மீன்பாடும் தேன் நாட்டில் முப்பது வருடகாலம் மீன் பாடவில்லை! மட்டக்களப்பில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்க்ஷே

(எஸ்.சதீஸ் & சிவம் )
'நீங்கள் இந்த நாட்டை கட்டி எழுப்ப கடந்த ஜனாதிபதி தேர்தலில் என்னை தெரிவு செய்தீர்கள். அதற்காக உங்கள் எண்ணம் வீண் போகவில்லை. மீன்பாடும் தேன் நாட்டில் முப்பது வருடகாலம் மீன் பாடவில்லை. அந்த இருண்ட யுகம் இப்போது இல்லை. இனிமேலும் இல்லை'.

என மட்டக்களப்பு இந்துக் கல்லூரி மைதானத்தில் இன்று 19ம் திகதி இடம்பெற்ற கூட்டத்தில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சே தெரிவித்தார்.

இதன்போது அவர் தமிழில் தொடர்நது பேசுகையில்,

'தற்போதும் உங்கள் மாவட்டத்திலும் அபிவிருத்திப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதனை நான் சொல்ல வேண்டியதில்லை. அது உங்கள் எல்லோருக்கும் நன்றாகத் தெரியும். இதே வேகத்தில் போனால் உங்கள் பிரதேசமும் இந்த நாடும் இன்னும் இன்னும் முன்னேறும்.

அன்பர்களே, நாம் எப்போதும் சொன்னதை செய்தோம். செய்வதை சொல்வோம். எமது தேசம் இன்னும் இன்னும் முன்னேற வேன்டும், நீங்களும் முன்னேற வேன்டும், உங்கள் பிள்ளைகளும் முன்னேற வேன்டும்,பொய் பிரச்சாரங்களை நம்பவேன்டாம் குறுகிய அரசியல் நோக்கம் ஒருநாளும் வேன்டாம். நாம் குறுகிய காலத்தில் செய்த அபிவிருத்தி வேலைகள் எந்தவொரு காலத்திலும் இடம்பெறவில்லை.

விவசாயிகளுக்கு மானிய உரம் வழங்கியுள்ளோம். பாதைகள்,மின்சாரம், பாலங்கள்,கல்வி,நீர்வசதி, சுகாதாரம், மீன்பிடி, சுயதொழில் போன்ற பல்வேறு அபிவிருத்தி பணிகளுக்கு  உயர்வடையச் செய்துள்ளோம்.

உங்கள் பிள்ளைகள் உள்நாட்டிலும் வௌிநாட்டிலும் நல்ல பெயர் வாங்க வேன்டும். அதுதான் எனது ஆசை.

அன்பர்களே, எமது தேசம் இன்னும் இன்னும் முன்னேற வேன்டும்,ஆசியாவின் அதிசய நாடாக மாறவேன்டும், நாம் எல்லோரும் ஒன்றுபடுவோம், புதிய யுகம் காண்போம்'.

என தெரிவித்தார்.

இதன்போது மீள் குடியேற்றப் பிரதியமைச்சர் விநாயகமூர்த்தி முரளிதரன், கிழக்கு மாகாண சபையின் முன்னாள் முதலமைச்சர் சிவனேசதுரை சந்திரகாந்தன், முன்னாள் அமைச்சர் ஏ.எச்.எம்.அஸ்வர், ஸ்ரீ லங்கா சுதந்திரக்கட்சியின் மட்டக்களப்பு , கல்குடா, பட்டிருப்பு அமைப்பாளர்கள், ஏறாவூர் நகரசபை தலைவர் அலிஸாகிர் மௌலானா உட்பட பலர் கலந்துகொண்டனர்.