கிழக்கு பல்கலைகழக மாணவர்கள் பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து கவனயீர்ப்பு போராட்டத்தில்

(சித்தாண்டி நித்தி) கிழக்குப் பல்கலைக்கழக மாணவர்கள் பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து  30.01.2015 பிற்பகல் கவனயீர்ப்புப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

மட்டக்களப்பு வந்தாறுமூலை வளாகத்திற்கு முன்பாக இந்த கவனயீர்ப்புப் போராட்டம் நடைபெற்றது. 

கிழக்குப் பல்கலைக் கழக நிருவாகத்தில் மாணவர் அடக்குமுறை நிறுத்தப்பட்டு அனைத்து மாணவர்களுக்கும் விடுதி வசதிகள் வழங்கப்படவேண்டும் என்பது மாணவர்களது கோரிக்கைகளில் அடங்கியுள்ளன. 

இதேவேளை, நாட்டில் தற்போது ஏற்பட்டுள்ள ஆட்சிமாற்றத்தினையடுத்து உபவேந்தர் பதவியை பிழையான வழியில் கைப்பற்ற நினைக்கும் சில விரிவுரையாளர்கள் மாணவர்களைத் தூண்டிவிடுவதனாலேயே இக்கவனயீர்ப்புப் போராட்டம் நடைபெற்றதாக கிழக்குப் பல்கலைக் கழக உபவேந்தர் கலாநிதி கிட்ணன் கோபிந்தராஜா தெரிவித்தார்.

மாணவர்கள் பிரதான வீதியோரம் தமது கோரிக்கைகள் குறிக்கப்பட்ட பதாதைகளை ஏந்தி போராட்டத்தில் ஈடுபட்டனர். நிறுத்து நிறுத்து கொமிசன் வாங்குவதை நிறுத்து, வேண்டாம் வேண்டாம் ஊழல் வசதிகள் பேரவையில் வேண்டாம்.

ஊழல் மோசடிகளை விசாரிக்கும் ஆணைக்குழு கிழக்குப் பல்கலைக் கழகத்திலும் தமது நடவடிக்கைகளை முன்னெடுக்கவேண்டும் என்றும் மாணவர்கள் கேட்டுள்ளனர்.  

கிழக்குப் பல்கலைக் கழக உபவேந்தர் கலாநிதி கிட்ணன் கோபிந்தராஜா கருத்துத் தெரிவிக்கையில்;

மாணவர்கள் எந்தவொரு கோரிக்கை தொடர்பாகவும் தமக்கு அறிவிக்கவில்லை. எனினும் எங்குமில்லாதவாறு அனைத்து மாணவர்களுக்கும் கிழக்குப் பல்கலைக் கழகத்தில் விடுதி வசதிகள் செய்யப்பட்டுள்ளன. மேலதிகமான மாணவர்களுக்கு பஸ் வண்டிக்கான பருவகால சீட்டுப் பெற்றுக்கொடுத்துள்ளோம். ஊழல் மோசடி குறித்த ஆணைக்குழு நியமிக்கப்படுவதை தாம் வரவேற்பதாகவும் குறிப்பிட்டார்.