந்து நடாத்திவருகின்றனர். 

இப்படகுச் சேவையூடாக கிரான் பிரதேச செயலகத்துக்குச் செல்லும் உத்தியோகத்தர் தொடக்கம் போக்குவரத்து தடைப்பட்டு இருக்கும் பொதுமக்களை  ஏற்றி இறக்கும் பணிகள் நடைபெற்றுக்கொண்டிருக்கின்றது. 

இதேவேளை சந்தனமடு ஆற்று நீர் மட்டம் உயர்வடைந்ததினால் சித்தாண்டியை அண்மித்த வயல்வெளி பிரதேசம் முற்றாக வெள்ளநீர் நிரம்பிக் காணப்படுவதையும் படங்களில் காணலாம்.