கொக்கட்டிச்சோலை படுகொலை நிகழ்வை தடுக்க பொலீசார் முயற்சித்தனர்! பா.அரியநேத்திரன்

(தீரன்)
கொக்கட்டிச்சோலை கலாச்சார மண்டபத்தில் நடைபெற்ற 28வது படுகொலை நிகழ்வை தடுப்பதற்கு பொலீசார் நீதிமன்றம் ஊடாக முயற்சித்தனர் என்று தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் பா.அரியநேத்திரன் தெரிவித்துள்ளார்.

இன்று மட்டக்களப்பு காந்தி பூங்காவில் நடைபெற்ற காணாமல் போனவர்களின் ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்டு உறையாற்றுகையிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

அவர் அங்கு மேலும் கூறுகையில்

தமிழ் மக்களுக்கு சுதந்திரம் கிடைத்து விட்டதாக யாரும் நினைத்துக் கொள்ள  கூடாது. ஆட்சி மாற்றம் நடைபெற்றுள்ள இந்த காலகட்டத்தில் அண்மையில் பட்டிப்பலையில் கொக்கட்டிச்சோலை படுகொலை நிகழ்வை நடாத்தியிருந்தோம்   பலர் நினைத்துக்கொண்டு இருக்கின்றனர் அந்த நிகழ்வு மிகவும் சுதந்திரமாக நடைபெற்றதாக ஆனால் அந்த நிகழ்வை தடுத்து நிறுத்துவதற்கு தடை உத்தரவை தருமாறு பொலீசார் மாவட்ட நீதிமன்றத்தில் முறைப்பாடு ஒன்றை செய்திருந்தனர்.

அப்போது நீதிபதி அவர்கள் கொக்கட்டிச்சோலை படுகொலை நிகழ்வு நடைபெறுவதில் உங்களுக்க என்ன பிரச்சினை என்று கேட்டுள்ளார் அதற்கு மக்களை திரட்டி அந்த நிகழ்வை நடத்தும்போது மக்களுக்கு பல இடையூறுகள் வரும் எனவே அதனை தடுத்து நிறுத்த தடையுத்தரவு தாருங்கள் என பொலீசார்
கேட்டுள்ளனர்.

ஆனால் நீங்கள் கூறும் காரணத்தை ஏற்று தடையுத்தரவு தரமுடியாது கடந்த காலங்களிலும் இவ்வாறான தடையுத்தரவுகள் கொடுக்கப்பட்ட படியால் நீதிமன்ற நடவடிக்கைகள் குறித்து கூட்டமைப்பினர் பல விமர்சனங்களை முன்வைத்திருந்தனர் எனவே தடையுத்தரவு தரமுடியாது எனக் கூறியுள்ளார்.

நான் ஏன் இதை கூறுகின்றேன் என்றால் சிலர் நினைக்கின்றனர் ஜனாதிபதி மாறிவிட்டார் இனிமேல் எல்லாம் செய்யலாம் என்று ஆனால் அப்படியல்ல இந்த நிகழ்வில் கூட புலனாய்வாளர்கள் படம்பிடித்துக் கொண்டிருக்கின்றனர். இந்த நிலை மாறவேண்டும் எங்களது மக்கள் தங்களது பிரச்சினைகள் சம்பந்தமாக சுதந்திரமாக போராடவேண்டும் என்பதற்காகவே ஆட்சி மாற்றத்திற்காக வாக்களித்துள்ளனர்.

கடந்த காலங்களில் மகிந்த ராஜபக்ச அரசாங்கம் தமிழ் மக்களுக்கு எதிராக இது போன்ற அடக்குமுறைகளில் ஈடுபட்டதனாலேயே தமிழ் மக்கள் மைத்திரிபாலவிற்கு வாக்களித்து ஜனாதிபதியாக ஆக்கினர் என்தை புரிந்துகொண்டு புதிய அரசு செயற்படவேண்டும் எனக் கூறினார்.